Friday, July 19, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 12 (Sriranga Mahaguru - 12)

ஸ்ரீ குருவின் கண்ணோட்டம் - 1

ஆயுள் காப்பீடு (Life insurance)
_______________________


ஸ்ரீ சாயாபதி என்பவர் எழுதியதின் தமிழாக்கம் -- திருமதி ஜானகி


ஆயுள் காப்பீடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பல விபத்துகள் நிறைந்த இவ்வாழ்க்கையில் யாருக்கு எப்போது மரணம் நிகழும் என்பதை அறிபவர் யார்? நிச்சயமற்ற இச்சூழ்நிலையில் சிறிதளவாவது ஆறுதல் அளிப்பது ஆயுள் காப்பீடு. எதிர்பாராது மரணத்தை தழுவும் நபரின் குடும்பத்திற்கு ஓரளவு நிதியுதவி வழங்கும் திட்டம் இது.

            இது சிறந்ததாலும் உயிர் துறந்த அந்த ஜீவனுக்கு இதனால் ஏற்படும்  லாபம் தான் என்ன? அந்த ஜீவன் இதனால் எவ்வாறு நிம்மதி அடைய முடியும்? அதன் நிம்மதிக்கும் சுகத்திற்கும் எவ்விதத்திலும் உபயோகமற்ற இத்திட்டம் ஆயுள் காப்பீடு எவ்வாறாகும்?

            அந்த ஜீவனுக்கு உயிருடனோ அல்லது உயிர் நீத்த பிறகோ நிம்மதியை தரும் காப்பீடு ஏதாவது உள்ளதா?  ஜீவத்திற்கு நிம்மதி அளிக்கும் இத்தகைய  காப்பீடு எவ்வாறு சாத்தியம்? ஆயுள் காப்பீடு எனும் சொல்லின் ரகசியத்தை உணர்ந்து இப்புதிருக்கு பொருத்தமான விளக்கத்தை அளித்தவர் ஶ்ரீரங்கமஹாகுரு.

            உலகவழக்கிலுள்ள காப்பீடு தேகத்தையும் குடும்பத்தையும் காப்பதற்கு உதவுகிறது. ஆனால் ஜீவனுக்கு உடலில் உள்ள போது நிம்மதியை அளிப்பது மட்டுமின்றி,  உடலிலிருந்து பிறிந்த பிறகும் தன்னுடைய உதவியினால் நிம்மதியளிக்கும் ஒரு செல்வம் உண்டு. அதுவே ஞானம் எனும் செல்வம். தேகத்தினுள் ஒரு மையத்தில் விளங்கும் ஓர் பேரொளி. அங்கே அதை காண்பவர்க்கு பேரானந்த அமுதமளிக்கும் ஆனந்த நிலை. உயிர் உள்ள போதே அதை அடையும் வழிமுறைகளை அறிந்த ஞானிகளின்  வழிகாட்டுதலினால் அச்செல்வத்தை  அடையலாம். அவ்வாறு அதை ஒறுமுறை அடைந்த பின் உயிர் பிரிந்தாலும் ஜீவன் அப்பேரொளியின் மடியிலேயே நிம்மதி காணுமாறு தன்னிடம் கவர்ந்திழுக்கும் பெரும் செல்வம் அது. அச்செல்வத்தை பெறுவதற்கென்றே காப்பீடு செய்வதானால் அதுவே உண்மையான அர்த்தத்தில் காப்பீடாகும். அப்பெரும் செல்வத்தை தான் அடைந்து பிறர்க்கும் அந்நிலையை காண்பிக்கவல்ல நேர்மையான ஓர் சத்குருவினிடம் அடைக்கலம் பெற்றால்தான் அது ஜீவனுக்கு உண்மையான காப்பீடாகும்.

(அடுத்த வியாழனன்று தொடரும்)