மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
"நாம் அனைவரும் இத்தகு காட்சிகளை தினந்தோறும் காண்கிறோம். ஆனால் நாம் ஏன் புத்தனாக மாறுவதில்லை?" என மேன்மை மிகு ஸ்ரீரங்க மஹாகுரு கேட்டார். இந்நிகழ்வுகளே மனிதனின் வாழ்வில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமெனில் ஏன் அனைவரின் வாழ்விலும் நிகழ்வதில்லை எனும் கேள்வி நியாயமானதே. நம் அனைவருக்கும் நாம் அறியாத கடந்த காலம் ஒன்றுண்டு. ஒரு மின்விளக்கு ஒளியூட்ட வேண்டுமெனில் பல்பு(bulb), சொடுக்கி(switch) மற்றும் இணைப்பு மட்டும் போதாது. இவை அனைத்தும் இருப்பினும் அவ்விணைப்பில் மின்சாரம் பாயாவிட்டால் மின்விளக்கு ஒளிராது. இத்தகு முன்னேற்பாடுகளின்றி ஸ்விட்சை எவ்வாறு கையாண்டாலும் மின்விளக்கிற்கு ஒளியூட்ட இயலாது. சித்தார்த்தனின் முற்பிறவியின் கர்மவினைகள் அவனது உள்மனத்தை பக்குவப்படுத்தியிருந்தன. ஆகவே அவன் கண்ட அம்மூன்று நிகழ்வுகளும் புத்தனாவதற்கு தேவையான வழியில் செல்ல மன உந்துதலை அளித்தன. நமக்கு அதற்கு தேவையான தகுதி(ஸம்ஸ்காரம்) இல்லாவிடில் அத்தகு காட்சி நம்மில் சிறிதளவே பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல ஸம்ஸ்காரங்களை உடைய மனிதன் சாமானியனிடமிருந்து மிகவும் வேறுபட்டவன். நாம் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை பெற்றிருந்தாலும் அதன் திறமையை அறியவில்லை. நாம் இவ்வுடலை புலனின்பத்தை பெற மட்டுமே பயன்படுத்துகிறோம். ஞானிகளின் கூற்று யாதெனில் நம்முள் யோகநிலைக்கான சில மையபுள்ளிகள் உண்டு. அவை தூண்டப்படும்போது, புலன்களால் அடையும் இன்பத்தைக்காட்டிலும் பல கோடி மடங்கு அதிக இன்பத்தை அடையலாம். முனிவர்கள் கடும் தவத்தால் அத்தகைய யோகநிலையின் மையங்களை திறந்து உடல் எனும் இவ்வியந்திரத்தின் அனைத்து பகுதிகளையும், தன்மையையும் உணர்ந்து அதன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தினர். இத்தகைய முன்னேற்பாடு மற்றும் பயிற்சியால் மட்டுமே இவ்வுடலின் முழுமையான தகுதி மற்றும் இயற்கையை உணர இயலும். இல்லாவிடில் யானையை குறித்து விளக்கிய குருடர்களுக்கு ஒப்பாவோம். நாம் வெகு காலமாக, பல பிறவிகளாக யோகநிலைகளை பயன்படுத்தாதிருக்கிறோம். வெகு காலமாக பயன்படுத்தாத பொருள் துருபிடிப்பது போன்று நம் யோகமையங்களும் துரு பிடித்திருக்கின்றன. துருவை நீக்கி தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே உடலால் பெறும் உண்மையான இன்பத்தை பெற இயலும்.
இத்தகு நிலைக்கு தயார் செய்யும் உந்துதலை நமக்கு அருளும்படி எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம். சித்தார்த்தன் புத்தனாக மாறியது போல் வாழ்வின் உயரிய நிலையை நாமும் அடைய விரும்புவோம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.
To know more about Astanga Yoga Vijnana Mandiram (AYVM) please visit our Official Website, Facebook and Twitter pages