Thursday, September 16, 2021

ஞானிகள் தந்த அடையாளங்கள் (Jnanigal Tanda Adaiyalangal)

மூலம்: டா.மோஹன்  ராகவன்
தமிழாக்கம்: ஸி. ஆர்.  ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ராமப்பாசாரி ப்ரசித்தி பெற்ற சிற்பக் கலைஞர்களின் பரம்பரையில் பிறந்த கைதேர்ந்த சிற்பி. ஆனால் அவனுடைய கலைக்கும், அறிவாற்றலுக்கும் உரிய புகழும், பரிசுகளும் கிடைக்கவில்லை. ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்தான். அந்நாட்டின் அரசர் ஒரு முறை   அயல் நாடுகள் மீது படையெடுத்து வெற்றியுடன் திரும்பினார். அதனால் நன்றியுணர்ச்சியுடன்,  தன் நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெரிய ஆலயத்தை  நிர்மிக்க 
நிச்சயித்தார்.  அதற்காக, மிகவும் பிரபலமான சிற்பிகளைத்  தேட வேண்டுமென்று  ஒரு போட்டியை நிறுவினார். மிக மிக  அழகுள்ளதாகவும் ஆலய சிற்பக் கலையடங்கியதாகவும் உள்ள விஷ்ணுவின் சிலையை வடிப்பவருக்கு  ஆலயத்தின் மாபெரும் வேலையின் தலைமைப் பொறுப்பை  வழங்குவதாக அறிவிப்பு விடுத்தார். இதைக் கேட்டு  ராமப்பனுக்கு  மிக்க சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயின. சிற்பம் செதுக்கும் வேலையை உடனே  ஆரம்பித்தான். இரவும் பகலும் உழைத்து, பக்தி சிரத்தையுடன்  தன் இஷ்ட தெய்வமான  நான்கு திருக் கைகளுடன்  கூடிய விஷ்ணுவின் சிற்பத்தை செதுக்க ஆரம்பித்தான். அதே ஊரில் வாழ்ந்த  மாதாசாரியும் 

அம்மாபெரும் போட்டியில் பங்கேற்க தயாரானான். சில மாதங்கள் சென்ற பின் இருவரும்  தத்தம் சிலைகளை தலைநகரத்தில்  காட்சிப் பொருளாக்கினார்கள். மற்றும் பல போட்டியாளர்கள் இருந்தாலும் இவ்விருவருடைய சிற்பங்களின் அழகு எடுப்பாயிருந்ததால் அரசர் மற்றும் குலகுருக்களின் மனதை ஈர்த்தன. குலகுருக்களோடு ஆலோசித்த அரசர், இவ்விருவரின் சிற்பங்களை தலைநகரின் முக்கியமான நாற்சந்தியில்  காட்சிப் பொருளாக வைக்குமாறு  கட்டளையிட்டார். அனைத்து நகரவாசிகள் மற்றும் பெரியவர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டு போட்டியின் முடிவை வெளியிடுவதாக அறிவித்தார். மறுநாள் ராமப்பன்,  மாதப்பன், மற்றும் மற்ற சிற்பிகள்யாருடைய சிற்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது  என்று அறியும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் ராஜ பாட்டைக்குச் சென்றார்கள். அங்கு விமரிசையாக இவ்விருவரின் சிலைகள் உயரமான இடத்தில் அமர்த்தப்பட்டிருந்தன. இருவருடைய ஆனந்தமும் உச்ச கட்டத்தை  அடைந்தது. ஆனால் அருகில் சென்று பார்த்தபொழுது  அவர்களின் இதயம் நொறுங்கும் காட்சி! அவர்களுடைய அற்புதமான சிலைகளுக்கு அடியில் ஆஸ்தான சிற்பியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த  ஆஸ்தான சிற்பி குதர்க்கமான வினயத்துடன் மக்களின் புகழ்ச்சியையும் வணக்கங்களையும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.  இது  ஆஸ்தான சிற்பியின் சூழ்ச்சி என்று இவர்கள் அறிந்தனர். ராமப்பன் ஆச்சரியமடைந்தாலும், எவ்வித ஒட்டுதலுமில்லாமல் கண்களில் நீர் வழிய  அருகிலிருந்த  ஒரு துளசி தளத்தை பக்தியுடன் தன் விஷ்ணு சிலையின் திருவடிக்கு அர்ப்பணித்து விடை கொடுத்து அங்கிருந்து நடந்துவிட்டான். இருவரும் இரவு ஒரு மடத்தில் தங்கி மறுநாள் தங்கள் கிராமத்திற்கு திரும்ப நிச்சயித்தார்கள். ஆனால் மாதப்பனின் மனதில் கோபத்தின் சூறாவளி வீசிக்கொண்டிருந்தது. கபடமான ஆஸ்தான சிற்பிக்கு பாடம் கற்பிக்கவேண்டுமென்று  தீர்மானித்தான். இரவின் இருளில்  ராஜவீதியில் வைக்கப்பட்டிருந்த  சிலைகளை  நெருங்கினான். உளியினால் அடித்து அந்த சிற்பங்களின் நீண்ட மூக்குகளை விகாரப்படுத்திவிட்டு  யாரும் அறியாவண்ணம் திரும்பி விட்டான். மறுநாள் விடியும் பொழுதே ராமப்பன் தன் கிராமத்திற்கு சென்றான். ஆனால் மாதப்பன் சிற்ப கண்காட்சிக்கருகில் சென்று மக்கள் கூட்டத்திற்கு இடையில் நின்றான். அரசர் போட்டியின் தீர்ப்பை அறிவிக்க வந்தார். அரசரின் தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அரசரின்  சேவகர்கள் ராமப்பனை பல்லக்கில் அமர்த்தி அழைத்து வந்தனர். அவனுக்கு பரிசளித்து ஆலயம் கட்டும் பணிக்கு அவனை முக்கிய சிற்பியாக நியமித்து, ஆஸ்தான சிற்பிக்கு வேலையிலிருந்து ஓய்வளிக்கப்பட்டது. மாதப்பனை எச்சரித்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் சிற்பங்களின் கீழ் ஆஸ்தான சிற்பியின் பெயரை பொறிக்கவைத்ததும் அரசரே என்பது தெரிய  வந்தது. ராஜகுருக்களோடு ஆலோசனை நடத்தி ஏற்படுத்திய, நேர்மை மற்றும் பக்தியின் பரீட்சையாய் அது இருந்தது. இப்பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ராமப்பனோவெனில் தன் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான்! 
                 
