Thursday, 24 June 2021

நாமத்தை உச்சரித்தால் மட்டுமே போதுமா? (Naamattai uchcharittaal mattume podumaa?

மூலம்: வாதிராஜ் பிரசன்னா 

தமிழாக்கம்: வனஜா 

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இறைவனை(முக்தியை) அடைய பக்தி மார்க்கம் எளிதானது என்பது பரவலான நம்பிக்கை.  பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும், விஷ்ணு பக்தர்களின் மனதிற்குகந்த அஜாமிளனின் கதையை காண்போம் 

         

ஒரு காலத்தில் கன்யாகுப்ஜம் எனும் நகரில் நற்பண்புகள் நிறைந்த அஜாமிளன் எனும் அந்தணன்  வாழ்ந்து வந்தான். ஒரு விலைமாதின் மேல் மோகம் கொண்டு அவளுடன்வாழ்ந்து 10 குழந்தைகளை அடைந்தான்.  எல்லோரை காட்டிலும் கடைசி மகனான "நாராயணன்" மேல் அதிக பற்று கொண்டிருந்தான். கன்யாகுப்ஜம் திருட்டு, ஏமாற்று, சூதாட்டம் போன்ற தீய வற்றிற்கு பெயர் போனது. அஜாமிளனும் இவற்றிற்கு அடிமைப்பட்டான். 


இவ்வாறு வாழ்கையில் 85வது வயதில் மரணம் வாயிலை தட்டியது. பயங்கரமான உருவம் கொண்டு கையில் பாசக் கயிற்றுடன் மூன்று யம கிங்கரர்கள் அவன் முன் தோன்றினர். அவர்களை கண்டவுடன் அச்சத்துடன் தன் மகனை "நாராயணா" என்று கூவினான். உடனே தெய்வீக  உருவுடன் விஷ்ணு தூதர்கள் அவன் முன் தோன்றினர். இரு தரப்பினருக்கும் இடையில் சொற்போர் நிகழ இறுதியில் விஷ்ணு தூதர்கள் மற்றவரை விரட்டி அஜாமிளனை வைகுந்தத்திற்கு அழைத்து சென்றனர். இது உலகமறிந்த கதை.


                 ஸ்ரீரங்க மஹாகுரு விளக்கமளித்துள்ள இக்கதையின் கருத்து நினைவுகூறத்தக்கது. "அஜாமிளனின் கதையில் தத்துவார்த்தம் உள்ளது. மூன்று யம தூதர்கள் தோன்றியது அவன் மனம், மெய், வாக்கு எனும் முக்கரணங்களால் செய்த கொடிய பாபத்திற்கான  தண்டனையை குறிக்கிறது. பத்து  குழந்தைகள் பத்து இந்திரியங்களை(புலன்களை) குறிக்கும். அஜாமிளன் பத்தாவது மகனை கூவி அழைத்தது அவன் பத்தாவது இந்திரியத்தின்பால் கொண்டிருந்த அளவற்ற பற்றை குறிக்கிறது."


"தொடர்ந்து, அஜாமிளனின் கதையை முழுமையாக அறிந்து கொள்ளுதல் அவசியம். அவன் நற்பண்புகள் கொண்ட பகவத் பக்தனாக சிறு வயதில் விளங்கினான். மனபூர்வமாக இறை உணர்வோடு "நாராயணா" எனும் நாமத்தை பலமுறை முன்பு உச்சரித்திருக்கின்றான். பின்பு தீய சேர்க்கையால் விலங்கை போன்ற வாழ்க்கை வாழ்ந்தான். மரண படுக்கையில் தன் மகனின் பெயரை கூவி அழைப்பினும் அவனையும் அறியாமல் அவன் உச்சரிப்பு இறைவனின் நாமத்தை கூறுவதுபோல் மாறியது. அது அவன் முன் செய்த நல்வினையின்(ஸம்ஸ்காரத்தின்) பலனேயாகும். அதன் பின்னரே அவனுக்கு விஷ்ணு தூதர்களை தரிசிக்கும் பேறு கிட்டியது. பின்னர் கங்கை கரையில் தன் தவறுகளுக்காக வருந்தி தவம் செய்த பின் வைகுந்தத்தை அடைந்தான்.'


            யாரொருவர் பரம்பொருளின் "நாராயணா" எனும் மந்திரத்தை பக்தியுடன் உச்சரிக்கினறனரோ அவர்கள் நற்பேறடைவது திண்ணம். எவ்வாறேனும் இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அதன் உண்மை பொருளை கற்றுணர்ந்து அனுபவித்து ஒருநாள் முக்தியை அடைய இயலும். இதுவே அதன் மகிமையை கொண்டாடி மதிக்க காரணம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் 
AYVM blogs ல் காணலாம்.To know more about Astanga Yoga Vijnana Mandiram (AYVM) please visit our Official Website, Facebook and Twitter pages