ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 6
தேவர்களுக்குள் போட்டியா? விரோதமா?
============================== ====================
தேவர்களுக்குள் போட்டியா? விரோதமா?
==============================
மூலம்: ஶ்ரீரங்கப்ரியர்
தமிழாக்கம்: திருமதி ஜானகி
தமிழாக்கம்: திருமதி ஜானகி
புராண-இதிகாசங்களில் பக்தர்களின் கதைகள் பல காண்கிறோம். இறைவனால் தண்டிக்கப்பட்ட தெய்வவிரோதிகளின் கதைகளையும் காண்கிறோம். அவைகளில் சில கதைகள் பாமரர்களுக்கு புரியாத குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
உதாரணத்திற்கு ராவணன் சிறந்த சிவபக்தன். சிவனை ஆராதித்து அற்புதமான சித்திகளை பெற்றவன். ஹிரண்யகசிபுவும் சிறந்த பக்தன். பிரம்மதேவரை மகிழ்வித்து கிடைத்தற்கரிய வரங்களை அடைந்தான். ஆயினும் மகாவிஷ்ணு ஶ்ரீராமன் மற்றும் நரசிம்ம அவதாரங்களை எடுத்து இவர்களை அழித்துவிட்டார். அவ்வாறே ருத்ரபகவானும் மகாவிஷ்ணுவின் அம்சமான மன்மதனை சுட்டெரித்த கதை அனைவரும் அறிந்ததே. அம்மூவரும் சிறந்த கடவுள் பக்தர்கள். பக்தர்கள் இறைவனுக்கு மிகவும் ப்ரியமானவர்கள். அவ்வாறாயினும் இறைவடிவமான விஷ்ணு-ருத்ர்களால் ஏன் அழிக்கப்பட்டார்கள்? சிவபக்தனை விஷ்ணுவும், விஷ்ணுஅம்சமான மன்மதனை சிவனும் அழித்தனர். ஆதலால் அத்தேவர்களுக்குள் விரோதமா? போட்டியா? சகிப்பு தன்மை இல்லாமையா? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு சிலர் “இவை அனைத்தும் காக்காய்-குருவி கதை அல்லது வெவ்வேறு காலங்களில் மனிதர்கள் தங்கள் கற்பனைதெய்வங்களின் பெருமையை நிலைநாட்ட புனைந்த கதைகள் என சுலபமாக தீர்வு காண முயல்கிறார்கள்.
ஆனால் இது பொருத்தமான பதிலல்ல. அவர்கள் கதையின் அனைத்து பாகங்களையும் மனதில் கொள்ளவில்லை.
ராவணன், ஹிரண்யன், மன்மதன் மூவரும் இறைவனிடம் ஞானத்தை வேண்டவில்லை. மாறாக சரீர- புத்தி-அஸ்திரபலம் மற்றும் சரீரஅழகு முதலிய சித்திகளை வேண்டினர். அந்த சித்திகளை உலகநன்மைக்காக அல்லாது அதர்ம-அநியாய செயல்களுக்கு உபயோகித்தனர். ஆதலால் இவர்கள் விஷ்ணு, ருத்ரரால் அழிக்கப்பட்டனர். ராவணனை சிவபக்தன் என்ற காரணத்தால் விஷ்ணு அழிக்கவில்லை. உலகிற்கே கேடு விளைவிப்பவன் என்பதால் கொன்றார். அதேபோல் மன்மதனை விஷ்ணுவின் அம்சம் எனபதால் அல்லாது தன் சமாதிநிலையை குலைப்பவன் என்பதால் ருத்ரன் சுட்டெரித்தார். இத்தண்டனையினால் அவர்கள் பாவம் நீங்கி நற்கதி அடைந்தனர். இத்தண்டனை மும்மூர்த்திகளுக்கும் சம்மதமே. அதனால் தேவர்களுக்குள் விரோதம், போட்டி எனும் கேள்விக்கே இடமில்லை.