Thursday, August 11, 2022

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 20 கல்லையும் மண்ணையும் பூஜிக்கலாமா? (Kallaiyum mannaiyum poojikkalaama?)

மூலம்:  திரு. வரததேசிகாசார்யார் 
தமிழாக்கம் : திருமதி ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)

 

 "நம் நாட்டில் மிக பழமையான தர்மம், கலாச்சாரம், நல்வழக்கங்களின் பரம்பரையை காண்கிறோம். இது மிகவும் மேன்மையான ஓர் விஷயமே ஆயினும் இங்கு கல்லையும் மண்ணையும்  பூஜிக்கும் வழக்கமும் வளர்ந்து வருகிறது. இது ஒன்று மட்டுமே தலை குனிவை ஏற்படுத்துவதாக உள்ளது."


         "கல்லையும் மண்ணையும் இங்கு யார் பூஜிக்கிறார்கள்?"


          "இவ்வாறான பழக்கம் உள்ளவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். அறிவாளிகளும்,  விவேகிகளும்  கூட அவற்றை கை கூப்பி வணங்குகின்றனர். பழம் பூ முதலியவற்றை அதன் முன்னிட்டு பூஜிக்கின்றனர்.


       "அப்பூஜை நிறைவுற்றதும் 'கல், மண்ணுக்கு  பூஜை ஆயிற்று. அவை நம்மை காக்க வேண்டு'மென்று கூறுகிறார்களா?"


             "இல்லை, 'இறைவனின் பூஜை ஆயிற்று, அவர் நம்மை காத்தருள வேண்டும்' என கூறுகின்றனர்."

               "அவ்வாறாயின் அது இறைவனின் பூஜையே அன்றி கல் அல்லது மண்ணின் பூஜையன்று. அவர்களும் அவ்வாறு உரைப்பதில்லை. இவ்வாறிருக்க  நீ ஏன் அவர்களை  இவ்வண்ணம் குற்றம் கூறுகிறாய்?"

                "என் கண்களுக்கு அது நன்றாக புலப்படுவதால் கூறுகிறேன்"


                  "அவர்கள் ஏதோ ஓர் கல்லிற்கும் மண்ணிற்கும் மனம் போனவாறு பூஜிப்பதில்லை.  விசேஷ பொருட்களில் தெய்வசக்தியை பூரணமாக  நிறைத்து  ப்ராண ப்ரதிஷ்டையும், சக்தியையும் உண்டாக்கிய பிறகே பூஜிக்கிறார்கள். அவ்வுணர்வு அற்றவர்களுக்கு அது கல் மற்றும் மண்ணாக காணப்படுகிறது. ஆனால் விதிப்படி பூஜிப்பவரை நிந்திப்பதும் முறையன்று. கொஞ்சினால் குழந்தை, பூஜித்தால் இறைவன் என்ற ஆன்றோர்  வாக்கை அறியவில்லையா?"


               தேசிய கொடிக்கு அனைவரும் வணக்கம் செலுத்துகிறார்கள். அது ஓர் சாதாரண துணி தானே? துணிக்கு வணங்குவது மூடத்தனமல்லவா என்றால் அங்கே துணிக்கு மரியாதை அல்ல. அதன் பிண்ணனியில்   உள்ள தேசப்பற்றிற்கு  தான்  எனும் உதாரணத்தை ஶ்ரீரங்க மஹாகுருவானவர் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தினார்.