Thursday, October 21, 2021

தாம்பத்தியத்தில் நேர்மை மற்றும் நேர்மையின்மை (Dampattiyattil Niidhi Aniidhi)

மூலம்டாஆர்மோஹன்

தமிழாக்கம்ஸிஆர்ஸ்ரீதர்

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)தாம்பத்யம் என்பது ஓர் ஒப்பந்தம். அதனை மீறுவது தண்டனைக்குரியதா இல்லையா என்பது இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்படுகின்றது. அந்த விவாதத்தில் ஈடுபடாமல் தெளிவான மனதுடன், நமது நாட்டின் பரம்பரையில் தாம்பத்திய உறவு என்பது எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்று பார்த்தால், இவ்விஷயத்தைப் பற்றி  ஒரு பரந்த நோட்டம் கிடைக்கப்பெறும்.       பாரதத்தின் கலாசாரத்தில் தாம்பத்தியம் என்பது கேவலம் ஒரு விவகார ஒப்பந்தமல்ல. அது இறைவனின் படைப்பில் இயல்பான ஒரு உறவு. பூமியும் ஆகாயமும் போல், மனதும் சொல்லும் போல் உள்ள  இயல்பான சம்பந்தம் என்று திருமணத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் வாக்கியங்கள் கூறுகின்றன. ஆகாயத்தின் மேகங்கள் தன் நீரை பூமிக்கு இறைத்து புதிய பயிர்களை விளைவிக்கச் செய்கின்றது. ஆகாயத்தின் ஒளி பூமியில் வாழும் ஜீவன்களை காக்கின்றது. இதனால் லாபம் யாருக்கு? பூமிக்கா ஆகாயத்திற்கா ? என்றால் அவ்விரண்டிற்கும் இல்லை. அவ்விரண்டும் படைப்பின் நியதியை காப்பவைகளே. மனிதன், பறவை செடி கொடிகள் முதலிய ஜீவராசிகளின் பரம்பரை வளர்ந்து மிளிர்ந்து,   படைப்பின் விருப்பத்தை ஈடேறும்படி செய்யும்  மஹாத்மாக்கள்  இவ்வாகாயமும் பூமியும்.


சொல், மனதின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. யாருக்காக என்றால் அந்த மனதிற்கும், சொல்லுக்கும் தலைவனானநபரின்நலத்திற்காக.  அவ்வாறே தாம்பத்தியமும் கேவலம் போகத்திற்கான உரிமையாக மட்டும் இல்லாமல், தன்னலமின்றி, படைப்பு மற்றும் படைத்தவனின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு பொறுப்பு என்றும், தூய்மையான ஆன்மீக குணங்களோடு கூடிய சந்ததியை உலகிற்கு அர்ப்பணிக்கும் யாகம் என்றும் நம் பாரதீயர்கள் எண்ணினார்கள்.          


ஐய்யோ! தாம்பத்தியத்தின் இனிமையான உறவை ஒரு சாரமற்ற வறட்டு வைராக்கியத்தின் கட்டாயமாக ஆக்கிவிட்டார்களே!  என்ற வருத்தம் வேண்டாம். ஆகாயம் மற்றும் பூமியின் உதாரணத்தை தரும்  வேத  மந்திரமே 'என்னுடைய இதயம் உன்னுடையதாகட்டும், உன்னுடைய இதயம் என்னுடையதாகட்டும்' என்னும் மிருதுவானதும்,  இனியதும், அர்த்தம் நிரம்பியதும் ஆன சொற்களை கூறுகின்றது. தன் அன்பிற்குரியவளும், மனைவியும் ஆன ப்ரமத்வரை என்பவள் பாம்பு தீண்டிய விஷத்தால் மரணம் அடைந்தபொழுது, தன் ஆயுளில் பாதியை அவளுக்கு தானம் செய்து அவளை உயிர்ப்பித்த ருரு என்பவனும் ஒரு ரிஷியின் குமாரன்தான் என்பதை மறக்கக்கூடாது. தலைசிறந்த யோகியான கபில முனியின் தந்தையும் பிரம்மஞானியும் ஆகிய கர்தம ப்ரஜாபதி, நூறு வருடங்கள் தன் மனைவியான தேவஹூதியுடன் காடுகளிலும் அழகிய தோட்டங்களிலும் வாழ்ந்து இல்லற இன்பம் அனுபவித்தார் என்பது வரலாறு. வசிஷ்டர்-அருந்ததி, அத்ரி-அனஸூயை, கச்யபர் -அதிதி முதலான எண்ணிலடங்காத ரிஷி தம்பதிகள் இல்லற வாழ்வை கடைப்பிடித்து தம் வம்சத்தை விரிவாக வளர்த்தனர்.


தாம்பத்திய உறவு என்பது படைப்பு மற்றும் படைத்தவனின்  விருப்பத்தின்படி நிறைவேற்றப்படவேண்டிய  ஒரு யாகம் என்பதால், அவ்வுறவின் அத்துமீறல் இயற்கை அன்னையின் வழக்கு மன்றத்தில் மட்டுமே தண்டிக்கப்படவேண்டியது. 'தண்டனை' என்பது 'பாடம் கற்பித்தல்' என்பதற்கு மறு சொல்லாகும்.  நீதிக்கு முரண்பாடான செயல்களை ஒழுங்கு படுத்தும் ஒரு செயல். ஆகையால்தான் அஹல்யை தண்டனையாக, நீண்ட காலம் கடுமையான தவம் செய்ய நேர்ந்தது. அத்தவத்தின் பலனாக ஸ்ரீ ராமபிரானின் தரிசனத்தால் லோபம், மோகம் முதலியவற்றிலிருந்து விடுபட்டு கௌதமருடன் ஒன்று சேர்கிறாள். நேர்மையற்ற நடத்தையில் பங்குகொண்ட இந்திரனுக்கு சண்டாளனாகும்படி தண்டனை. ஆண், பெண் இருவரும் தண்டனைக்குள்ளானார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.   இருவருக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் வெவ்வேறாயினும், அவற்றின் குறிக்கோள்,  தாம் இழந்த புலனடக்கத்தை மீண்டும் பெறுவதுதான். இங்கு எவ்வித  சிறைச்சாலைக்கும், நீதிமன்றத்திற்கும் இடமில்லை.  திருமணத்தின் பதிவு-ரத்து செய்வதென்னும் பேச்சுக்கே இடமில்லை.

 

பாரதீய கலாசாரத்தில் தாம்பத்தியத்தின் பதிவு இதயத்துள் ஆழமாக பொதிந்திருக்கும். பக்தரான ஜயதேவரின் மனைவி பத்மாவதி, தன் கணவர் இறந்தார் என்னும் பொய்யான செய்தியை அறிந்து, அவ்விடமே தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் என்பதும், பின்னர் ஜயதேவரின் பக்தி செறிந்த பாடலினால் மறுபடி உயிர் பெற்றாள் என்பதும் வறலாறு. இத்தகைய மகான்கள் உலக இன்பத்தில் நாட்டம் உடையவர்களா அல்லது சிறந்த கடவுள் பக்தர்களா? புலன் இன்பங்களையும், படைப்பு-படைப்பாளியின் தவத்தையும் ஒரே நேரத்தில் அனாயாசமாக சாதித்தது பண்டைய பாரதீயரின் அசாதாரணமான, மற்றும் தனித்துவமான சாதனையாகும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.