Thursday, May 28, 2020

இறைவனுடன் இணைவதே யோகமாம் (Iraivanutan inaivate yokamam)

 மூலம்: ஸ்ரீ சுப்ரம்மண்ய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா


ஒரு வளம் பொருந்திய நாட்டில் குடிகளை நேசிக்கும் ஒரு அரசன் இருந்தான். ஒருமுறை அவன் நாட்டை பகைவர்கள் சூழ்ந்தனர். அவர்களின் கையே மேலோங்கியது. அப்போது அமைச்சர்கள் அனைவரும் கூடி எவ்வாறாயினும் அரசனை காப்பாற்றினால்  மீண்டும்  அரசை கைப்பற்ற இயலும் என முடிவெடுத்து அரசனை தலைமறைவாகும்படி கோரினர். முதலில் ஒப்புக்கொள்ளாவிடினும் அமைச்சர்களின் வற்புறத்தலுக்கிணங்கி நாட்டின் எதிர்காலத்திற்காக அரசனும், அரசியும் கானகத்தில் தலைமறைவாயினர். வெகுகாலம் வனத்தில்  வாழ இயலாமல் இருவரும் இறைவனடி சேர்ந்தனர். ஆயின் அவர்களின் சிறு குழந்தை மட்டும் எஞ்ஜியது. குழந்தையின் அழுகுரலை செவிமடுத்த வேடுவர் கூட்டமொன்று இரக்கத்துடன் குழந்தையை எடுத்து சென்று தங்கள் மகனைப் போன்றே வளர்த்தனர். வளர்ந்தபின் வேடுவ இளைஞர்களின் தலைவனாகி வேட்டையாடி வரும்போது ஒரு முனிவர் அவன் அங்க அடையாளங்களை கண்டு அவனிடம் கூறினார் "நீ மற்றவர்களைப்போன்றவனல்ல. இன்று வீட்டிற்கு சென்றதும் உன் உடலமைப்பை கண்ணாடியில் உற்று நோக்கு. உன் மார்பு, தோள்கள், உடற்கட்டு அனைத்தும் மற்றவர்களை போல் உள்ளதா என்று கவனி" என்றார்.

இளைஞன் வியப்புடன் அவர் கூறியபடியே தன்னை கவனித்தான். உண்மை, தன் வயதினை ஒத்த மற்றவருக்கும் தனக்கும் மிகுந்த வேற்றுமை உள்ளது, தன் உடலமைப்பும், தேஜசும் அவர்களைவிடவும் சிறப்பாக உள்ளது என்பதை கவனித்தான். மற்றொருமுறை அத்தவசியை சந்தித்து "உங்கள் கூற்றுப்படி என்னில் ஏதோ சிறப்பு உள்ளது. தயை கூர்ந்து நான் யாரென்பதை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டான். முக்காலமும் உணர்ந்த மகான் அவன் வரலாற்றை எடுத்துரைத்தார். மற்றும் அவன் கடமையை அறிவுறுத்தினார். படைகளை திரட்ட கட்டளையிட்டார். இளவரசன் அன்றிலிருந்து தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான். கடின உழைப்பால் மக்களை கூட்டினான். எல்லாவித போர்கலைகளையும் கற்று தேர்ந்தான். ஒரு வலிமையான சேனையுடன் சென்று தன் முன்னோர் இழந்த நாட்டை மீட்டு அரசனாக விளங்கினான்.

இது நம் அனைவரின் கதையாகவே உள்ளது. நம்முள் ஒளிபொருந்திய  ஆத்ம ராஜ்யம் ஒன்றுண்டு. அதுவே இறைவனின் மடி. அங்கிருந்து நம் மனங்கள் வெளியேறி  வழிதவறி உள்ளோம். புலன்களின் வேட்கைக்குட்பட்டு நம் உண்மையான சுயரூபத்தை முற்றிலும் மறந்துள்ளோம். வாழ்க்கையின் சிற்றின்பங்களுக்கு வசப்பட்டு ஆனந்தமயமான பேரின்பத்தை தவற விட்டுள்ளோம். நம் உண்மையான இறைதன்மையிலிருந்து விலகி இருக்கின்றோம் அந்த அரசகுமாரனைப்போலவே. மீண்டும் நம் உண்மைதன்மையை நினைவு கொள்ள வேண்டியே முனிவர்கள் யோகமார்க்கத்தை வலியுறுத்தி உள்ளனர். "ஜீவனும் தேவனும் ஒன்றாவதே யோகம்" என்னும் ஸ்ரீரங்க மஹாகுருவின் கூற்றை இவ்விடத்தில் நினைவு கூர்வோம். யோகம் என்றால் உண்மையில் பரம்பொருளுடன் ஐக்கியமாவதே. அவ்வாறு இணைய மேற்கொள்ளும் முறையும் யோகமென்றே கருதப்படும். எனவே நம் உள்ளுணர்வில் யோகம் உண்டாகி மகிழ்ச்சி அடைவதே யோகத்தின் குறிக்கோள். நம் அனைவரின் வாழ்வும் அத்தகு யோகத்தை அடையட்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.