Thursday, February 25, 2021

நவரஸநாயகன் ஸ்ரீராமன்(Navarasa nayakan Sriraman)

 மூலம்: டா. நஞ்சன்கூடு 
 சுரேஶ்தமிழாக்கம்: வனஜா 
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஆதிகவி வால்மீகி ஸ்ரீ ராமன் நவரஸங்களின் நாயகன் என சித்திரிப்பதில் வெற்றி பெற்றார் என்பது  ராமாயணத்தை படித்த அனைவரும் அறிந்தது. இக்காவியத்தில் ஒன்பது வித உணர்சிகளும்  இயற்கையாகவே  பொருத்தமான இடங்களில் வெளிப்பட்டுள்ளன. தேவைக்கேற்றவாறு வெளிப்பட்டுள்ள  உணர்ச்சிகள் காவியத்திற்கு எல்லா வகையிலும் மேலும் மெருகூட்டியுள்ளன.  இறைஉணர்வெனும் அமுதத்திலேயே  எக்காலமும் ஆழ்ந்திருந்த வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமபிரானின் இனிமையை தன்னுள் சுவைத்து அதில் எவ்வித மாற்றமும் இன்றி சித்திரித்தமையால் படிப்பவர்கள் மனதையும் ராமாம்ருதத்தில் திளைக்க செய்துள்ளார். "சுவை மிகுந்த உணவு பலவீனமானவனை பலப்படுத்துவது போல் ராமனின் நவரஸங்களும் மனம்சோர்ந்தவனை ஊக்கப்படுத்துகின்றன"  எனும்  ஸ்ரீரங்கமஹாகுருவின் புனித வாக்கை  நினைவுகூறலாம்.

ஸ்ரீராமன்-சீதை இடையிலான அன்பு அவர்களின் மணவாழ்வில் முழுமையாக வெளிப்படுகிறது.  வலிமையும், வீரமும் சிவன் வில்லை முறித்ததிலும், அரக்கர்களுடனான போரிலும் வெளிப்படுகிறது. துயரம் ஜடாயுவின் மரணத்திலும், தசரதனின் பிரிவிலும் வெளிப்படுகிறது. ஆச்சரியம்  கடலில் அணை கட்டியதிலும், பூமாதேவியுடன் சீதை ஐக்கியமானதிலும் அறியப்படுகிறது. ஹாஸ்யம்(நகைச்சுவை) சூர்ப்பனகையிடமும், பேரச்சமும்,  வெறுப்புணர்ச்சியும் அரக்கர்களின் போரிலும் வெளிப்படுகிறது. கோபம் ராவணனையும்,  கும்பகர்ணனையும் கொல்லும்போதும்,  சாந்தம் முனிவர்களுடன் பர்ணசாலையில் இருக்கையிலும் வெளிப்படுகிறது. ஆதிகவி வால்மீகி தன்னை ஒத்த மனமுடையவர்களுக்கு அத்தகு உணர்ச்சிகள் மனதில் எழும் வண்ணம் ராமனின் வாழ்வில் இடம்பெற்ற நவரஸங்களையும் விவரிக்கின்றார்.

புலனின்பம் மற்றும்  தெய்வீக இன்பம் இரண்டையும் அளிக்க கூடிய இவ்வுடலுக்கு மிகவும்  அவசியமான - அன்பிலிருந்து தொடங்கி அமைதியில் நிறைவுறும் - நவரஸங்களையும் அருளி வால்மீகி முனிவர் ஜீவாத்மா-பரமாத்மாக்களின் ஐக்கியத்திற்கு  வழிவகுத்துள்ளார். இவ்வாறாக முனிவர் 'சாந்திஸம்ருத்தமம்ருதம்' எனும் மறை வாக்கிற்கேற்ப அமைதி நிறைந்த  தெய்வீக இன்பத்திற்கு  வழிகாட்டியுள்ளார்.

"ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவாயம் லப்த்வானந்தீ பவதி"

"இறைவனே பேரின்பத்தின் சாறு. அவனை அடைவதால் மட்டுமே மனிதன் பேரின்பத்தை சுவைக்க இயலும்"  என்னும் நிலைக்கு ஏற்றுகிறார்.

ஒரு கவிதையால் பெறும் அநேக நன்மைகளில் இன்றியமையாதது பண்பட்ட மனதை துன்பங்களிலிருந்து  விடுவித்து தெய்வீக இன்பத்தை அளிப்பதுவே.  இத்தகைய  ஆதிகாவியமாம் ராமாயணமும், ஆதிகவி வால்மீகியும் போற்றத்தக்கவர்களே ஆவார்.

ஆத்மாராமனாக ஆத்மாவின் உள்உறையும் இறைவன் நிலையான பேரின்பச்சாறாக உள்ளான்.  ஆன்மாவையும், அதன் விச்வரூபமான வளர்ச்சியையும் அறிந்தால் மட்டுமே  அமைதியான இனியவாழ்வை அடைய இயலும்  எனும் ஸ்ரீ ரங்க மஹாகுருவின்  அருள்வாக்கை நினைவு கூர்ந்து ராமாயணத்தின் உட்பொருளை எனக்கு உணர்த்திய பூஜ்ய ரங்கப்ரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்து "உனது உடைமையை  உனக்கே அர்ப்பணிக்கிறேன்,  கோவிந்தா" என இக்கட்டுரையை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.