மூலம்: டா. மோகன் ராகவன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
தர்மபாலன் தனபாலன் இருவரும் காசி நகரத்தின் புகழ் பெற்ற வணிகர்கள். வணிகத்தின் பொருட்டு வடக்கு, தெற்கு திசைகளில் பயணம் செய்வர். ஒரு முறை தர்மபாலன் ஏராளமான பொருட்களுடன் அநேக வணிகர்கள், மெய்காவலர்களுடன் எருது பூட்டிய வண்டிகளில் வடக்கு நோக்கி வாணிபத்தின் பொருட்டு பயணித்தான். தனபாலன் முன்னதாகவே சென்றிருந்தார். பல நாட்கள் கடந்தபின் தர்மபாலனின் அணி ஒரு பரந்த பாலைவனத்தை அடைந்தது. முன் எச்சரிக்கையுடன் ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை எடுத்து சென்றிருந்தனர். வழியில் ஒரு முதியவரை சந்தித்தனர். அவர் "என்னை உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள். என்னால் இயன்ற அளவு உங்களுக்கு உதவுகிறேன்" என்றார். உட ன் சென்றவர்கள் அதை கேட்டு நகைத்தனர் "உன்னால் உன் ஊறுகோலை கூட எடுக்க முடியாது. எவ்வாறு எங்களுக்கு உதவுவாய்?" என்றனர். எனினும் தர்மபாலன் அவர்மீது இரக்கம்கொண்டு தன் வண்டியிலேயே பயணிக்கும்படி கூறினான். அவ்வாறு சுட்டெரிக்கும் வெய்யிலில் பயணிக்கையில் எதிர் திசையில் சில பயணிகளின் கூட்டத்தைக் கண்டனர். அவர்களின் உடை நனைந்திருந்தது. "என்ன அழகிய குளிர்ந்த சோலை. அது பயணிகளுக்கு வரம்" என்று கூறிய வண்ணம் இருந்தனர். அதை செவி மடுத்த தர்மபாலரின் துணைவர்கள் "அருகில் ஒரு சோலை இருக்கையில் எதற்காக தண்ணீரை சுமந்து செல்ல வேண்டும் அதன் பளு நம்மை தாமதப் படுதுத்துகிறது" என உத்வேகமாக கூறினர். தர்மபாலனுக்கும் அவர்களின் வாதம் நியாயமாகவே தோன்றினாலும் அருகிலிருந்த முதியவர் "ஐயா அவர்களை நம்ப வேண்டாம். வஞ்ஜகர்கள். பயணிகள் தாகத்தால் சோர்ந்திருக்கையில் கொள்ளையடிப்பவர்கள்" என்றார். தர்மபாலன் குழம்பினார். முதியவரின் சொற்களை புறக்கணிக்க இயலாமல் தன்னுடன் வந்தவர்களை சேமித்த நீரை வீணாக்காது பயணிக்கும்படி அறிவுறுத்தினான். சிலர் அதனை விரும்பவில்லை. தனபாலனுடனேயே சென்றிக்கலாம் என குறை கூறினர். ஆனால் சில தினங்களின் பயணத்திறகு பின்னும் சோலை எதுவும் புலப்படவில்லை. அதற்கு பதிலாக தனபாலனும் அவனுடன் சென்றவர்களும் அனைத்து பொருட்களுடன் கொள்ளையடிக்கப்பட்டு வருந்துவதை கண்டனர். "பெரியவரே உங்களுக்கு எப்படி தெரிந்தது? உங்கள் கூற்று உண்மை" என்று வினவினார். முதியவர் கூறினார் "அவர்களின் உடை நனைந்திருப்பினும் அருகில் சோலை இருப்பதை உணர்த்தும் வண்ணம் வான் வெளியில் பறவைகளை காணவில்லை. அவர்கள் கண்களை கூர்ந்து நோக்கும்போது தீய எண்ணத்தை அறிய முடிந்தது."
நம் உடலே காசி பட்டணம். நம் புலன்களின் மூலம் உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம். வெளி உலக வியாபாரம் என்பது பாலைவனம் போன்றது. உள் உலக பரந்த வெளியில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த குளிர்ந்த சோலை உள்ளது. புலனின்பங்களை நோக்கிய நம் எண்ணங்கள் கானல்நீர் போல் தோன்றி நம்மை மயக்கும். வாழ்க்கையின் வியாபாரத்தில் நாம் இயற்கையாகவே செல்வாக்கும் செல்வமும் கொண்ட தனபால் போன்றவரிடம் ஈர்க்கப்படுகின்றோம். அமுதத்தை துறந்து நம் புலன்களால் பின்னப்பட்ட மாய வலையில் சிக்கி அச்செல்வத்தை இழக்கிறோம். பழமையான, அறிவுசார்ந்த அறத்தை வலிமையற்றதாக கருதி புறக்கணிக்கிறோம். ஆனால் அறம் உண்மையை உணர்த்தி நம்மை காக்கும். விழிகள் பார்வையையும், செவிகள் கேட்கும் திறனையும் அளிப்பது போன்றே ஆன்மாவின் தர்மம், ஆத்மதர்மம், உள்உறையும்.
சத்தியத்தின் திரையை விலக்குகிறது. இத்தகு தர்மம் காக்கப்பட்டால் நம் உள்ஒளியை உணர்த்தி நம்மை மீட்டெடுக்கும். நம் புலன்களை கட்டிற்குள் வைத்திட உதவும். தர்மம் காக்கப்பட்டால் தர்மமே நம்மை காக்கும் எனும் உயரிய தத்துவம் மேன்மை பொருந்திய மஹாயோகி ஸ்ரீரங்கமஹாகுருவினால் எடுத்துரைக்கப்பட்டது.