மூலம்: திரு சாயாபதி
தமிழாக்கம்: திருமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
போய் வருகிறேன், வருகிறேன்___வீட்டிலிருந்து வெளியில் செல்பவர் கூறும் வார்த்தை இது. தினமும் செய்யும் வேலையாக இருக்கலாம், வேறு வேலைகளாக இருக்கலாம் அன்றி வேலை நிமித்தமாக வெளியூர் பயணமாகவும் இருக்கலாம். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்பவர் "போகிறேன்," எனகூற வேண்டுமே தவிர வருகிறேன், போய் வருகிறேன் என்பது எவ்வாறு பொருந்தும்? எனும் வினா மனதில் தோன்றுவது ஆச்சரியமல்ல. முதன்முதலில் இவ்வாறு தோன்றிய போதும் பல தடவை கேட்டு பழகிவிட்டால் இது ஒரு வழக்கம் என விட்டு விடலாம்.
எவ்வாறு வந்தது இவ்வழக்கம? இதில் ஏதாவது அர்த்தமுள்ளதா என மனதில் தோன்றுவதில் தவறேதுமில்லை.
வீடு என்பது தன்னுடைய நிம்மதி மற்றும் சுகத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட ஓர் இடம். அங்கிருந்து வெளியில் கிளம்பும் போது எங்கு சென்றாலும் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனும் நினைவுடன் இந்த வழக்கம் வந்துள்ளது. வெளியே செல்வதே தன்னுடைய நோக்கமல்ல. வேலை நிமித்தமாக விதியின்றி வெளியே சென்றாலும் மீண்டும் தன் இருப்பிடம் வந்தடைவதே முக்கிய குறிக்கோளாகும். வெளியில் செல்வது மீண்டும் திரும்புவதற்கே. ஆகையினால் போய் வருகிறேன் என கூறுவது தகும். அவ்வாறே மீண்டும் வருவதற்கே போகிறேன் என்பதில் வருவதை அழுத்தமாக சொல்வதற்காக "வருகிறேன்" என கூறுவது வழக்கமாக உள்ளது.
உடலை வைத்துக் கொள்ள ஒரு வீடு உள்ளது போன்று , உடலே ஓர் ஜீவன் வாசம் புரியும் வீடாக உள்ளது. அவ்வாறே ஜீவனுக்கு தன் நிலையான, தன் நிஜ ரூபத்தின் சௌந்தர்யத்தை அனுபவிக்கும் ஓர் வீடு உள்ளது. அது சாந்தி, பரமானந்ததின் இருப்பிடம். ஜீவன் தன் உலக வாழ்க்கைக்காக தன் ஐம்புலன்களுடன் தொடர்பு கொள்வதே வெளியே செல்வதாகும். மற்றும் புலன்களிடமிருந்து பின்னோக்கி தன் நிலை அடைவதே மீண்டும் வருவது. இது அந்த உள்ளிருக்கும் ஆனந்தநிலை என்னும் வீட்டை அறிந்த ஞானிகளின் வாழ்க்கை முறை. ஆகையினால் இந்திரியங்களின் தொடர்பு கொள்ளும் ஜீவன் தான் மீண்டும் தன் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை மறவாமல் வெளியே வரவேண்டும். இந்திரியங்களால் தான் அனுபவிக்க வேண்டியதை அடைந்த பிறகு மீண்டும் தன் நிலைக்கே திரும்ப வேண்டும். வீட்டிலிருந்து புறப்பட்டவன் மறந்து தெருவிலேயே அலைபவனாக கூடாது. அவ்வாறே ஜீவனும் தன்நிலையை மறந்து புலன் இன்பங்களில் அலைந்து திரிவது தகாது எனும் எச்சரிக்கை வார்த்தை இது. தன்னுடைய நிம்மதிக்காக திரும்பி வரவேண்டிய அமைதியான இல்லமொன்று உண்டு என்பதை நினைவுறுத்தும் அறிவுறை இது. அவ்வாறு தன்னிலையை, சாந்தியின் இருப்பிடத்தை அடைந்த போதுதானே இவ்வார்த்தையின் உட்பொருளை அறிய இயலும்!