Thursday, October 7, 2021

நற்குணங்களை ஏற்றுக்கொள்பவர்கள் ஆவோம் (Nargunangalai Errukkolpavargal Aavom)

மூலம்: கே.எஸ். ராஜகோபாலன் 
தமிழாக்கம் : ஸி.ஆர் ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)





ஒரு குரு இருந்தார். அவரிடம் ஒரு விசேஷமான கண்ணாடி இருந்தது. அதனை யார் எதிரிலாவது பிடித்தால், அவர்களுடைய குறைபாடுகள் அனைத்தும் தெளிவாக அந்த கண்ணாடியில் தெரிந்துவிடும்அந்த குருவிற்கு ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் குருவிடம் இருந்த இந்த விசேஷ கண்ணாடியை கவனித்திருந்தான். அவனால் பொறுக்க இயலவில்லை. அவன் அந்த கண்ணாடியை தனக்கே தருமாறு குருவை கட்டாயப் படுத்த தொடங்கினான். குருவின் நல்ல புத்திமதிகள் சிஷ்யனுக்கு பிடிக்கவில்லை. கடைசியில் குரு கண்ணாடியை சிஷ்யனுக்கு கொடுத்துவிட்டார். பஸ்மாஸுரன் தான் யார் தலைமீது கையை வைத்தாலும் அவர் எரிந்துபோக வேண்டும் என்னும் வரத்தைப் பெற்று, அந்த வரத்தைக் கொடுத்த சிவனின் மீதே பிரயோகிக்க தொடங்கியதைப் போல், இந்த சிஷ்யனும் கண்ணாடியை குருவின் முகத்திற்கே பிடித்தான். சிஷ்யனுக்கு ஆச்சரியமும், அருவருப்பும் உண்டாயின. தான் மிகவும் உயர்குணங்களுடைய நபர் என்று கருதியிருந்த குருவினிடமே சில குறைபாடுகள்!  'என்ன குருவே! உங்களிடம் இவ்வாறு குறைகள் 


இருக்கும் என நான் நினைத்திருக்கவே இல்லையே?' என்று குருவிடம் கேட்டேவிட்டான். குரு அமைதியாக சிஷ்யனை நோக்கி, ' குழந்தாய், ஒரு முறை உன் பக்கமே அந்தக் கண்ணாடியை திருப்பி வைத்துக்கொண்டு பார்' என்றார். சிஷ்யன் அவ்வாறே செய்தான். திடுக்கிட்டான். குருவினிடமிருந்ததோ சில குறைபாடுகள் மட்டும்தான். தன்னிடமுள்ள குறைபாடுகளை பட்டியலிடுவதே சிரமமாக இருந்தது அவனுக்கு! நல்லறிவு பெற்று கண்ணாடியை குருவினிடமே திருப்பிக் கொடுத்து சரணடைந்தான். குரு அவனுக்கு கீழ்வருமாறு கூறினார்: நூற்றுக்கு நூறு சதவிகிதம்  நற்பண்புள்ளவர்கள் கிடைப்பது அரிது.  . உயர்குணமுள்ளவர்களும் கூட சில சமயம் நல்வழியிலிருந்து பிறழ்வதுண்டு. ஆனால் அவர்கள் இறைவனின் அருள் மற்றும் தங்கள் சாதனைகளால் மறுபடியும் எல்லாவற்றையும் மீறி மேலெழ வல்லவர்கள். தம் குறைபாடுகளை நீக்கிக்கொள்ள வல்லவர்கள். ஆகையால் சாமானியர்கள் தங்களை அவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளக் கூடாது. எவராக இருந்தாலும் சரி, அவரிடம் உள்ள நற்குணங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு   அவைகளை கடைப்பிடித்தால்நம் வாழ்க்கை நிம்மதியுடன் கூடியதாக  அமையும். நீ அவ்வாறான பகுத்தறிவு இல்லாமல், கேவலம் சாஸ்திரங்களில் தேர்ச்சியடைந்த உன்னை, ஆன்மீக  வழியில் சாதனை செய்பவன் என்று எண்ணினாய். என்னுடைய புத்திமதிகளை நீ ஏற்கவில்லை' என்று கூறினார். சிஷ்யனுக்கு அப்பொழுது நல்லறிவு உண்டாயிற்று.

 

                ஆன்மீக வழியை பின்பற்றிய எத்தனையோபேர் கேவலம் புத்தகத்தை படித்ததனால் கிடைக்கும் அறிவினிடமே விருப்பமுள்ளவர்களாக  இருப்பார்கள். இவ்வாறு தம் வாழ்க்கைக்கு உண்மையான நன்மை பயக்கும் அறிவு சார்ந்த வார்த்தைகள் அவர்களுக்கு ருசிப்பதில்லை. 'குப்பைத் தொட்டியில் போடப்படவேண்டிய விஷயங்களனைத்தும் மனதில் நிறைந்திருக்கும் பொழுது, அறிவு செறிந்த வார்த்தைகள் அதற்கு எப்படித்தான் பிடித்தவையாய் இருக்கும்? 'என்னும் ஸ்ரீரங்கமஹாகுரு அவர்களின்  சொல் இங்கு நினைவுகொள்ளத் தக்கது. புத்தக அறிவு தவறு என்பதல்ல. ஒரு நல்ல குரு கிடைத்தால், உண்மையாக தன் வாழ்வில் நன்மையை உண்டாக்கக்கூடிய புத்தகங்களை அந்த குருவின் மூலம்  அறிந்து அவைகளை படிக்கும் திசையில் மனதை செலுத்தவேண்டும். இன்றைய உலகில் தகவல்களைப் பெறும் வேகத்திற்கு, நம் வாழ் நாள் முழுதும் படித்தாலும் முடியாத அளவுக்கு அறிவுக்களஞ்சியம் உள்ளது. நம் மனம்கண்ட கண்ட  எல்லா தகவல்களையும் வாரி  நிறைத்துக்கொள்ளும் குப்பைக் கூடையாகாமல், நம் வாழ்வின் உயற்விற்கு வேண்டிய நல்ல விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளும் கூடையைப்போல் ஆகட்டும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.