சிற்பக் கலை பாரதத்தின் மிக அற்புதமான கலைகளில் ஒன்றாகும். சிற்பம் வடிக்கும் திறமை பல தேசங்களில் கண்டுவந்தாலும், பாரதத்தில் இந்த சிற்ப சாஸ்திரம் வளர்ந்து வந்த  பின்னணி, காரணம் மற்றும் மனோதர்மம் மிக  விசேஷமானவையாகும். சிற்பியை சிருஷ்டிக்கு மூல கர்த்தாவான பிரமனுக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். தேவசிற்பியின் பெயரே 'விச்வகர்மா'. சிற்பியானவன் பிரமனைப் போல் கல்லின் மீதோ அல்லது மரத்தின் மீதோ தன்னுடையதே ஆன ஒரு உலகை படைக்க வல்லவன். ஆனால்  அவன் உருவாக்கும் உலகம் எது? இங்கு 'சிற்பம் என்னும் சொல்லே  'ஸமாதி' என்னும் அர்த்தத்தை பறை சாற்றுகின்றது. ரிஷிகளும், ஞானிகளும் தமக்குள்ளே கண்ட தேவர்களின் உருவங்களை அவ்வாறே சிற்பங்களில் காணுமாறு செய்தால்,  அந்த சிற்பிகள், ஞானிகளின் ஸமாதி ஸாம்ராஜ்யத்தையும், இறை உலகத்தின் விஷயங்களையும் இவ்வுலகில் படைத்த விச்வகர்மாவாகின்றான். சிற்பியின் இந்த படைப்பு வேலை  நடக்க வேண்டுமென்றால் விதி முறைகளின் கட்டுப்பாடு தேவை. பிரம்மாவிற்கும்  விதி முறைகள் இல்லாமல் இல்லை. அகில உலகின் தாய் தந்தையர்களாகிய லக்ஷ்மீ-நாராயணர்களின்  ஆணைப்படி பணி புரிய வேண்டும். 
    
இத்தகைய விதி முறைகள் யாரோ ஒருவருடைய  விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அல்ல. இவை  பிரமனுடைய படைப்பில் இயற்கையாகவே உள்ளவையாகும். படைப்பு ஆக வேண்டுமென்றால் விதை, முளை, மரம், கிளை, பூ, காய், பழம் முதலிய வெவ்வேறு படிகளை அடைந்து, பழத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த விதையே மறுபடியும் காணப்படுகிறது. அவ்வாறே ஒரு சிற்பத்தின் விதையானது ஞானிகளின் த்யான ஸாம்ராஜ்யத்தில் உள்ளது. அது முளை விடுவது சிற்பியின் அமுதமென்னும் கைகளினால். உள் தரிசனத்தின் தேவதா உருவங்களின் லட்சணங்கள், முகத்தின் பாவனைகள் அவ்வாறே கல்லில் பதிவாக வேண்டும். அதாவது முளை மரமாகி வளர்ந்து உள் அனுபவத்தின்  பிம்பமாக தேவதா மூர்த்தியின் உருவத்தைப் பெறுகிறது. தெய்வச் சிலையின் அளவுகள், அவைகள் நிற்கும் தன்மை, அங்க வளைவுகள், ஆழமான பார்வை,  கையில் உள்ள ஆயுதங்கள்,  இவை எல்லாம் தரிசிப்பவர்களுடைய மனதை உள் நோக்கி ஈர்க்கும் சாதனங்கள் ஆகின்றன. விளக்கொளியில் அதன் தரிசனம், சங்கு, மணி முதலியவைகளின் ஒலி, துளசி மற்றும் நல்ல மணமுள்ள பூக்களின்  நறுமணம் நம் இதயத்தில் இனிமையையும், குளிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. ஞானிகளின் இதயத்திலிருந்து முளைத்த அனுபவமென்னும் விதையிலிருந்து வளர்ந்த மரத்தின் பலன் என்னவென்றால், பக்தர்களின் இதயத்தில் உண்டாகும் குளிர்ச்சி. இவ்வளவும் நடந்து முடிந்தால் ஒரு வட்டம் முழுமையடைந்தது போன்றதாகும். 
           
