Wednesday, February 26, 2020

மௌன அறிவுறையின் மகத்துவம் (Mauna arivuraiyin makattuvam)

மூலம் : ஸ்ரீசுப்ரமண்ய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



அது ஒரு ஆலமரம். அங்கு ஒரு வினோதமான காட்சி. குருவை சுற்றிலும் சீடர்கள் அமர்ந்திருக்கின்றனர். சீடர்கள் அனைவரும் முதியவர்கள். குருவோ இளைஞன். குரு  வாய்பேச்சின்றி உபதேசிக்கிறார். சீடர்களின் ஐயமனைத்தும் நீங்குகின்றதாம். இது சங்கரபகவத்பாதரின் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் மொழிபெயர்ப்பு.

பொதுவாக குரு வயது முதிர்ந்தவராகவும் சீடர்கள் இளைஞர்களாகவும் இருப்பர். ஆயின் இங்கு அதற்கு எதிர்மறையாக உள்ளது. மற்றும் மௌனம்,  விமர்சனம் இரண்டும் ஒன்றாக இருப்பது எங்ஙனம்?  மௌனமாயிருத்தல் வேண்டும் , இல்லாவிடில்
தர்க்கம் அல்லது உவமைகளின் மூலம் விளக்க வேண்டும். அடுத்தது இன்னும் புதுமை! இவனின் வாய்பேச்சற்ற விளக்கத்தால் சீடர்களின் ஐயங்களனைத்தும்  நீங்கியதாம்! உலகில் பலமுறை வகைவகையான சொற்களால் தெளிவுபடுத்தினாலும்  புரியாத சந்தர்பங்களும் உண்டு. இங்கு இவன் பேசுவதே இல்லை. ஆயினும்

அவர்களின் ஐயங்கள் தீர்ந்தது எவ்வாறு? அனைத்தும் வியப்பல்லவா?
ஸ்ரீரங்கமஹாகுரு இவ்வாறு விளக்கினார். அங்கு குறிப்பிட்ட ஆலமரம் தேவவ்ருக்ஷம். அதன் அடிவாரத்தில் முதன்மை பொருளான பரமசிவன், தக்ஷிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறான். அவனே உலககுரு. அவன் காலங்களை கடந்தவன். காலங்களை இயக்குபவன். எனவே காலத்திற்குட்பட்ட  முதுமை அவனிடத்தில் இல்லை.  என்றும் இளமையுடனுள்ளான்.

சீடர்களோ காலத்திற்கு உட்பட்டு உன்னதமான பரம்பொருளின் தேடுதலில் முதுமை அடைந்துள்ளனர். சீடர்களுக்கு உன்னதமான சத்யத்தை குறித்த ஐயம் எழுகையில் எதிரில் அமர்ந்துள்ள சத்யமே வடிவான பரமசிவ மூர்த்தியை காண்கின்றனர். அவன் உட்பொருளின்(சத்யத்தின்) உச்சத்தில் அமர்ந்துள்ளான். அவனை கண்டவுடன் இவர்களின் புலன்களனைத்தும் அவனையே சார்ந்து அந்த உயர்ந்த சத்தியத்தின்பால் சென்றுள்ளன. அச்சத்தியத்தின் ஒளியால் வாழ்வின் அனைத்து ஐயங்களும் நீங்கியுள்ளன. சொற்கள் மிகக்குறுகிய சாதனம். தக்ஷிணாமூர்த்தியின் மௌனமே எல்லா உன்னத சத்தியங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. படைப்பின் தொடக்கம் மற்றும் அதன் விரிவாக்கம் அனைத்தும் அவர்களின் அக கண்ணிற்கு புலப்பட்ட பின் அவர்களுக்கு எந்த ஐயமும் இல்லை.

அத்தகைய தக்ஷிணாமூர்த்தி நம் அனைவரின்  இருளை நீக்கி உள்ஒளியை பெருக்க  வேண்டுவோம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs  ல் காணலாம்