மூலம்: Dr. R. மோஹன்
தமிழாக்கம்: வனஜா
தேவரிஷி நாரதர் ஒரு முறை ஸ்ரீமந் நாராயணனிடம் வினவினார் "உம் அடியவர்களில் யாரை சிறந்தவனென்று கருதுவீர்?" தன் பெருமையை ஸ்ரீமந் நாராயணன் வாயாரவே கேட்க வேண்டுமென்ற சிறிது மமதை கொண்ட வேட்கை அது. ஹரி புன்னகைத்து "அங்கு பார். அக்கிராமத்தில் ஏர் பிடித்திருக்கும் உழவனே என் மிக சிறந்த அடியவன்" என்றார். நாரதர் மனம் சோர்ந்தார். எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த உழவனைப்பற்றி அறிந்து வரலாம் என்று இருவரும் சாதாரண வழிப்போக்கர்களைப்போன்று அக்கிராமத்திற்கு வந்தனர். உழவன் குடும்பத்துடன் அவ்விருவரையும் வரவேற்று உபசரித்தான். சில தினங்கள் அவ்விருவரும் உழவனுடன் தங்கி அவன் தினசரி செயல்களை கவனித்தனர்.
காலையில் இறைநாமத்தை உச்சரித்த வண்ணம் துயிலெழுந்து நீராடி வயலுக்கு செல்வான். ஏர் பிடிக்கும் முன்பும், உணவருந்தும் முன்பும், மாலை வீடு திரும்பிய பின்பும், இரவு உறங்கப்போகும் முன்பும் நியமத்துடன் ஹரிநாமத்தை உச்சரித்து வந்தான். மூன்று தினங்கள் கடந்தபின் நாராயணனும் நாரதரும் உழவனுக்கு நன்றி கூறி திரும்பினர்.
நாரதர் ஹரியை நோக்கி "இவனா உன் சிறந்த பக்தன்!" என்று பரிகசித்தான். இறைவன் புன்னகைத்தபடி "நீ வென்றாய் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீ ஒன்று செய்ய வேண்டும். இந்த எண்ணை நிரம்பிய பாத்திரத்தை தலையில் சுமந்து ஒரு முறை வலம் வா. ஒரு துளி எண்ணையும் கீழே சிந்தக்கூடாது" என்றான். நாரதர் மிகுந்த எச்சரிக்கையுடன் நிதானமாக நடந்து இறைவனை வலம் செய்து முடித்தார். அகந்தையுடன் நோக்கி. "பார்த்தீர்களா. இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா" என்றார். "அது சரி இவ்வாறு வலம்வருகையில் நீ எத்தனைமுறை என்னை நினைவு கூர்ந்தாய் குழந்தாய்?" என்றார் ஹரி. நாரதரின் முகம் ஒளிஇழந்தது. எண்ணை பாத்திரத்தின் கவனத்தில் அவர் ஹரியை முற்றிலும் மறந்தே விட்டிருந்தார்!
இது நம் கதை போலவே உள்ளது. தினசரி வேலையின் அலைச்சல்; வேலையோ முடிவதில்லை. நிம்மதி கிடைப்பதில்லை. இந்த போராட்டங்களுக்கிடையேயும் நம் மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வது எவ்வாறு? என்பதே நம்முன் உள்ள வினா. நாம் புலன்களின் விருப்பங்கள் அனைத்தையும் குடத்தை போல் தலைமேல் சுமந்து கொண்டிருக்கிறோம். வினாடியில் உடைந்து நொறுங்கும் மாயையெனும் பானையை அமுதமென கருதி துதிக்கிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சியின் ஊற்று நம் சிரமென்னும் குடத்தில் அடங்கியுள்ளது என்பதை மறந்திருக்கிறோம். உள்ளமென்னும் குகையில் மகிழ்ந்திருந்து சிரமெனும் குடத்திலுள்ள அமுதத்தை பருக சிவபெருமானையும், திருமாலையும் துதிப்பதென்பது வழி என்பது ஸ்ரீரங்கமஹாகுருவின் சிறப்பான அனுபவம். நம் தினசரி வாழ்க்கையின் இடையில் அவ்வப்போதாகிலும் நம்முள்ளிருக்கும் ஆனந்த மூர்த்தியை நினைந்து "நானிருப்பது உனக்காக " என்றால் அதுவே கர்மயோகமாகும்.