கன்னட உரையாடல்: ஸ்ரீவரததேசிகாசார்யரங்கப்ரியர்
தமிழாக்கம்: திருமதி வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
சிஷ்யன்: பாவங்கள் செய்தாலும் பரவாயில்லை என்று நம் சாஸ்திரங்கள் அனுமதிப்பதுபோல் தோன்றுகிறதே?
குரு: அது எவ்வாறப்பா?
சிஷ்யன்: எந்த பாவம் செய்தாலும் அதற்கு பரிகாரம் கூறப்பட்டுள்ளதால் பயமின்றி பாவங்களை செய்யலாம். எவ்வாறாயினும் எளிதாக பரிகாரம் செய்து பாபத்திலிருந்து விடுபடமுடியுமல்லவா?
குரு: மகான்கள் ஆழ்ந்த சிந்தனையினால் ஆராய்ந்து நிரூபித்த உண்மைகளை குறித்து அத்துணை எளிதாக பேசக்கூடாதப்பா. பரிகாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல. எப்படியும் பரிகாரம் உள்ளதென்று பாவம் செய்யலாம் என்று எந்த சாஸ்திரத்தில் குறித்துள்ளது?
அவ்வாறு செய்வது விவேகமல்ல. நிறைய மருத்துவமனைகள், வைத்தியர்கள், மருந்துகள் உள்ளன என்று தானாகவே விபத்தை ஏற்படுத்திக்கொண்டு யாரேனும் கை, கால்களை உடைத்துக்கொள்வார்களா!?
சிஷ்யன்: (அடக்கத்துடன்) இல்லை.
குரு: களிம்பு(க்ரீம்) உள்ளதென்று வேண்டுமென்றே காயப்படுத்திக்கொள்ள கூடாது.
சிஷ்யன்: அது சரி, பரிகாரம் செய்து கொண்டால் பாவம் எப்படி விலகுகிறது?
குரு: சரியான மருந்தால் காய்ச்சல் நீங்குகிறதல்லவா? சிஷ்யன்: நீங்குகிறது.
குரு: அந்த காய்ச்சலுக்கு மருந்துண்பதே பரிகாரம். அவ்வாறே பாவம் என்பது மனதிலுள்ள காய்ச்சல். வெகுகாலமாக உள்ளதாகவும் இருக்கலாம். தூயனான பரமாத்மனை குறித்த தியானத்தால் மனதில் படிந்துள்ள காய்ச்சல் தொலைகிறது. மனத்தின் அழுக்கு விலகுகிறது. அதுவே பாவபரிகாரம். தூய மந்திர ஜபம், புண்யதீர்த்தம், பஞ்சகவ்யம் முதலியவற்றால் சப்ததாதுக்களில் படிந்திருக்கும் வியாதிகளும் தொலைந்து போகும். ஆனால் சரியான பரிகாரத்தையே செய்து கொள்ள வேண்டும்.
'ப்ராய:' என்றால் தவம், 'சித்தம்' என்றால் மனம். மனம் சுத்தமாகும்படி செய்யும் தவமே ப்ராயச்சித்தம்(பரிகாரம்) என்று மகான்கள் கூறுகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்து கொண்டால் உண்மையாகவே பாவம் தீர்கிறது. இல்லாவிடில் அது வீண் வேஷமாகும். பாவம் செய்பவன் தவறை உணர்ந்து வருந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் பாவம் செய்யாதிருக்க முயற்சி செய்ய வேண்டும்.