 இவ்வட்டம் முழுமையடைய வேண்டுமென்றால், சிற்பத்திற்கு  அதற்கு  தகுந்த மனோதர்மம் இருக்க  வேண்டும். மேற்கூறிய கதையில் ராஜகுருவின் தலைமையில்  அரசர் பரம ஆனந்த அனுபவமான விதையின் விவசாயத்தையே செய்துகொண்டிருந்தார். தேவதைகளின் உருவங்கள் சரியான பிரதி பிம்பங்களாக வேண்டுமென்றால் கலைத் திறன் கண்டிப்பாக மிகவும் அவசியம். ஆனால் பயிரை விளைபவன் களையையும் சேர்த்து விளைந்தால் அது அபாயகரமாகிவிடும். காமம், க்ரோதம், பொறாமை, புகழின் மேல் விருப்பம் முதலியவை கலையின் வளர்ச்சிக்கு தடையான களைகள். ஆஸ்தான சிற்பிக்கு சிலைகளுக்கு அடியில் தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப்  பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டாலும், சிறிதும் தயக்கமில்லாமல் மக்களின் கர ஒலியை ஏற்று மகிழ்ந்தான். இது ஒரு கோணத்தில் திருட்டுத் தனமேயாகும். இத்தகைய செயல்கள் ரிஷிகளின் மன நிலைக்கு எதிரானவை. மாதப்பனோ  பொறாமைக்கு  வசப்பட்டு  தன்னுடையதேயான படைப்பை நாசம் செய்ய தயாரானான். மாதப்பன் செதுக்கிய சிலை  ஞானிகளின் இதயத்தில்  தோன்றிய சிற்பமல்ல. அது அவனுடைய புகழாசைக்கு ஒரு கருவியாயிருந்தது. ஆகவே தான் , தனக்குப் புகழ் கிட்டாது என்று அறிந்த பொழுது அந்த சிலை அவனுக்கு வெறும் கல்லைப் போல் காட்சியளித்தது. ஆனால் ராமப்பனுக்கு அந்த சிலை பவித்திரமான தேவதையின் உண்மையான தோற்றமே ஆகியிருந்தது. அவனுக்கு அநியாயம் ஏற்பட்டபோதிலும்  அச்சிலையின் தெய்வத்தன்மை அவன் கண்களிலிருந்து மறையவில்லை.  அதை அவன் என்றும் கல்லாக உணரவில்லை. தன் முன்னோரிடமிருந்து தான் கற்ற கலையின் பயனால் படைத்த தன் இஷ்ட தெய்வம் என்றே உணர்ந்தான். ஒரு துளசி தளத்தை சமர்ப்பித்து  தன் இஷ்ட தெய்வத்திற்கும், தன் முன்னோர்களுக்கும், விச்வகர்மாவிற்கும், பிரமனுக்கும் சேர வேண்டிய காணிக்கையை அளித்து விட்டான். சாந்திக்கும் நிம்மதிக்கும் வீடாக  அமைய வேண்டிய சிலையை வடிப்பதற்கு   அன்பு, பக்தி, மன நிம்மதி இவற்றினாலேயே சாத்தியம்.             

தேவதைகளின் விக்ரஹங்களைப்  பார்க்கும் முறையைப் பற்றி ஸ்ரீரங்கமஹாகுருவின் கருத்து இவ்வாறிருந்தது:-  ஞானிகள் ஆத்ம யோகத்தில் கண்ட ஸத்தியத்தை  சிலா யோகத்தில் சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் பொம்மைகளை வைத்துக்கொண்டு  விளையாடும்பொழுது, அவைகளின் பொம்மை உருவத்தை மறந்து, 'இது தாய், இது குழந்தை' என்றே  நினைத்துக்கொள்கின்றன. தேவதைகளின் சிலைகள், ஞானிகள் நமக்காக  விட்டுச் சென்ற  பொம்மைகள் போன்றனவாம். இவைகளை வைத்துக்கொண்டு விளையாடும்போதெல்லாம்  அதன் பின்னணியில் உள்ள  அழியாத்தன்மை நம் இதயங்களில், மனங்களிலும் நிறைந்திருக்க வேண்டும். 

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.