மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இறைவன் அனைவரிடத்திலும் பாரபட்சமற்றவன். ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோர்மேலும் சமமாக ஒளியைவீசும் ஆதவனைப்போன்றவன். அவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை என தாங்கள் உபதேசித்தீர்கள். அவ்வாறாயின் அவன் படைப்பில் வினோதமான வித்தியாசங்கள் ஏன் உள்ளன? சிலர் சுகம் எனும் மென்மையான பஞ்சணையில் துயில்கின்றனர். சிலர் கஷ்ட நஷ்டங்களெனும் முள்படுக்கையில் படுக்கின்றனர். வேறு சிலரோ இத்தகு இன்ப துன்பங்களிடையில் நடுத்தரவர்க்கத்தில் உள்ளனர். இவ்வாறு வித்தியாசங்கள் நிறைந்தபடைப்பை செய்தவன் எவ்வாறு சமபுத்தி உள்ளவனாகிறான்? அவனிடமும் விருப்பு-வெறுப்பு இருக்கவேண்டுமல்லவா?--இவ்வாறு மஹரிஷி ஜைமினி குரு பாதராயணரிடம் கேள்வி எழுப்பினார்.
பாதராயணர்: ஆமப்பா நல்ல கேள்விதான். இறைவன் வேறு எந்த காரணமுமின்றி தன் விருப்பத்தின்படி இவ்வாறு படைத்திருந்தால் உன் குற்றச்சாட்டு அவனுக்கு பொருந்தும்.
ஜைமினி: இத்தகு சமத்துவமின்மைக்கு வேறு என்ன காரணம்?
பாதராயணர்: ஜீவிகளிலுள்ள தர்ம-அதர்மங்களுக்கு தக்கவாறு இத்தகு வேறுபட்டபடைப்பை ஏற்படுத்துகிறான். வேறுபாடுகளுக்கு காரணம் உயிரினங்களின் வினைப்பயன்கள். இறைவனோ அனைவரிடத்தும் சமமானவன்.
ஜைமினி: தக்க உதாரணங்களுடன் விளக்கவேண்டும் குருவே.
பாதராயணர்: மரங்களில் மா-வேம்பு முதலிய வேறுபாடுகளை காண்கிறோம். தானியங்களில் நெல்-கோதுமை போன்றும் கொடிகளில் ஜாஜி-முல்லை போன்றும் பலவகையான வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் சில நீண்ட நாட்கள் இருக்கும். சில வெகு விரைவில் வாடிவிடும். இவற்றின் இயல்பு ,மணம், உருவு, சுவை முதலியவையும் வெவ்வேறு. இவ்வேறுபாட்டிற்கு அம்மரம்-செடி-கொடிகளின் விதைகளின் இயல்பே காரணம். மழை மட்டும் இவ்வெல்லாவற்றின் மீதும் சமமாகவே பொழிகிறது. அதற்கு எந்த வேறுபாடும் இல்லை. அது பேதமற்றது. அதைப்போன்றவனே இறைவனும். உயிரினங்கள் மரம்-செடி-கொடி போன்றவை
ஜைமினி: உயிரினங்களே தம் வினைபடி வெவ்வேறு விதமாக பிறந்து வாழ்ந்து அழிகின்றன. இதில் இறைவனின் பங்கு யாது?
பாதராயணர்: உவமையிலேயே அதனை விளக்கி இருக்கிறேன். வேறுபாடுடைய மரம்-செடி-கொடிகளின் வளர்ச்சியில் மழையின் பங்கு எத்துணையோ உயிரினங்களின் படைப்பில் இறைவனின் நிலையும் அவ்வாறே ஆகும். அது அனைத்திற்கும் ஜீவாதாரம், குற்றமற்றது, சமமானது, அமுதம்.