ஸ்ரீ குருவின் கண்ணோட்டம் - 4
------------------------------ -------
புதையல்
தமிழாக்கம் : திருமதி வனஜா
மறைந்துள்ள பொக்கிஷம் என்ற சொல் கேட்டதும் நிமிராத செவியும் சிலிர்க்காத உடலும் ஏது? மறைந்துள்ள பொக்கிஷம்(செல்வம்) நம்முடையதானால் அதனாலுண்டாகும் சுகம், லாபம் இவைகளின் கனவே மயக்கக்கூடியது. பூமிக்குள்ளே, கடலின் அடிதளத்தில், விரிந்து பரந்த குகைகளுக்குள் மறைந்திருக்கும் புதையலைப்பற்றி கேள்விப்பட்டு அச்செல்வத்தை அடைவதற்காக தன்னுயிரையும் துச்சமென மதித்து புறப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
அளவற்ற செல்வத்தை மொத்தமாக அடைய வேண்டுமென்ற கனவு யாரைத்தான் தூண்டாது? பொக்கிஷங்களை அரவங்கள் காக்கின்றன என்ற செய்தி உற்சாகத்துடன் பீதியையும் அளிக்கின்றன. மை போட்டு பார்ப்பதிலிருந்து நவீன உபகரணங்கள் வரை புதையலை தேட பயன்படும் கருவிகள் ஏராளம். பிரிட்டன், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே பெரும் போரில் கடலில் விழுந்த தங்கத்திற்காக போராடியது பத்திரிகைகளின் வாயிலாக அனைவரும் அறிந்ததேயாம்.
ஆனால் ஒவ்வொரு மனித உடலும் மறைந்துள்ள செல்வத்தின் பொக்கிஷமாக உள்ளது என்பதை அறிந்தவர்கள் சொற்பமே. இச்செல்வத்தை கண்டறிந்து தன்வயப்படுத்தி கொண்டவர்களெனில் மிக வீரம் மிக்கவர்களே. அந்த செல்வத்தை கண்டறிந்து அதை சுட்டி காட்டும் வல்லமையுள்ள குருவின் கருணையே அந்த செல்வத்தை அடைவதற்கு தேவையான மையாகும். இயற்கையின் மடியில் அடங்கியிருக்கும் ஞானதனமே அந்த புதையல். அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் குன்றாத அந்த செல்வத்தை குண்டலினி வடிவில் உள்ள அரவம் காக்கின்றது.
மண்ணுலக செல்வத்தின் கதையே பொய்யாகி சோதனை வீணாகலாம். ஆயின் நம்முள் மறைந்துள்ள பொக்கிஷம் நூறு சதவிகிதம் உண்மையானது. அதற்கான தேடுதல் வீணாவதேயில்லை. உலகின் செல்வம் அதனை அடையும் முன்னரும், பின்னரும் இன்ப-துன்பங்களையும், லாப- நஷ்டங்களையும் தரக்கூடும். இச்செல்வத்தின் தேடலுக்கு தேவையான சாதனங்கள் அநேகம். இதுவெளியுலகின் ஏழ்மையை மட்டுமே போக்கவல்லது. இச்செல்வம் கிடைக்க கிடைக்க ஆசையை மேன்மேலும் வளர்க்கும். உலகின் தங்கம், வெள்ளி, ரத்தினங்களின் மதிப்பு எல்லைக்குட்பட்டது.
மாறாக நம்முள் மறைந்துள்ள செல்வம் விலை மதிப்பற்றது. அளவிடமுடியாதது. ஆத்ம ஞானத்தை உண்டாக்கி வெளியுலகின் சிறுமையை காட்டும். இது பரமானந்தத்தை மட்டுமே தரும். அளவிலா ஆனந்தமன்றி வேறெதையுமே அளிப்பதில்லை. உள்ளிருக்கும் செல்வத்தை தேட இறைவன் அருளிய உடல்-புலன்கள்-மனம்-புத்தி இவையே போதுமானவை. வெளியுலகின் செல்வம் நிம்மதியின்மை, அச்சம் மற்றும் மரணபயத்தையும் தருவது. ஆயின் உள்ளுறைந்திருக்கும் செல்வம் அமைதியையும், பயமற்ற தன்மையையும் தருவதாகும். மரண பயத்தை போக்கி பரமானந்தத்தின் ரகசியத்தை திறந்தளிப்பது.