Thursday, April 21, 2022

ஜீவனுக்கு இருக்கட்டும் காப்பீடு (Jivanukku Irukkattum Kappidu)

மூலம்: கே.எஸ். ராஜகோபாலன்
தமிழாக்கம்: ஆர். சுப்பராவ்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஒரு உழவன் இருந்தான். அவன் குழந்தைகளுக்கோ வேளாண்மைத் துறையில் ஈடுபாடு  இருக்கவில்லை. அவன் அகால மரணம் அடைந்தபின், அவனுடைய குழந்தைகள் வீட்டை சோதனையிட்டு விதை பாக்கெட்டுகளை கண்டெடுத்தனர். அவர்கள் அந்த விதைகளை, வளரும் என்கிற நம்பிக்கையுடன், வீட்டைச் சுற்றி நட்டனர். அவர்கள், தங்களுக்கு இருந்த சிறிதளவு அறிவால் விதைகளை சாகுபடி செய்தனர். சில விதைகள் மட்டுமே முளைப்பயிர் விட்டன. ஒரு முந்திய காலை பொழுதில், அவர்கள் உற்சாகத்துடன் தாங்கள் வளர்த்த செடியில்  பழங்கள் உள்ளனவா என்று தேடினர். செடிகளில் இருந்த முட்கள் அவர்கள் கைகளில் குத்தி காயத்தை ஏற்படுத்தின. ஏனென்றால் அவைகள் முட்செடிகளாயிற்றே !!!!  இந்த செடிகளை பராமரித்ததால் இந்த பயன்தானா நமக்கு ? என்று கூவினர். இதை கவனித்து கொண்டிருந்த அண்டை வீட்டிலிருந்த ஒருவர் என்னவென்று அவர்களை வினவினார். "பழம்தரும் செடிகளை வளர்த்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்தது முட்செடிகளும், மன வேதனையும், காயங்களுன்தான் " என்று கூறினர். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார் "உங்கள் தந்தை முட்செடிகளின் விதைகளை வேலி போடுவதற்காக சேமித்து வைத்திருந்தார். முட்செடிகள் பழம்தரும் விதைகளிலிருந்து வளரவில்லை. நீங்கள்  கவனமாக கவனித்தால்,  பழம்தரும் செடிகளும் கூட இங்கு   உள்ளனவே !! மற்றும் பாருங்கள், சில பழம்தரும் செடிகள் காய்க்க ஆரம்பித்துள்ளனவே !! மற்ற சில பழம்தரும் செடிகள் காய்க்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்."       


அதே போல், பல ஜன்மாக்களில் விதைக்கப்பட்ட நல்ல கர்மா கெட்ட கர்மா என்னும் விதைகள் சரியான காலத்தில் பலனளிக்கின்றன - சிலது விறைவில், வேறு சிலது நிதானமாக வேறு காலக்கட்டத்தில் அதன் போக்கில். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த கெட்ட செயல்கள் அவ்வப்பொழுது துன்பங்களையும் வலிகளையும் நமக்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. சில சமயங்களில், பழம்தரும் முட்செடி விதைகளும் காற்றுடன் கலந்து வருவதுண்டு. அவைகள் பழங்களை தருவதுண்டு.  நம் துன்பங்கள் வேறு சிலரின் தவறுகளால் ஏற்படுகின்றன என்னும் தோற்றத்தை கொடுக்கின்றன. நம் பொறுப்பு இது மட்டுமே - இயன்ற அளவு காலணிகளையும், கையுறைகளையும் அணிந்து நகருதலும், முட்செடிகளையும் களைகளையும் அகற்றுதலுமே. ஆனால், இந்த நடவடிக்கைகளால் எழும் துன்பங்கள் தவிர்க்க முடியாததே. 


என்றென்றும் செடிகள் பழங்களை தருவதில்லை. இதேபோல், துன்பங்களும்,  மகிழ்ச்சிகளும் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. பலாப்பழத்திலிருக்கும் முட்களும், பசைகளும் மற்றும் இனிப்பு கூழ்களும் அந்த பலாப்பழத்துடன் சேர்ந்தவைகளே. இந்த நினைவோடு, பலாபழத்தின் இனிப்புக் கூழை அனுபவிப்போமாக !! இதேபோல், மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் கஷ்டத்திலும் மகிழ்ச்சியை காண முயல வேண்டும். நாம் அகால உடல் நலமின்மையிலிருந்தும், இறப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே காப்பீடு செய்து கொள்கிறோம். ஸ்ரீ ஸ்ரீரங்க மஹாகுருவின் வார்த்தைகளில் சொல்வோமேயானால் "ஆத்மாவுடன் செல்லும் ஒரே காப்பீடு இறைவன். அந்த காப்பீட்டை பெறுவோமாக". இந்த பொன்னான வார்த்தைகளை என்றென்றும் மறவாமல் நினைவு கூர்வோமாக. 


எவனொருவன் கஷ்டங்கள் வரும் பொழுது நிலை கலங்காமல் இருக்கின்றானோ அவனே மகிழ்ச்சியாக இருப்பவன். இதேபோல், நல்ல வசதி படைத்த ஒருவன், எல்லாமிருந்தும், மேலும் இன்னும் வசதிகள் வேண்டுமென நினைத்தால் அவன்  நிலை பரிதாபகரமானது. காப்பீட்டை வைத்திருப்பவன் தைரியத்துடன் வாழ்க்கையின் கஷ்டங்களை துணிச்சலுடன் எதிர்கொள்கிறான். அதேபோல், நாமும் வாழ்க்கையின் கஷ்டங்களை, எல்லாம் வல்ல இறைவனின் மீது நம்பிக்கை வைத்து எதிர்கொள்வோம். இதுவே நம் ஜீவனுக்கு இருக்கும் நிறந்தரமான காப்பீடாகும்.  
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.