Thursday, October 20, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் - 30 திறந்த மனம் இருக்கட்டும் (Tiranda manam irukkattum)


மூலம்: . சாயாபதி

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



  இறைவன் இல்லை என்பவன் நாத்திகன். எதற்காக அவ்வாறு கூறுகிறான்? அவனுடைய  அறிவிற்கு புலப்படாமையால் அவ்வாறு கூறுகிறான்.  "அறிவிற்கு புலப்படாத ஒன்றை உள்ளது என்று நம்புவது எவ்வாறு? அவ்வாறு நம்புவதால்தான் என்ன பயன்? புரியாததை உண்மை என்று நம்பி  குழம்புவதைவிடவும்  அறிவிற்கு எட்டியதை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்."  "உலகில் இன்பம் தரும் கணக்கற்ற பொருட்கள் நிறைந்துள்ளன. அவற்றை அனுபவிக்கும் திறனும் நமக்கு உண்டு. ஆகவே சிந்தனை ஏன்? கடன்வாங்கு, நெய் உண். புதரில் உள்ள இரண்டு பறவைகளைக் காட்டிலும் கையில் உள்ள ஒரு பறவை உயர்ந்ததல்லவா? அறியாத ஒன்றிற்காக ஏங்கி தவித்து அறிந்ததையும்  கைவிட்டால் வாழ்வு வீணாகுமன்றோ?  எனவே நாளைக்காக இன்றைய நாளை வீணாக்க வேண்டாம்."


      இத்தகைய விவாதம் யாரைத்தான் மகிழ்விக்காது? கண்ணிற்கு காண்பதை நம்பி கொண்டாடுவதில் என்ன தவறு? உலக விஷயங்களில் நம் அறிவிற்கு தாமாகவே எட்டும் பாகம் எத்துணை? ஆராய்ந்து அறிய வேண்டியவை  எத்துணை? என ஆராயும்போது ஆய்வினால் அறிவிற்கு எட்டுபவையே  அதிகம் என்பதை அறிவியல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாறிருக்கையில்  "காண்பது  மட்டுமே உண்மை, காணாதது  இல்லவே இல்லை என்னும் மனநிலை ஆராயும்இயல்பையே தடைசெய்யுமல்லவா? அறிவிற்கு எட்டாத உண்மை வெளிப்படும் போதும் அதனை ஏற்காத எதிர்ப்பு மனப்பான்மை உண்டாகுமல்லவா? இது மனித குலத்திற்கு உரிய இயல்பான மகிழ்ச்சியையும்,, இயற்கையில் மறைந்துள்ள  உண்மைகளை ஆய்ந்தறிவதையும்  தடுக்கும்  செயலல்லவா? எனவே அறிந்ததை மட்டுமே நம்புகிறேன், அவ்வளவிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் என்பது புதிய பார்வையின் வாயிலை  அடைக்கின்றதல்லவா! இத்தகு மனநிலை சரியன்று.


அவ்வாறின்றி 'அறிந்ததை நம்புவோம், ஆராய்ந்து உணர்ந்ததை மட்டும் வரவேற்போம். திறந்தமனம் இருக்கட்டும். அறிவிற்கு புலப்படாதவைபற்றிய ஐயங்களை வைத்துக்கொள்வோம். அறிந்தபோது ஒப்புக்கொள்வோம்' - என்னும் எண்ணத்தினால் கேடில்லை. உண்மையை அறிய சரியான பாதையில்  முயலும்போது  உண்மை தன் நிலையை தானே வெளிப்படுத்தும். அத்தகைய உண்மையை ஏற்கதயாராகி, ஐயங்களை  போக்கிக்கொள்ளும்  நாத்திகத்தால் தீதில்லை. அதைவிடுத்து புத்தியில்  எதிர்ப்பு தன்மையே இருப்பின்  அங்கு புதிய வளர்ச்சிக்கு இடமில்லை.