மூலம் : வித்வான் நரசிம்ஹ பட்
தமிழாக்கம் : திருமதி ஜானகி
சம்ஸ்கிருத மொழியில் தாமரை என்ற சொல்லிற்கு பல இணைந்த சொற்கள் உண்டு. சம்ஸ்கிருத அகராதியான அமரகோசத்தின்படி அவை 16 - பும்சி, பத்மம், நளினம், அரவிந்தம், மஹோத்பலம், சஹஸ்ர பத்மம், கமலம், சதபத்ரம், குஶேஶயம், பங்கேருஹம், தாமரசம், சாரசம், சரஸீருஹம், பிஸப்ரஸூனம், ராஜீவ புஷ்கரம், அம்போருஹம் எனப்படும். கமலநயன, அரவிந்தலோசன, ராஜீவலோசன முதலிய தாமரையின் ஒத்தசொற்களை உபயோகிக்கும் உவமானங்களை காண்கிறோம்.
இறைவனை எவ்விடத்தும் ஏன் தாமரையின் ஒத்தசொற்களை கொண்டு வர்ணிக்கிறார்கள்? இதில் லௌகிகம் அல்லது ஆன்மீகம் சார்ந்த கண்ணோட்டம் ஏதாவது உள்ளதா? அது எந்த அளவு வியாபித்துள்ளது என ஶ்ரீரங்க மஹா குருவிடம் அவருடைய சீடர் ஒருவர் வினவ அவர் அளித்த விளக்கம் மிகவும் ஆச்சரியகரமாகவும் மனதிற்கு உகந்ததாகவும் உள்ளது.
தாமரை உதாரணம்
முதன் முதலில் உதாரணத்தின் உபயோகம் எங்கே என்பதை காண்போம். இரு பொருட்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்று ஏற்கனவே அறிந்தது. மற்றொன்று அறியாதது. இரண்டிலும் சில பண்புகளே பொதுவாக காணப்படும். அறிந்தவற்றின் பண்புகளை கொண்டு அறியாததை நாம் புரிந்து கொள்ள முடியும். ‘அதைப்போல இது’ எனும் அறிவு ஏற்படுகிறது. சாஸ்திரத்தில் இதுவே ‘உபமான ப்ரமாணம்’ அல்லது ‘உபமா அலங்காரம்’ என கூறப்படுகிறது. எப்பொருள் வர்ணிக்கப்படுகிறதோ அது உபமேயம் எனவும் எதைக் கொண்டு வர்ணிக்கப்படுகிறதோ அது உபமானம் என்றும் வழங்குகிறது. இவ்விரண்டிலும் உள்ள பொது பண்பானது ’சாதாரண-தர்மம்’ எனப்படுகிறது. எவ்வாறெனின் "ராமோ ராஜீவ லோசன:" இவ்விடம் ராமனின் கண்கள் தாமரைக்கு ஒப்பிடப் பட்டுள்ளன. தாமரையானது எவ்வாறு நம் மனதை அபகரிக்கிறதோ அவ்வாறே ராமனும் அவனுடைய கண்களும் நம் மனதை கொள்ளை கொள்கின்றன.
ஶ்ரீ ஶ்ரீரங்க மஹா குரு அளித்த விளக்கத்தின் சுருக்கம்.
"ஆபோ நாரா இதி ப்ரோக்தா:" என்பதில் நாரா என்றால் நீர் என்று பொருள். ‘நாராயண’ என்றால் யாருக்கு நீர் படுக்கையோ அல்லது யாருக்கு அடைக்கலமோ அப்பேர்பட்டவன் என்று பொருள். தாமரையின் பிறப்பிடம் தண்ணீர். அதனால் அதற்கு ஜலஜா, நீரஜா, அம்புஜா என பல பெயர்களுண்டு. தண்ணீரிலேயே பிறந்து வளர்ந்த தாமரை நாராயணனுக்கு உடன்பிறப்பாகிறது. ஆகையினால் தாமரையை இறைவனுக்கு அடைமொழியாக அல்லது உதாரணமாக பயன்படுத்துவது இயல்பாக உள்ளது.
படைப்பின் மூலம் தாமரை
படைக்கும் கடவுளான பிரம்மனும் நாராயணனின் தொப்புள்கமலத்தில் தோன்றியவன். ஆகையினாலே பிரம்மனை 'கமலோத்பவன்' (தாமரையில் தோன்றியவன்) என அழைக்கின்றனர். ஆகையால் படைப்பின் மூலம் தாமரையே ஆகும். லட்சுமியின் பெயர்கள் கமலா, பத்மா என்பன.
"பத்மப்ரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தலாயதாக்ஷி |
விஶ்வப்ரியே விஷ்ணு மனோனுகூலே த்வத் பாத பத்மம் மயி ஸன்னிதத்ஸ்வ" || எனும்படி அவளுடைய இருக்கை, திருமுகம், கை, கால் அனைத்தும் தாமரையே ஆகின்றன. மனைவியே தாமரையைப் போன்றுள்ளதால் அவளுடைய நாயகனான நாராயணனும் அவளுக்கு ஏற்றவனாக இருக்கவேண்டுமன்றோ? ஆகையினால் நாராயணனையும் தாமரை போன்ற கைகள், பாதங்கள் மற்றும் கண்களை உடையவனாக கூறுவதும் வழக்கத்தில் உள்ளது. எத்துணை அழகான விளக்கம்!!!
யோகிகள் தம்முள் மூலாதாரம் முதலிய சக்கரங்களை தாமரையின் வடிவில் காண்கிறார்கள் என கூறப்படுகிறது. "சஹஸ்ராரே மஹாபத்மே சிவேன ஸஹ மோததே (விஷ்ணுநா ஸஹ மோததே)” இது ரிஷிகளின் தாமரை மலரை பற்றிய அலௌகிகமான கண்ணோட்டம். உலக வழக்கிலும் தாமரைக்கு இதே அளவில் முக்கியத்துவம் உண்டு. இயற்கையிலையே தாமரை மலர் மென்மையாகவும் நறுமணத்துடனும் நல்ல வண்ணத்துடனும் மனதை அபகரிப்பதாகவும் உள்ளது. ஆயர்வேதத்திலும் இதன் மருத்துவ குணங்கள் மிகவும் கொண்டாடப்படுகிறது. இறைவனை மலர்களை கொண்டு பூஜிக்கும் போது அதில் தாமரை முதன்மையானது. தாமரை இறைவனுக்கு மிகவும் விருப்பமான மலர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பாரததேச அரசாங்கமும் இதையே தேசிய மலராக தேர்வு செய்துள்ளது. இவ்வாறு தாமரைக்கு படைப்பு முதற்கொண்டு இன்று மட்டுமன்றி சூரிய சந்திரர் இருக்கும் காலம்வரை மேன்மை உண்டு.
குறிப்பு : இக்கட்டுரையின் ஸம்ஸ்க்ருத மூலம் AYVM blogs ல் காணலாம்