Thursday, September 30, 2021

சமையற்கூடமும் அடுப்பும் (Samaiyal Kudamum Aduppum)

மூலம்: தாரோடி சுரேஷ்

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




    ஒரு இயந்திரம் சரியான முறையில் இயங்க வேண்டுமெனில் சிறியதாயினும் மரைகளும் ஆணிகளும் பொருத்தமாக இருத்தல் அவசியம். இயந்திரத்தின் அனைத்து பாகங்களும் குறையின்றி இருந்தால் மட்டுமே சரியாக இயங்கும். அது போன்றே நம் பண்டைய ரிஷிகள் அனைத்து நுட்பமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு சமையல்கலையை விரிவாக வகுத்துள்ளனர்.


       சமையல் அறை எங்கு அமைய வேண்டும் என்ற அவர்களின் கருத்தை ஆராய்கையிலேயே அவர்களின் தொலைநோக்கு விளங்கும். சமையல் அறை பூஜை அறையை ஒட்டியே அமைதல் வேண்டும். சமையல் நிறைவுற்றதும் முதலில் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டுமன்றோ? எனவே உணவு தயாரானதும் முதலில் பூஜையறையை அடைய வேண்டும், நம் உணவு கூடத்தை அல்ல. உணவு இறைவனுக்கு படைக்கப்பட்டு ப்ரசாதமாக மாறிய பின்னரே அது உணவு கூடத்தை அடைய வேண்டும்.


          மேலும் அடுப்பு சமையல் அறையின் தென்கிழக்கில் இருத்தல் வேண்டுமென்ற விதி உள்ளது. அடுப்பு எத்திசையில் இருப்பினும் சமைப்பதில் தடையில்லை.  ஆயின் தென்கிழக்கு அக்னி பகவானின் ஆற்றல் பெருகும் இடம். இயற்கையையும், அதன் நுண்ணிய தத்துவங்களையும் அறிந்தவர் மட்டுமே இவ்வாறு திட்டமிட இயலும். இதன் பின்னணியில் அடுப்பு சமையல் அறையின்  தென்கிழக்கு மூலையில் அமைதல் நன்று.  இவ்வாறாயின் இயல்பாகவே அக்னி பகவானின் கருணை பெருகும். தீயை எதிரில் காணும்போதும் நம் எண்ணம்  அதன் மூலரூபமான அக்னிதேவனின்பால் செல்ல  எந்த இடையூறும் ஏற்பாடாது. இதில் மனதை  ஸ்தூலத்திலிருந்து சூக்ஷ்மத்திற்கு  அழைத்துச்செல்லும்  திறனும் பொதிந்துள்ளது. 


               அடுப்பு வடிவமைக்கப்பட்ட முறையிலும் நம் முனிவர்களின் நிபுணத்வத்தை அறியலாம். இத்தகைய அடுப்பை இக்காலத்தில் காண்பது அரிது. பின்புறம் ஒன்றும்  முன்னிலையில் இரண்டுமாக மேடான(குப்பிகள் போன்ற)  பாகங்கள் கொண்டு முக்கோணம் போன்று காணப்படும். இக்காலத்திலும் அதிகமான நபர்களுக்கான சமையலின்போது பின்புறம் ஒன்றும் முன்புறத்தில் இரண்டுமாக கற்களை வைத்து சமைக்கும் பழக்கம் உள்ளது. இத்தகைய அமைப்பில் பாத்திரங்களை வைத்து இக்காலத்தில் எளிதாக சமைக்கலாம். ஆனால் அதன் உட் பொருள் ஸ்ரீரங்கமஹாகுருவின் மூலம் இவ்வாறு விவரிக்கப்படுகிறது.


        படைப்பின் ஆதியில் பரம்பொருளானது  ஒரு பிந்து-புள்ளியாக காட்சியளிக்கிறது.  அதுவே பரம்பொருளின் வடிவம். அப்பரம்பொருள் தான் விரிவடையும்  பொருட்டு தன்னை   புருஷன்-ப்ரக்ருதி என மற்றும் இரண்டாக பிரித்துக்கொள்கிறது. இம்மூன்று மேடுகளை காண்கையில் படைப்பின் மூலத்திலுள்ள பரம்பொருளையும் அவன் விரிவடைதலையும்  நினைவு கூர்கிறோம். ஜீவன் தனது மூலத்தை மறவாத வண்ணம் ஆன்மீக உட்பொருளுடன் அடுப்பினை வடிவமைத்த ரிஷிகளின் அறிவு கூர்மை உண்மையில் வியப்பிற்குரியது.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.