Thursday, September 23, 2021

அனைத்து உயிரிடத்தும் இரக்கம் கருணை (Anaitthu Uyiridatthum Irakkam-Karunai)

மூலம்வித்வான் நரசிம்ஹ பட்டா 

தமிழாக்கம்வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




வடமொழியில் தயை என்னும் சொல்லிற்கு இணையாக க்ருபை, அனுகம்பம், காருண்யம், க்ருணா(Gruna)  எனும் சொற்கள்  வழக்கில் உள்ளன. செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் முதலானவற்றிற்கும் நம்மை போன்றே, அவை விரும்பியவாறு வாழும் உரிமை உண்டு. அவற்றின் சுதந்திரத்தை பறிக்க நமக்கு உரிமை இல்லை. அவை அச்சமின்றி வாழ வேண்டும். அவ்வாறாயின் சுற்றுசூழல் அமைப்பில் சமநிலை ஏற்படும். படைப்பனைத்தும் இணக்கமாக வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக வேண்டுமெனும் உணர்வே தயை-அன்பு எனப்படும். இத்தகு உணர்வு நமக்கு உண்டாயின் மற்றவர்க்கு துன்பம் கொடுக்கவும், கொடுமை செய்யவும், வற்புறுத்தவும்  மனம் இடம்கொடாது. துன்பத்தில் உள்ளபோது நம்மை நாம் காத்துக்கொள்ள விரும்புவது  போலவே, மற்றவர்கள் துன்பத்தில்  உள்ளபோது அவர்களை காக்கவேண்டும். இவ்வுணர்வு தானாகவே ஏற்படுதல் அனுகம்பம் -கருணை எனப்படும். நாம் துன்புறுத்தபடுகையில் உணரும் வலியையே மற்ற உயிரினங்கள் துன்புறுகையிலும் உணர்ந்து நம் இதயம் உருகும். இத்தகைய மனநிலையே தயை எனப்படும். நாம் இறைவனின், பெரியோர்களின் கருணையை வேண்டுகின்றோம். இவ்வுணர்வின் வெளிப்பாடு வன்முறையற்ற மனப்பான்மை. வன்முறையற்றவர்களை சூழ்ந்திருப்பவரிடத்து பகைமை இல்லை. "ஒருவன்  வன்முறையற்றவனாயின் அவன் சுற்றமும் பகையின்றிருக்கும் என்பது பதஞ்ஜலி முனிவரின் கூற்று. பண்டைய முனிவர்களின் குடியிருப்புகள் அவ்வாறே விளங்கின. முனிவர்களின் இருப்பும், பழக்க வழக்கங்களும், வழிபாடுகளும் இயற்கையாகவே பகையுணர்ச்சி கொண்ட விலங்குகளிடமும் பகையை நீக்கின.

 

          தண்டனை - இதுவும் ஒருவித அன்பின்/கருணையின்  வெளிப்பாடே

தீயவர்களை தண்டிப்பதும் "கருணை கூர்ந்த தண்டனை" என கூறலாம். தீமைக்கு கருணை காட்டுதல் பரிந்துரைக்கப்படவில்லை. மற்றவர்களை துன்புறுத்துபவர்களிடம் பெருந்தன்மை காட்டுதல் கூடாது. மற்றவரின் வீட்டையும் இதயத்தையும் கொளுத்துபவரையும், நஞ்ஜளிப்பவரையும், ஆயுத பலத்தால் மற்றவரின் நிலத்தை அபகரிப்பவரையும், செல்வத்தையும் பெண்களையும் கவர்ந்து செல்வோரையும் ஒருபோதும் பெருந்தன்மையான  மனதுடன் நடத்தக்கூடாது. இத்தகையோரை விசாரணை இன்றியே கொல்லலாம் என்பதை தயை என அறிவுடைய பெரியோர் கூறுவர். இத்தகு பாதக செயலை தடுப்பது சமூகத்திற்கு காட்டும் இரக்கம். "தீமையை அழிக்கும் இறைவனின் செயலும் கருணையே" என ஸ்ரீரங்க மஹாகுரு கூறுவார். கவி காளிதாஸன் தன் ரகுவம்சத்தில் ஸ்ரீ ராமன் அரக்கி தாடகையை பெண் என்றும் பாராமல் கொல்வதை  இவ்வாறு வர்ணிக்கிறார்: "ராமன் இரக்கத்துடன் அம்பு செலுத்தினார்".

        

 ஜீமூத வாஹனனின் இரக்கம் :

 ஹர்ஷன் எழுதிய நாகாநந்தா எனும் நாடகம் இரக்கம் - கருணாரஸத்திற்கு சீரிய உதாரணம். ஜீமூதவாஹனன் ஓய்வெடுக்க கடற்கரைக்கு சென்றான். அங்கு அநேக அரவங்களின் எலும்புகளை கண்டு தன் நண்பன் மித்ராவஸுவிடம் அது குறித்து வினவுகிறான். நண்பன் கருடனுக்கும் அரவங்களுக கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை குறித்து கூறுகிறான். அதன்படி கருடனுக்கு உணவாக தினமும் ஒரு பாம்பை அளிக்க வேண்டும். அதை செவிமடுத்த ஜீமூதவாஹனன் மிகவும் இரக்கம கொண்டு தன் உடலையே கருடனுக்கு உணவாக அளித்து பாம்புகளை காப்பாற்ற தீர்மானித்தான். ஒரு வயதான பாம்பின் ஒரே வாரிசான  சங்கசூடனுக்கு பதிலாக பலிகொடுக்கும் பாறைக்கு சென்றான். தன் உடல் தின்னப்படும்போதும் மகிழ்ச்சியான முக பாவத்துடன் இருந்த ஜீமூதவாஹனனைக்கண்டு  கருடன் மிகவும் வியப்படைந்தான். பின் துர்காதேவி தோன்றி புனிதநீரை தெளித்து ஜீமூதவாஹனனை மீண்டும் உயிர்த்தெழ செய்கிறாள். கருடன் தானே தேவருலகிலிருந்து அமுதத்தை கொணர்ந்து அனைத்து அரவங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறான். ஜீமுதவாஹனனுக்கு  அனைத்து உயிரினங்களிடத்தும் இருந்த இரக்கத்தை விளக்கும் புகழ் பெற்ற கதை இதுவாகும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.