Friday, February 7, 2020

ஶ்ரீரங்கமஹாகுரு - 56 (Sriranga Mahaguru - 56)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 45

எந்த தேவதைக்கு வணக்கம்
===========================================================

மூலம்: வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: தமிழாக்கம்
மின்னஞ்சல் : lekhana@ayvm.in


ருக்வேத காலத்தில் இந்திரனே முழுமுதற்கடவுள் என்று வணங்கப்பட்டான். அக்னிக்கும் முன்னுரிமை இருந்தது. பிறகு சத்தியத்தின் காவலனான, நீதி-நியமங்களின் தேவனான வருணதேவனும்  ஆராதிக்கப்பட்டான். பின்னர் ப்ரஜாபதி அவரின் இடத்தை பிடித்தார். புராணங்களில் திருமாலும், சிவனும் முதன்மை அடைந்தனர். இவ்வாறிருக்கையில் எந்த தேவனை வணங்குவோம்? "கஸ்மை தேவாய ஹவிஷா விதேம"என்னும் பிரச்சினைக்கு தீர்வே  கிட்டவில்லை. இவ்வாறே மனமென்னும்   தொழிற்சாலையில்  காலபோக்கில் உருவான தேவதைகளனைவரும் இப்போது மறைந்துள்ளனர். நமது காலத்தில் இறைவன் என்னும் ஒருவன் இல்லவே இல்லை என்றும் சிலர் (நாத்திகர்) கூறுகின்றனர். "இறைவன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்” என சில (அஞ்ஞேயவாதிகள்) ஆராய்ச்சியாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். "இறைவன் என்று தனியாக ஒருவன்(ஒன்று) இல்லை.  நமது குறிக்கோளே இறைவன்" என்பது மற்றும் சிலரின் கருத்து. இறைவனை குறித்த இவ்வகை எண்ணங்கள் யாவும் மனிதனின் அறிவு வளர்ச்சி, மற்றும் கவிதைத்திறனின் வெவ்வேறு நிலைகள் என்று சிலர் சாமர்த்தியமாக வாதிடுகின்றனர்.

            மேற்கண்ட வாக்கியங்கள் கேட்பதற்கு  இன்பமாக இருப்பினும்  பகுத்தறிவாளிகள் ஒப்புவதில்லை. மேற்கூறிய ஆத்திகர், நாத்திகர் மற்றும் இடைபட்டவர்கள்  இவர்கள் யாரும் வரலாற்றில் புதியவர்களல்ல. இத்தகு கருத்துக்கள் அனைத்தையும் பண்டைகால இலக்கியங்களிலும் தெளிவாக காண்கிறோம். உதாரணத்திற்கு "இந்த படைப்பு எங்கிருந்து தொடங்கியது என்று யார்தானே அறிவர்” என்று ருக்வேதம் ஓரிடத்தில் வினவுகிறது. "உடலே ஆத்மா மற்றொரு தெய்வமில்லை" என்னும் அரக்கர்களின் உபநிஷதத்தை விரோசனன் சாந்தோக்ய உபநிஷத்தில் வலியுறுத்துகிறான். "உடல் அழிந்த பின்னும் ஆத்மா நிலைத்திருக்கும்” என்று சிலரும் இதனை மறுத்து சிலரும் கூறுகின்றனர் என்னும் கற்றறிந்தவர்களின் ஐயத்தை கடோபநிஷத்து கூறுகிறது. இவ்வாறிருக்கையில் நாத்திகர்கள் மற்றும்  இடைபட்டவர்கள் புதிய தலைமுறையின் சந்ததிகள் என்பது முட்டாள்தனம்.

               "கஸ்மை தேவாய" என்பது எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் எனும் ஐயத்தின் பொருள்பட வந்ததல்ல. "ப்ரஹ்மதேவனல்லாது வேறு எந்த தேவதைக்கு (ஹவிஸை)பூஜையை அர்ப்பணிப்போம்!?" பூஜையை ஏற்றுக்கொள்ளும் மகிமை உடையவர் ப்ரஹ்மதேவரே என்னும் கருத்தையே வலியுறுத்துகின்றன அச்சொற்கள். அது ஹிரண்யகர்ப்ப ஸூக்தத்தில் காணப்படுகிறது. இவ்வாறு அச்சொற்றொடர் வந்திருக்கும் சூழலை கவனியாமல் திடீரென தோன்றிய பொருளை கூறுவது சரியாக கல்லாததன் பயன்.

            அவ்வவாறே இந்திரன், வருணன்  போன்றவர்களுக்கு வெவ்வேறு காலங்களில் முக்கியத்துவம் இருந்தது என்பதும் சரியான கருத்தல்ல. ஏனெனில்  புலன்களுக்கு தேவதை  இந்திரன், மித்ர-வருணர்கள் ப்ராண-அபானத்தின் அதிதேவதைகள். வருணன் நீதிதேவதை மற்றும் கர்மங்களுக்கு தேவையான நீருக்கு அதிதேவதை. விஷ்ணுவும், சிவனும் பாதங்கள் மற்றும் மனதிற்கு அதிதேவதைகள், மற்றும் யோக-போகங்களை அருளும் தேவதைகள் என எல்லா சாஸ்திரங்களும் உரைக்கின்றன. புலன்கள் மற்றும்  ப்ராணத்திற்கு வலிமை, நீதி, வலிமை, இவ்வுலக சுகம் மற்றும் வீடுபேறு முதலியவைகள் எல்லா யுகங்களிலும் மக்கள் பெற விரும்புவனவே. எனவே இவற்றை அளிக்கவல்ல இறைவனின் அனைத்து உருவங்களும் எல்லா காலத்திலும் எல்லா மக்களும் வழிபட தகுந்தனவே. அவற்றின் பெயர்கள் வேறாயினும் ஸ்வரூபம் மாறுவதில்லை.