Saturday, November 16, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 43 (Sriranga Mahaguru - 43)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 32

செய்கைகேற்ற பயனை அனுபவி

===========================================================

மூலம்: வரததேசிகாசார்யார் தமிழாக்கம்: ஜானகி


நற்செயல்கள் நற்பயனையும் தீயசெயல்கள் தீயபயனையும் வழங்குகின்றன என கர்மசித்தாந்தம் உரைக்கின்றது. அனைத்து ஞானிகளும் இதையே உபதேசிக்கின்றனர். ஆயினும் இதற்கு நேர்மாறான பல நிகழ்வுகளை நாம் உலகில் காண்கிறோம்.

         நேர்மை, கருணையோடு பிறர்க்கு உதவும் நல்லோர்கள் துன்பப்படுவதையும், தீயவரும், கபடமானவர்களும், தந்திரக்காரர்களும்  உலகில் நற்பெயரும், புகழும், மதிப்பும் பெற்று ஆனந்தப்படுவதையும் காண்கிறோம். கர்மசித்தாந்தம் உண்மையாகில்  இப்பலன்கள் எவ்வாறு ஏற்படும்? எனும் வினா எழுகிறது. இதற்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் முன்பின் யோசித்து பேசும் விவேகம் வேண்டும். ஓர் உதாரணத்தின் மூலம் இதை தெளிவாக்கலாம்.

          'A' எனும் பன்னிரெண்டாம்வகுப்பு மாணவன் நன்கு பாடங்களை பயிலுவதில்லை. கல்லூரிக்கும் முறையாக செல்வதில்லை. ஆயினும் அவனுக்கு ஆண்டு முழுவதும் மாணவர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே வகுப்பில் படிக்கும் 'B' எனும் மாணவன் நாள்தவறாமல் கல்லூரிக்கு சென்று பாடங்களை நன்கு பயில்கிறான். ஆனால் அவனுக்கு உதவித்தொகை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏன் இந்த அநீதி என ஒருவர் தலைமையாசிரியரை வினவ அவர் அளித்த விளக்கம்-

‘ஐயா  'A'  என்பவன் சென்ற வருடப்படிப்பில் முதலிடம் பெற்றவன். அதற்கான நற்பலனை இப்பொழுது அனுபவிக்கிறான். அடுத்த ஆண்டு இத்தொகையை இழந்து வருந்துவான். 'B'  என்பவன் சென்ற ஆண்டு நன்றாக படிக்காததால் உதவித்தொகை இன்றி வருந்துகிறான். அடுத்த ஆண்டு அதை பெற்று இன்புறுவான். இவ்விருவரின் முந்தைய மற்றும் இன்றைய சூழ்நிலையை நன்கு உணர்ந்த எனக்கு இது புரிகிறது. இதை நன்கு கவனித்தால் உங்களுக்கும் தெளிவாகும்’.

          நல்லோர்கள் தங்கள் பூர்வ ஜென்மபலனாக தற்போது துக்கத்தை அனுபவித்தாலும் தற்போதையநற்செயல்களால் நற்பயன்களை அடைந்தே தீருவார்கள். அதே போன்று தீயவர்களும் முன்ஜென்மத்தில் செய்த பலனால் இன்பத்தை அனுபவித்தாலும் இன்றைய தீவினைகளுக்கான பலனை பிற்காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்பதை இந்த உதாரணம்  நன்றாக உணர்த்துகிறது. அதனால் நல்லோர் மனம் குழம்பாது நற்செயல்களையே மேற்கொள்ளவேண்டும். ஆனால் தீயவைகளை கண்டு மௌனமாக இல்லாது ஒற்றுமையுடன் அதை எதிர்க்க வேண்டும். இது அவர்களின் கடமையாகும்.