Friday, December 18, 2020

சாஸ்திரங்கள் நமக்கு ஏன் தேவை? (Shastirangal namakku en tevai?)

மூலம்: சுமுகா ஹெப்பார்
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in) 


  
     
பரந்து, விரிந்து ஆழ்ந்த  பெருங் கடல். அதன்மீது பயணிகள் நிறைந்த அழகான ஒரு படகு கரையை நோக்கி அலைகளின் ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப அசைந்தாடிய படி முன்னோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென கடலின் சீற்றம் அதிகரிக்கத்தொடங்கியது. நிதானமாக இருந்த அலைகளின் ஆரவாரம் அதிகமாயிற்று. புயலின் அடையாளங்கள் காணத் தொடங்கின. இதனால் பயணிகளிடம்  பதட்டம் கண்டு ஒருவித பீதி சூழ்ந்தது. இதை அறிந்து படகோட்டிகள் அவர்களுக்கு தைரியமளித்து "யாரும் பயப்படத் தேவையில்லை. நாம் கூறும் விதிமுறைகளை     கடைபிடித்து அவரவர்களின் இருக்கையில் அமர்ந்தால் நீங்கள் பாதுகாப்பாக கரை சேரலாம்" என சமாதானம் கூறினார்கள்.

இவ்வாறு விவரமாக கூறிய பின்பும் சில பயணிகள் படகோட்டிகளின் உத்தரவை மீறி நடந்ததால் இயற்கையின் சீற்றத்திற்கு ஆட்பட்டு கடலில் அடித்து செல்லப் பட்டனர். ஆனால் படகோட்டியின் கட்டளைக்கு இணங்கி   ஒரு சிறுவன் மட்டும் நிம்மதியாக தன் இருக்கையில் தைரியமாக அமர்ந்திருந்தது. பாதுகாப்பாக கரை சேர்ந்த பின் ஒரு பயணி அச்சிறுவனிடம்ஆச்சரியமுடன் வினவினான்."நீ எவ்வாறுஅவ்வளவு தைரியமாக இருந்தாய்? உனக்கு பயமாகவில்லையா?" அதற்கு அச்சிறுவன் "படகோட்டி என் தந்தை, அவர் பாதுகாப்பாக என்னை கரை சேர்ப்பார் எனும் முழு நம்பிக்கை எனக்கிருந்ததால் எந்தவித பயமும் இல்லை" என்றான்.

வாழ்க்கையில் படகோட்டியின் கட்டளைகளை போன்ற பல கட்டுப்பாடுகளை நாம் சந்திக்கிறோம். உண்மையே பேசு, பொய் உரைக்காதே முதலிய விதிமுறைகளை சாஸ்திரங்கள் நமக்கு கூறுகின்றன. .இது எந்த பயணத்தை குறிக்கிறது?  இதன் பொருள் என்ன?.இந்த நம் வாழ்க்கையே பயணம், அதில் நாம் பயணிகள். ஸம்சாரம் எனும் பயங்கர கடலை கடந்து பிறப்பு, இறப்பிலிருந்து விடுபட்டு வீடு பேறு அடைவதே நாம் சேர வேண்டிய கரை. நம் பாரதத்தின் மகரிஷிகளே தேர்ச்சி பெற்ற படகோட்டிகள். அவர்கள் தர்மம் மற்றும் மோட்சத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். காமம், க்ரோதம் லோபம்,மோகம்,மதம்,மாத்சர்யம் முதலிய ஆறு விதமான அலைகளின் நடுவே நம்மை நிலையாக தர்மத்தில் நிலை நிறுத்தும் விதிமுறைகளே சாஸ்திரங்கள் எனப்படும். அப்பதமே கூறுவது--"சாஸநாத் த்ராணநாத் சைவ சாஸ்த்ரமித்யபிதீயதே" என்றால் எந்த விதிமுறைக்கு  உட்பட்டால் நாம் காக்கப்படுவோமோ அதுவே சாஸ்திரம். படகோட்டியின் கட்டளை போன்று சான்றோரின்  நல்மொழி. மகரிஷிகளின் சாஸ்திரத்தில் சிறுவனை போன்று முழு நம்பிக்கை வைத்து நம் வாழ்க்கையை நடத்தினால் நாமும் பத்திரமாக கரை சேரலாம். இல்லையேல் இயற்கையின் வேகத்தில் சிக்கி வழி தவறுவது உறுதி. படைத்தல், காத்தல், அழித்தல் என்பது எதுவரை உள்ளதோ அதுவரை ச்ருஷ்டி வித்தையின் ரகசியத்தை உட்கொண்ட வேத சாஸ்திரங்களும் நித்யமானவை எனும் ஸ்ரீ ரங்கமஹாகுருவின்  கூற்றை நினைவு கூறலாம். மகரிஷிகள் வழிகாட்டிய சாஸ்திரத்தை அனுசரித்த வாழ்க்கை முறை நம்முடையதாகட்டும் என நிச்சயித்து அவ்வாறே வாழ்வோமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.