Thursday, August 18, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 21 கொல்வது கருணையா ?(Kolvadu karunaiya?)

மூலம்: திரு. வரததேசிகாசார்யர்

தமிழாக்கம்: திருமதி வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



இறைவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை, எப்போதும் நடுநிலை வகிப்பவன், கருணைக்கடல் என்பது குறித்து குருபாதராயணரிடமிருந்து ஜைமினி முனிவர் அநேக விவரங்களை கேட்டறிந்தார். குரு அருளிய அமுதினை ஒத்த சாஸ்திர சம்மதமானசொற்கள் அவர் அறிவு-,மனம்-இதயத்தில் ஒளியூட்டின. ஆயினும்புதிதாக தோன்றிய சில ஐயங்களை குருவிடம்விண்ணப்பித்துக்கொண்டார்.                     

      

"குருவே! இந்த படைப்பின் துவக்கத்திலும், காக்கும்நிலையில்  எல்லா உயிரினங்களையும்  காப்பாற்றுவதிலும் அவன்கருணையை  காண்கிறோம். துயரங்களையும் களைந்து நிலையானமெய்யறிவு இன்பம், இறையனுபவம் முதலியவற்றை அருளுவதுஅவனது கருணையின் உச்சமேயாகும். ஆனால் அவனது அழிக்கும்தொழில் எவ்வாறு கருணையாகிறது? இன்னும் உயிர்வாழவேண்டுமென்பதே எல்லா உயிரினங்களின் வேட்கையாகும்.துன்புறுத்தாமையே உயரிய அறம். அவ்வாறிருக்கையில்அனைத்தையும் அழிக்கும், துன்புறுத்தும் ருத்ரன் எவ்வாறுகருணையுள்ளவனாகிறான்?

 

பாதராயணர்: இறைவனின் திருவடிகளை அடைந்த புண்ணியஜீவன்களுக்கு என்றும் அழிவில்லை அல்லவா?

         

ஜைமினி: அத்தகையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.படைத்தல் காத்தலுக்குப்பின் அழித்தலுக்கு உட்படுபவரே எண்ணில் அடங்காதவரல்லவே? அவர்களை இறைவன் ஏன் அழிக்கவேண்டும்? 

          

குரு: இறைவன் தூக்கத்தை அளித்திருப்பது  நன்மையா, தீமையா?அதனை அளித்தவன் இரக்கமுள்ளவனா? கொடியவனா?

 

ஜைமினி: அதனை அளித்தவன் மிகவும் கருணையுடையவன்.அவ்வாறு இல்லாவிடின் அமைதியே இருந்திராது.

 

குரு: உறக்கத்தில் உணவு இசை, பானம் முதலிய எந்த நன்மையும்கிட்டுவதில்லையன்றோ! எல்லா புலன்களும் ஒடுங்கி மரணத்தைப்போன்று சலனமற்றிருக்கும் அந்நிலையை ஏன் விரும்புகிறாய்?

ஜைமினி: அந்நிலையில்  அனைத்து புலன்களும்ஓய்வடைகின்றன. விழித்திருக்கையில் உழைத்து களைத்தஉறுப்புகளனைத்துக்கும் ஓய்வு கிட்டுகிறது. விழித்தெழும்போதுமுன்பைவிடவும் அதிகமாக உழைக்க இயலும். அது இறைவன்அளித்துள்ள வரமாகும். அவனின் கருணையின் பெரிய அடையாளம்.

 

குரு: உலகத்தை அழித்தலும் அவ்வாறேயப்பா. காலம்காலமாகவினைபயனை அனுபவித்து வரும் உயிரினங்கள் மிகவும்களைத்திருக்கும். ப்ரளயத்தால்  அழியும்போது அவற்றிற்கு  நிரந்தரஓய்வு கிடைக்கும். மீண்டும் படைப்பு தொடங்கும் போது தங்களின் மீதமுள்ள வினைப்பயனை அனுபவிக்கும்வலிமை  அவற்றிற்கு கிட்டும். இதற்கு காரணமான அழித்தல் தொழில் புரியும் இறைவனும் கருணை உள்ளவனல்லவா?.