Thursday, December 24, 2020

பண்பட்ட மனம் எனும் சிறந்த கருவி(the great tool called cultured mind)

மூலம்: தாரோடி சுரேஶ் 
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



நம் மனமே நம் வாழ்வை  ஆள்கிறது(வழி நடத்துகிறது). அதன் வழியில் நாம்  இழுக்கப்படுகின்றோம். அது எப்போதுமே சரியானது  என கூற இயலாது. பண்பட்ட மனமானது ஒருவரை நிம்மதியான, அமைதியான வாழ்கைக்கு வழிநடத்தும். இல்லாவிடில் துன்பம்தான்.  பாரதத்தின் கலாசாரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது எனில் தூயமனம், உணவு, பேச்சு, கேளிக்கை, வணிகம், கொடுக்கல், வாங்கல் போன்றவை அனைத்தையும்  கட்டுப்படுத்தும் வண்ணம்  அமைந்துள்ளது.

இரு நண்பர்கள் சிறிது காலம் ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். அநேக இடங்களுக்குப்பின் புனிதமான திருப்பதியை அடைந்தனர். சிறு முயற்சியுடன்  ஏழு மலைகளை ஏறினால் உன்னதமான, கம்பீரமான ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஸன்னிதியை அடையலாம். மலையடிவாரத்தில் உள்ள திருப்பதியும் மிகவும் அழகானது. ஆன்மீக இன்பத்துடன் புலன்களுக்கும் இன்பமளிக்கும் வண்ணம் உள்ளது.   நண்பர்களில்  ஒருவன் கோவிலுக்கு செல்லும் சிரமத்திற்கு பதில் நாவிற்கு சுவையான விருந்துண்டு, கண்ணிற்கினிய காட்சிகளை கண்டு மகிழ விரும்பினான். எனவே ஒருவன் மலை உச்சியில் உள்ள இறைவனை தரிசிக்க சென்றான், மற்றவன் சுற்றுலாவிற்கு சென்றான். காலப்போக்கில் இருவரும் மரணமடைந்தனர். அவர்கள் வியக்கும் வண்ணம்,  இறைவனை தரிசிக்க  மலையேறி சென்றவன் யம கிங்கரர்களால் நரகத்திற்கு இழுத்து செல்லப்பட்டான். மற்றொருவனை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர். இது என்ன நியாயம் என்பது நியாயமான கேள்வியே. ஆழ்ந்து ஆராய்ந்தால் அதன் மர்மம் விளங்கும்.

நகரத்தை சுற்றி பார்த்து மகிழ சென்றவன் தன் தவறை உணர்ந்து, இறைவனை தரிசிக்க செல்லவில்லையே  என மனம் வருந்தியவாறிருந்தான். அவன் மனம் இறைவனைக்குறித்த எண்ணத்திலேயே மூழ்கியிருந்தது. மற்றவன் சிரமப்பட்டு மலை ஏறினாலும் அவன் மனம் தன் நண்பன் என்ன செய்கிறான் என்றே எண்ணியது. தானும் நண்பனுடன் சென்று நகர இன்பங்களை கண்டு களித்திருக்கலாம் என எண்ணியவாறு இருந்தான். அவர்களின்  உடல் மட்டும் தாங்கள் விரும்பிய இடத்தில் இருப்பினும் மனம் வேறெங்கோ இருந்தது. முடிவில் ஒருவன் நரகத்திற்கும் மற்றவன் சொர்க்கத்திற்கும்  சென்றனர்.

நம் செயல்களின் பலனான நன்மை-தீமை(பாவம்-புண்ணியம்) என்பவை நம் மனம் எங்கெங்கு  உலவுகிறதோ அதைப்பொறுத்தே அமையும். "மோக்ஷத்திற்கும், ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவதற்கும் நம் மனமே காரணம்" என்பது கற்றறிந்த ஆன்றோர் வாக்கு. மனதை தூய்மைபடுத்த நம் முனிவர்கள் 16 வகையான ஸம்ஸ்காரம் எனப்படும் விதிமுறைகளை நம் வாழ்வில் புகுத்தினர்.  ஞானிகள் அழிவற்ற இலக்கியங்கள், இதிகாஸங்கள், புராண கதைகள், குருகுலங்களில் சிறந்த கல்வி, பயிற்சி முறை இவற்றின் மூலம் நம் எண்ணங்களை  பதப்படுத்தியுள்ளனர்.  இத்தகு எண்ணங்களை ப்ரதிபலிக்கும் வண்ணம் நம் பழக்கங்கள், அன்றாட வாழ்க்கைமுறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், நம் நடை-உடை இவற்றை உயரிய முறையில் ஒருங்கிணைத்து நம் நாகரிகம் மற்றும் கலாசாரத்தை உருவாக்கினர். வால்மீகி முனிவர் அமைதியான ஸரயூ நதியின் நீரோட்டத்தை இறைஉணர்வில் மூழ்கியுள்ள ஒருவரின் சாந்தமான  மனநிலையுடன் ஒப்பிடுகிறார். (ஸன்மனுஷ்ய மனோ யதா) இதுவே மனத்தூய்மையால் பெறும் வரமாகும். "காட்டு யானையை பயிற்சி பெற்ற யானைகள் அடக்குவது போன்று இறை உணர்வில் மூழ்கியுள்ள ஞானிகளின் உடனாட்டம் நம் மனதை கட்டுப்படுத்தி தூய்மைபடுத்தும்" என மகிமை பொருந்திய ஸ்ரீ ஸ்ரீரங்க மஹாகுரு கூறினார். ஞானிகளுடன் பழகுதல் நம் மனதை படைப்பின் மூலத்திலுள்ள இறையின்பத்தை நுகர உதவும்படி  பதப்படுத்துகிறது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.