மூலம்: தாரோடி சுரேஷ் தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இன்றைய தலைமுறையினரின் சமையற்கலையை குறித்த கருத்துக்களையும், சமையல்முறை வழக்கங்களையும் குறித்து கடந்த பதிவில் சுருக்கமாக நினைவு கூர்ந்தோம். சமையல் கலையின் அடிப்படையை அறிமுகப்படுத்துவது இன்றைய பதிவின் நோக்கம். .
பாகம்(paakam) என்ற சொல் பதப்படுத்துவது என்பதை குறிக்கிறது. அதாவது இயற்கையில் உள்ள ஏற்ற-தாழ்வுகளை நிலைக்குலையாமல் சமநிலைப்படுத்துதல் என்பதாகும். இறைவன் குறையின்றி சமநிலையுடன் விளங்குபவன். (நீர்த்தோஷம் ஹி சமம் பிரம்ஹ). "உதரத்திற்கு(வயிற்றிற்கு) நிறைவளிப்பது மட்டுமன்றி தாமோதரனுக்கும் நிறைவு ஏற்படுத்த வேண்டும்" என்று ஸ்ரீரங்கமகாகுரு அறிவுறுத்தினார். இறைவனை உணர தடையாய் இல்லாதிருப்பின் சமையல் என்பது ஒரு கலையாகும்.
சமையல் என்பது ஒரு கலை மட்டுமன்று, அனைத்துக் கலைகளுக்கும் தாய் போன்றது. படைப்பிலுள்ள அனைத்து உயிரினங்களையும் நிறைவுபடுத்தி காக்கிறது இக்கலை. இது தேவாதி தேவர்களுக்கும், பாடகர், நடிகர், கவிஞர், சிற்பி, எழுத்தாளர், விவசாயி, படைவீரர் என அனைவருக்கும் ஊட்டமளிக்கிறது. ஆயின் வெவ்வேறு கலைகளுக்கேற்ப சுவை சேர்க்கும் வண்ணம் திட்டமிடுதல் அவசியம்.
பலதரப்பட்ட கலைகளுக்கு தகுந்தவாறு பதப்படுத்துதலும் வேறுபடும். எனவே சமநிலை ஏற்படத்தக்க விகிதத்தில் தயாரிக்கும் ரகசியம் அடங்கியுள்ளதனால் இது ஒரு கலை மட்டுமன்று, அனைத்து கலைகளுக்கும் தாயாகும்.
சமையற்கலையானது படைப்பின் வளர்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் கலையாகி மனிதனுக்கு தேவையான உடல்பலத்தையும், மனநிறைவையும், ஆன்மீகநோக்கையும் அளிக்கிறது. பௌதிக இன்பத்தை மட்டுமின்றி யோகத்தின் பேரின்பத்தையும் உள்ளடக்கிய நோக்குள்ளது. உப்பு, புளி, காரம் போன்ற சுவைகளனைத்தும் பதத்துடன் சமரஸமாக அமைந்தால் மட்டுமே சமையல் நேர்த்தியானதாகிறது. ஸமரசமே சமையற்கலையின் சாரம். ரஸஸ்வரூபியான பரமாத்மனை மறைக்காமலிருப்பதுவே ரஸம். மேலும் புலன்களால் உணரப்படும் சுவையினிலும் அதன் மூலரஸத்தின் சுவடு உண்டு.
நாம் மற்றொரு செய்தியையும் மனதில் கொள்ள வேண்டும். ஸ்ரீக்ருஷ்ணன் "தனக்காக மட்டுமே சமைப்பவன் பாவத்தை மட்டுமே உண்கிறான்" என்று எச்சரிக்கிறான். அனைத்து பொருட்களும், தேவையான தானியம் போன்றவையும் இறைவனிடமிருந்தே கிடைக்கின்றன. நாமும் அவன் படைப்பே. இரண்டிற்கும் அவனே தலைவன். எனவே அவன் பொருட்களை பயன்படுத்துகையில் அனைத்தும் அவனுக்கு-தலைவனுக்கு-உரியவை என்பதை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறாயின் நாம் கள்வர்களாவதில்லை. அதனை இறைவனுக்கு அர்ப்பணித்து பின் நாம் அவன் நினைவுடன் அதனை ஏற்கும்போது அது ப்ரஸாதமாக புனிதமான உணவாக மாறுகிறது. எனவே இச்செயல் யாக, யக்ஞமாகிறது.
இங்கு ஸ்ரீரங்கமஹாகுருவின் சொற்களை நினைவு கூர்தல் ஏற்புடையது. "ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனை நினைவுகூற வைப்பதே உண்மையான சமையல்".
இதன் பின்னணியில் பின்வரும் பதிவுகளில். சமையலறை அமைப்பு, சமைப்பவர், அடுப்பு, சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், மனநிலை குறித்து ஆராய்வோம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.