ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 7
=================================================
மூலம்: ஶ்ரீரங்கப்ரியர்
தமிழாக்கம்: திருமதி வனஜா
தமிழாக்கம்: திருமதி வனஜா
கேள்வி: ச்ராத்தத்தில்(தெவசம்) உணவருந்த தகுதியுள்ள ஞானிகளை அழைத்து உணவளிப்பது தவறில்லை. உண்டவர் த்ருப்தி ஆயிற்றென்று தன்வாயால் கூறுகிறார். இதனை நம்பலாம். ஆனால் உடலை விட்டு பிரிந்து சென்றுள்ள ஏதோ ஒரு உயிரை குறித்து திதி செய்கிறோம். அந்த ஜீவனுக்கு இதனால் எப்படி நிறைவுண்டாகும்?
ஸ்ரீகுரு: பக்தியுடன் மனம்ஒன்றி ஆன்றோருக்கு முறைபடி உணவளித்தால் அவரால் அதனை அந்த ஜீவனிடம் சேர்பிக்க முடியும்.
கேள்வி: அது எப்படி இயலும்?அந்த ஜீவன் தெய்வபிறவி அடைந்திருக்கலாம், வேறு உலகங்களிலிருக்கலாம். கழுதையாகவோ, புலியாகவோ, மீன்-முதலையாகவோ பிறந்து வெளிநாடுகளிலோ, கடலிலோ இருக்கலாம். நாம் உணவளிப்பது இங்கு. அந்த ஜீவன் இருப்பது வேறெங்கோ. இங்கு பரிமாறுவது வடை, ரவை உருண்டை போன்றவை. தேவதைகளின் உணவு அமுதம். மற்ற உயிரினங்களின் உணவோ இவ்விரண்டுமன்றி வேறொன்று. எவ்வுருவத்திலோ எங்கோ
இருக்கும் ஜீவனுக்கு இங்கு அளிக்கப்படும் உணவு எப்படித்தான் சேரும்?
ஸ்ரீகுரு: இங்கு வானொலியில் பேசுவது 1000மைல்களுக்கு அப்பால் இருப்பவருக்கு எப்படி கேட்கிறது?
கேள்வி: அது முடியும். அறிவியல் உள்ளது. இங்கு எழுப்பும் ஒலி அலைகளை சக்தி வாய்ந்த மின்காந்த அலைகளென்னும்(electro magnetic waves) வாகனத்தின் மூலமாக அங்கு அனுப்புகிறோம். அது எவ்வளவு தொலைவிற்கும் செல்ல முடியும். அங்குள்ள அலைபேசி கருவி மின்காந்த அலைகளை மாற்றி ஒலி அலைகளை ஈர்த்து ஒலிபரப்புகிறது.
ஸ்ரீகுரு: அவ்வாறே இங்கு நாம் அளிக்கும் உணவை ஆன்றோர்கள் தம் தெய்வீகமான மனோதர்மமெனும் வாகனத்தின் மூலம் தொலைவிலிருக்கும் ஜீவனுக்கும் அளிக்க இயலும்.
கேள்வி: ஆன்றோரே ஆயினும் இங்கு படைக்கப்படும் உணவை அதே வடிவில் தன் மனோதர்மத்தால் அங்கு கொண்டு செல்ல இயலுமா?
ஸ்ரீகுரு: அதே உருவில் ஆன்றோர் எடுத்து செல்வதில்லை. அமுதமயமாக்கி பரம்பொருளுக்கும் தேவதைகளுக்கும் அர்ப்பணிக்கின்றனர். எந்த ஜீவனை குறித்து திதி செய்யப்படுகின்றதோ அவருக்கு உகந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் தேவதைகள் அளிக்கின்றனர். அவர்களுக்கு அத்திறமை உண்டு. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள், வலிமை உடையவர்கள்.