Thursday, July 8, 2021

பற்றற்று செயலாற்றுதல் இயலுமா? (Pattathu Seyalatrudal lyaluma?

மூலம்: கே.எஸ். ராஜகோபாலன்
தமிழாக்கன்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

ஒரு முதிய துறவியும் இளவயது துறவியும் ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களுக்குரிய தினசரி கடமைகளில் ஆழ்ந்திருந்தனர். அவர்களின் கண்ணெதிரிலேயே ஒரு இளம்பெண் ஆற்றில் தவறி  விழுந்தாள். அவளுக்கு நீச்சல் தெரியாததால் உதவிக்காக கூவினாள். துறவிகள்

அவள் கூக்குரலை கேட்டனர். துறவிகளின் விதிப்படி பெண்ணை தொடுதல் கூடாது என்பதால் வயதில் மூத்த துறவி அவளுக்கு உதவுவதை தவிர்த்தார். எனினும் இளையதுறவி நீரில் குதித்து அவளை தோளில் சுமந்துவந்து காப்பாற்றி  பாதுகாப்பான இடத்தில் விட்டார். பின் தன் பணிகளை தடையின்றி தொடர்ந்தார். இவை அனைத்தையும் கண்ட முதிய துறவி மிகுந்த சினம் கொண்டார். ஆயினும் கோபத்தை அடக்கி மௌனம் சாதித்தார். இருவருக்கிடையில் மூன்று நாட்கள்வரை மௌனமே நிலவியது. முடிவில் முதியவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. "நீ அவளை சுமந்து வந்திருக்க கூடாது" என்று உரக்க கூறினார். இளையவர் ஏறிட்டு நோக்கி நிதானமாக மென்மையான குரலில் "யார் இன்னமும் அவளை சுமந்து கொண்டிருப்பது? நான் அவளை மூன்று நாட்களுக்கு முன்பே என் தோள்களிலிருந்து இறக்கி விட்டேன்'  என்றார். முதியவர் உடனே உணர்ந்து கொண்டார். தான்தான் அப்பெண்ணை மூன்று தினங்களாக மனதில் சுமந்திருக்கிறேன் என்பது புரிந்தது.

         உயர்ந்த மனிதர்களின் மனநிலையை அவர்களின் வெளி விவகாரங்களை  கண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது. மற்றவர்களை போலவே அவர்களும் சாதாரண செயல்களில் ஈடுபட்டிருப்பது போல் தோன்றினும் உலக விஷயங்களில் பற்றற்று இருக்கலாம். உதாரணத்திற்கு  நீச்சல் நன்கு அறிந்த ஒருவனும், நீச்சல் பழகாத ஒருவனும் தண்ணீரில் இறங்கும் போது பார்ப்பவருக்கு ஒரே விதமாக காணலாம். ஆனால் இரண்டாமவன் நீரில் மூழ்க வாய்ப்புள்ள போது முதலாமவன் எளிதாக நீரிலிருந்து வெளியேற இயலும்.

      ஸ்ரீரங்கமஹாகுரு ஒருவர் வாழ்க்கையின் நிகழ்வுகளை எவ்வாறு அணுக வேண்டுமென்று இச்சொற்றொடர் மூலம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் :- "பத்மபத்ரமிவாம்பஸா" "தாமரை இலை தண்ணீர்போல்" தாமரைஇலையின் மேற்புரம் எண்ணெய் பசை போல் உள்ளதால் அது தண்ணீரிலேயே இருப்பினும் தண்ணீர் அதில்  ஒட்டுவதில்லை. அத்தகைய பொருள் வடமொழியில் ஸ்நேஹம்(sneha)எனப்படும். அது நட்பு எனவும் பொருள்படும். அவ்வாறான ஸ்நேஹத்தை இறைவனுடன் வளர்த்துக் கொள்பவர்கள் உலக விஷயங்களில் மூழ்கி உள்ளது போல் காணப்பட்டாலும் பற்றற்று இருப்பர்.

          பாரதீயர்களின் பரம்பரையில் இறைவனை உணர்தலே இறுதியான நோக்கம். எனவே அனைத்து செயல்களையும் இறைநினைவுடனேயே தொடங்க வேண்டும் என்பது பழக்கம். எங்கும் இறைவனின் நினைவுடன் செயலாற்றும் பழக்கம் பற்றற்று செயலாற்ற துணை புரிகிறது. ஸ்ரீ பகவத்கீதையில் க்ருஷ்ணர் கௌரவர்களுக்கு எதிராக தர்ம யுத்தத்தில் ஈடுபட நேரிட்ட அர்ஜுனனை எப்போதும் அவர் நினைவுடன் போர்பரியும்படி அறிவுறுத்துகிறார்.
      உலக வாழ்க்கையில் எல்லா அவசியமான செயல்களையும் ஈடுபாட்டுடன் செய்தல் அவசியம். ஆனால் நாம் இறைவனுடன் நட்பை வளர்த்துக் கொண்டால் நாம் சாதாரண செயல்களில் ஈடுபட்டாலும் அதுவே நம்மை பற்றிலிருந்து விடுவிக்கும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.