Friday, May 3, 2019

ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahapurusar Srirangamahaguru Part-4)

திரு எஸ்.வி.சாமு அவர்களின்  மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி
                   
                                                                      Part 4

( தமிழாக்கம்:   ஶ்ரீமதி வனஜா )

இஶைஞானி ஶ்ரீரங்கமஹாகுரு : -

அநேக வித்வான்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாகி அவர்களால் பல்வேறு விதமாக அடையப்பட்ட சங்கீத கலையைஶ்ரீரங்கமஹாகுரு  தன் அந்தரங்க கம்பீரத்திற்கு ஏற்ற வகையில் அடைந்த கலாபுருஷனாக திகழ்ந்தார். அவர் சங்கீதத்தின் வெவ்வேறு பாகங்களில்உள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து, அற்புதமான முறையில் இக்கலையை தன்வயப்படுத்தி கலா தேவியைஆராதித்து சந்தோஷிக்கச் செய்த மஹா காந்தர்வ புருஷனாக விளங்கினார்.   
இசைக்கலையின்  நுணுக்கங்கள் :-

எந்த ஒரு பாடலையும் பாடுவதற்கு  முன் அதன் முழுமையான பொருளை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லும் அதனதன்முழு உருவோடு தோன்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் கேட்பவர்க்கு அதன் உள்ளுணர்வு(பாவம்) புரிவது கடினம் என்பது அவரது கருத்து.
பரந்த கண்ணோட்டம், எல்லாவற்றிலும் கூர்மையான அறிவு மற்றும் ஆழ்ந்த அனுபவ திறமை கொண்டிருந்த மஹாகுரு  தான் அனுபவித்தஆன்மிக உணர்வுகளனைத்தையும் ராகத்துடன் கூடிய இசை மொழியில் வெளிப்படுத்தி பிறரும் அதே உணர்வுகளை ரசிக்கும்படி செய்யும்திறமையுடன் திகழ்ந்தார்.
நாதவிஞ்ஞானி ஶ்ரீரங்கமஹாகுரு:-
நமது உடலில் யோகமார்கத்தில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களை நம் மனம் ஸ்பர்சிக்கும் பொழுதுதான் மனதில் (ஆன்மீகமுன்னேற்றத்திற்கு துணைபுரியும்) நவரசங்கள் உற்பத்தியாகின்றன;  இந்த உண்மையை உணர்ந்த இவர் அவைகளின் உற்பத்தி ஸ்தானங்களைகண்டறிந்து அந்த அனுபவங்களை தான் உணர்ந்த பிறகு அதை அவ்வாறே வெளிக் கொணரும் திறமை கொண்டிருந்தார். உலகெலாம் நாதமயமானது எனும் ரகசியத்தை அறிந்த அவர் ஒரு பெரும் நாத விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் .  



பாடல்களும் அவைகளுக்கான ராகங்களும் :-
ஶ்ரீரங்கமஹாகுருவின்  குரல் மென்மையாகவும், இனிமையாகவும், பிறர் மனதை கவர்ந்திழுக்கும் திறமையுடனும் மற்றும்எவ்விதமாயினும் மாறும் தன்மையும் கொண்டிருந்தது.

ஒவ்வொரு பாடல் வரியின் பொருள் மற்றும் பாவத்தை அனுசரித்து இயற்கையே அதற்கு ஒரு ராகத்தை வழங்கியிருக்கிறது என்பதை அறிந்துகூறினார். ஒரு பாடகன் அதை தன் கூர்மையான புத்தியினால் பரிசோதித்து அறிந்த  பிறகே பாடலுக்கான ராகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவலியுறுத்தினார்.

ஶ்ரீரங்கமஹாகுரு  பாடல்கள், ராகங்கள், தாளங்கள் உள்ளன என்று தோன்றியவாறெல்லாம் ராகங்களை தேர்வு செய்யாமல் அவைஎவ்விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனும் விஞ்ஞானத்தை குறித்து ஆழ்ந்த பரிசோதனைக்கு பின்னரே ராக நிர்ணயம் செய்தார்.

250க்கும் அதிகமான பாடல்களுக்கு மேற்கூறியவாறு ராகங்களை தேர்வு செய்து அவைகளின் மூலம் தன்னுடைய ஆழ்ந்த அனுபவம், பரந்தகண்ணோட்டம், ஞானம், விஞ்ஞானம், கலை முதலியவற்றை வெளிப்படுத்தினார். இவர் ராக நிர்ணயம் செய்த பாடல்களில் அவர் மிகவும் போற்றிபுகழ்ந்த ஆதிசங்கரரின் பஜகோவிந்த ஸ்தோத்திரம், நாராயணஸ்துதி, பகவந்மானஸ பூஜை முதலியவை மற்றும் வால்மீகி ராமாயணம், துளசிராமாயணம், கம்ப ராமாயணம், திராவிட திவ்ய ப்ரபந்தம், பாகவதம், பகவத்கீதை முதலிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இடம்பெற்றன.    
          
சங்கீத கலையின் நோக்கம் :-
ஶ்ரீரங்கமஹாகுரு தன்னுடைய அசாதாரணமான கலைத் திறன்கள் அனைத்தையும், தான் பரிபூரண ஞான நிலையில் எந்தபரம்பொருளைக் கண்டாரோ, அதன் பெருமையை போற்றி புகழ்வதற்கே உபயோகித்தார்.
        
சங்கீத கலைக்கு ஆத்மானுபவத்தை வெளிப்படுத்துவதை தவிர வேறு எந்த உன்னதமான நோக்கமும் கிடையாது என்ற கருத்துடையவராகஇருந்தார். ஒருபுறம் ஆத்மானுபவத்தையும், மறுபுறம் நாத வித்யையின் மூலத்தையும்  அடைந்தவரான ஶ்ரீரங்கமஹாகுரு இக்கலையை நாதப்ரஹ்மத்தின், சப்த ப்ரஹ்மத்தின் இறுதியில் அடையும் பரம்பொருளின் உபாசனைக்கே உபயோகித்தார்.
           
ஆதிசங்கரர் எந்த பேரொளியை கோவிந்தன் என போற்றி புகழ்ந்து அதனை பஜிக்குமாறு உலகிற்கு உரைத்தாரோ அதை தன் உள்ளத்தில்தரிசித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை தன்வசம் செய்து கொண்ட மஹா யோகியாகவும், அதில் தன் மனதை செலுத்தி அதி மேன்மையான பக்திஉணர்வை அடைந்த ஒரு தலைசிறந்த பக்தனாகவும் விளங்கிய ஒப்பற்ற மகான் ஶ்ரீரங்கமஹாகுரு.