Friday, May 24, 2019

ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahapurusar Srirangamahaguru Part-5)

திரு எஸ்.வி.சாமு அவர்களின்  மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி
                   
                                                                      Part 5


( தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி )கலாச்சாரம் - நாகரீகம்:-

வித்யையின் உருவமான புத்தி எனும் நதி தொன்றுதொட்டு பெருக்கெடுத்தோடி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தேசங்களில் மனிதவாழ்கைக்கு பலவிதமான உருவங்களை கொடுத்திருக்கிறது. இதுதான் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் என கூறப்படுகிறது. கலாசாரம் மற்றும் நாகரீகம் எனும் சொற்கள் சில நேரங்களில் ஒரே பொருளுள்ளவைகளாகவும் வேறு சில நேரங்களில் வெவ்வேறுபொருளுள்ளவைகளாகவும் உபயோகப்பட்டுவருகின்றன. மஹாகுரு இச்சொற்களின் பொருளை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஶ்ரீரங்கமஹாகுரு உண்மையான அர்த்தத்தில் கலாச்சாரத்தின் பொருளை உணர்ந்த மகானாக விளங்கினார்.
மஹாகுரு வழங்கிய கலாசாரம் மற்றும் நாகரீகத்தின் அடிப்படை:-

பூரணஞானம் நிறைந்த நிலையில் வாழ்க்கையின்  உள்ளும் புறமும் பற்றின ஶ்ரீரங்கமஹாகுருவின் கண்ணோட்டம் பழமையான பாரதமஹரிஷிகளின் கண்ணோட்டத்திற்கு சமமானதாக விளங்கியது. நெடுந்தவத்திற்கு பின் அவர்கள் வாழ்கையின் உன்னதமான மதிப்பை பற்றி எந்ததீர்மானம் கொண்டிருந்தனரோ அதுவே மஹா தபஸ்வியான ஶ்ரீரங்க குருவின் தீர்மானமும் ஆகியிருந்தது.

கலாச்சாரம் என்பது உயிரோடு ஒன்றி இருக்கும் தர்மமாகும்(தன்மை). அதுவே  நடைமுறையில் வெளிப்படும்பொழுது நாகரீகம்எனப்படுகிறது. பரிபூர்ண ஞானத்தை அடைந்தபொழுது ஏற்படும் உள்நோட்டம், உள்உருவம், உள்செயல்கள், உள்உணர்வுகளை பாரதத்தின்கலாச்சாரம் என்று கூறினால் அவைகளின் இனிய நினைவுகளை கொடுக்கும் வெளிப்பார்வை, வெளிஉருவம், வெளிச்செயல்கள், வெளிஉணர்வுகளை நாகரீகம் என கூறலாம். ஒன்று வெளிக்கண்களால் காண்பதற்கரியது. மற்றொன்று காணக்கிடைப்பது. ஒன்று உணர்வு மற்றொன்றுஅதனின் வெளிப்பாடு. ஒன்று விதையைப் போன்றது, மற்றொன்று அதன் மரத்தை போன்றது. ஒன்று ஜீவனின் மூலத்தில் இருப்பதாகவும்,மற்றொன்று புலன்கள், உடல் முதலியவற்றின் செயல்பாட்டிற்கு சேர்ந்தபடியாக வெளிப்படையாகவும் உள்ளது.

இன்னும் பொருத்தமாக கூறுவதானால் விதைக்கும், மரத்திற்கும், மரத்தின் வேரிற்கும் பின்னால், அணுவாக இருக்கும் தர்மம் கலாச்சாரமாகும்.அது தன்னை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்திக் கொள்ளும் போது அதுவே நாகரீகமாகிறது. எது சிறப்பாக செய்யப்பட்டுள்ளதோ அதை மஹாகுருகலாச்சாரம் என்பதாக  அறிந்தார்.

கலாச்சாரம்(ஸம்ஸ்க்ருதத்தில் ’ஸம்ஸ்க்ருதி’) எனும் சொல்லிற்கு  ’நன்றாக செய்யப்பட்டது’ என்பதே பொருள்.

மஹர்ஷிகளின் கலாசாரத்திற்கும் இன்றைய கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு :-

ஶ்ரீரங்கமஹாகுரு  வாழ்க்கையின் மூலநிலையான இறை ஒளியை அடைந்து அதனுடைய முழுமை, சாந்தி மற்றும் ஆனந்தத்தைஅனுபவித்தவர். அந்த ஒளியிலிருந்து தோன்றி இலை, பூ, பழத்துடன் கூடி செழிப்பாக வளர்ந்த நாகரீகமெனும் ப்ரம்மாண்டமான மரத்தையும்கண்டார். நாகரீகத்தின் வெவ்வேறு பாகங்களனைத்தும் தமக்கு வேர் போல இருக்கும் பேரொளியுடன் தொடர்புகொண்டவாறு அமைவதுசாத்தியம் என்பதை பரிசோதித்து அறிந்தார்.

இன்று உலகெங்கும் பரவி வெளிப் பார்வைக்கு அற்புதமாக காணப்படும் ஒரு நாகரீகத்தை நம்மை சுற்றி காண்கிறோம். ஆனால் மேற்கூறப்பட்டுள்ள சிறப்பான கலாச்சாரத்தின் அடிப்படை இந்நாகரீகத்தில் காணப்படுவதில்லை. வாழ்க்கையை பரிபூரணமாக்கும்பரம்பொருளின் நினைவு அதில் இல்லை. அதில் பல குறைகள் காணப்படுவதற்கு காரணம் அப்பரம்பொருளுடன் ஒன்றிணையாமல் வெளிக்கண்ணோட்டத்தில் மட்டுமே வளர்ந்திருப்பதுதான். மஹா குருவின் கலாச்சாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் பழமையான  பாரத மஹரிஷிகளின்மனோதர்மத்தை ஒத்திருந்தது.
ஆன்மீக கலாசாரம் நாகரீகமாக வளர்ந்துள்ள விதம்:-

பூஜையில் மணியோசை செய்வது நமது பரம்பரையில் வந்துள்ள வழக்கம். யோகியின் ஆன்மீகப்பயணத்தில் ப்ராணன் சுஷும்னா நாடியில் நுழையும்பொழுது  மணியோசை கேட்கப்படுகிறது என்பது சாஸ்திரவாக்கியம். யோகிகளின் இதயத்தில் கேட்கப்படும் அந்த ஒலியை அவ்வாறேவெளிப்படுத்துவதற்கேற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மணியையே பூஜையில் உபயோகப்படுத்த வேண்டுமென்பதுசாஸ்த்ரங்களின் கருத்து. அதனால் நாதயோகத்தை லட்சியத்தில் கொண்டு மணியின் உருவம், எடை மற்றும் அதில் உலோகங்களின் கலவைஎந்த விகிதத்தில் இருக்க வேண்டுமென்பதும் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

லட்சணங்களுடன் கூடிய மணியை தயாரிப்பதற்கு ஒரு சிறந்த கலைஞனின் அவசியம் எவ்வாறோ அவ்வாறே அது சரியாகதயாரிக்கப்பட்டுள்ளதா என சோதித்தறிய அருகிலேயே ஒரு நாதயோகியும் இருக்க வேண்டும். ஆன்மீக பூமியில் தோன்றிய கலாச்சாரம் உலகில்ஒரு நாகரீகமாக உருக்கொண்டதற்கு இது ஓர் மேன்மையான எடுத்துக்காட்டாகும்.