Wednesday, February 19, 2020

கம்பளியை விடு (Kampaliyai vitu)

மூலம்: Dr. ஸி.ஆர். ராமஸ்வாமி
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல்:  lekhana@ayvm.in
கிராமத்தில் ஓர் சலவை தொழிலாளி துணிகளை துவைக்க நதிக்கு எடுத்து செல்வது வழக்கம். ஒரு நாள் கம்பளம் ஒன்று கை நழுவி   நீரில் அடித்துச் சென்றது. 'ஐயோ, போய்விட்டதே' என இவனும் நீரில் குதித்து ஒருவாறு கம்பளத்தை பிடித்து விட்டான். ஆயினும் நீரின் வேகம் அதிகரித்ததால் கம்பளியுடன் இவனையும் இழுத்து செல்ல தொடங்கியது. கம்பளியா அல்லது உயிரா எனும் கேள்வி. அதை கைவிட்டாலொழிய கரை சேருவது முடியாது. கரையில் இவனுடைய நலம் விரும்பிகள் சிலர் "கம்பளியை விட்டு விடு. கரை சேர முயற்சி செய்" என கூவினர். சலவை தொழிலாளி கூறினான்: "நானும் அதற்குதான் முயற்சிக்கிறேன். ஆனால் நான் கைவிட்டாலும் அது என்னை விடுவதாக இல்லை! என்ன செய்வது?"

ஏனெனில் அவன் பிடித்திருந்தது கம்பளம் அல்ல. ஒரு கரடியை!! இவன் விட்டாலும் அது இவனை விடாத பரிதாப நிலை!!
சலவை செய்பவன் நிலை என்னவாயிற்றோ தெரியாது. ஆனால் நாமும் வாழ்க்கை வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது உறுதி. சில நேரங்களில் குறிக்கோளை மறந்து எதையோ பின்பற்றி காலத்தை வீணாக்குகிறோம். அக்கம் பக்கம் உள்ளவர்களும் அதற்கு உரமிட்டு வளர்க்கிறார்கள். மற்றொருபுறம் நம் நலம் விரும்பிகள் கூற்றும் நமக்கு ருசிப்பதில்லை. படிப்படியாக வாழ்க்கையில் சுழல்கள் போன்ற நிகழ்வுகளை கண்டு விழிப்புணர்வு ஏற்பட்டாலும் கரடியை போல் அவை நம்மை விடுவதில்லை.

இவ்வாறான சூழ்நிலைக்கு ஆளாகாமல் இருக்க வாழ்க்கையின் குறிக்கோளையும் அதை அடையும் சீரான பாதையையும் அறியவேண்டியது அவசியம். அவ்வாறான பாதையை தவத்தின் மூலம் கண்டறிந்து மிக்க இரக்க குணம் கொண்ட மகரிஷிகள் நமக்கு உபதேசித்தனர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உட்கொண்ட வாழ்க்கை முறைதான் அந்தப் பாதை என உரைத்தனர். பொருள், இன்பம் எனும் இரண்டை மட்டும் அடைய நினைத்தால்  ஆரம்பத்தில் அது கம்பளியைப் போல் தோன்றி முடிவில் கரடியாக மாறுவது திண்ணம். ஆனால் வீடுபேற்றை(மோக்ஷத்தை) குறிக்கோளாக மேற்கொண்டால் கரை சேர்வது உறுதி. அப்படியானால் வாழ்க்கையில் பொருள், இன்பம் இரண்டும் தேவையே இல்லை என்பது பொருள் அல்ல. ஆயினும் அவற்றை தர்மத்துடன் இணைத்து கடைபிடித்தால் கம்பளியும் கிடைத்து கரடியின் சித்திரவதையும் தப்பியது எனும்படி புலன்களின் இன்பத்தையும் அளித்து மோக்ஷத்திற்கும் வழி வகுக்கும். "பொருள், இன்பம் என்பவை முரட்டு பசுவை போன்றவை. அவற்றை கறக்க முயன்றால் உதைத்துவிடும். ஆனால்  அவற்றை தர்மம்-மோக்ஷம் என்ற கம்பங்களுக்கு கட்டி கறந்தால் அம்ருதத்தையே கறக்கும்" என யோகிகளில் தலை சிறந்து விளங்கிய ஸ்ரீரங்கமஹாகுரு அவர்கள் அருளியதை நினைவில் கொள்ளலாம்.

குறிப்பு : இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs  ல் காணலாம்