Friday, May 22, 2020

பகுத்தறிவின் பாதை (Pakuttarivin Aatai)

மூலம்: மைதிலி ராகவன் 
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  

முன்னொரு சமயம் காசி நகரில் வினோதமான வழக்கம் ஒன்று நிலவி வந்தது. அங்கு குடிமக்களில் எவரேனும் அரியணை ஏறி ஐந்து ஆண்டு காலம் தன்னிச்சையாக நாட்டை ஆளலாம். அதன் பிறகு அவனை கங்கா நதியின் அக்கரையில் உள்ள அடர்ந்த காட்டில் கை, கால்களை கட்டி வனவிலங்குகளுக்கு இரையாக்குவர். பலர் அதிகாரத்தின் ஆசையால் அரசனாக முன் வந்து முடிவில் கோரமான மரணம் அடைந்தனர். ஒரு சமயம் இளைஞன் ஒருவன் துணிந்து இதை ஏற்றான்.  ஐந்து ஆண்டு காலம் மிக்க அக்கறையுடன் குடிகளின் நன்மையை கருத்தில் கொண்டு அரசாண்டான். ஆட்சி காலம் முடிந்தவுடன் அவனை படகில் அக்கரைக்கு அழைத்து செல்ல வேண்டும். கங்கைகரை வரை கோலாகலமாக ஊர்வலம் நடந்தது. அரசன் தேரில்  இன்முகத்துடன் அமர்ந்திருந்தான். குடிகள் அனைவரும் அவனை கண்டு வியந்தனர். கோரமான முடிவை எதிர்கொள்ளும் இவன் முகத்தில் எவ்வாறு சிரிப்பும் சந்தோஷமும் இருக்கின்றன? படகு நகர்ந்தது. அப்போதும் இவன் இன்முகத்துடனேயே காணப்பட்டான். படகோட்டி சந்தேகத்துடன் வினவினான் "நதியில் குதித்து தப்பிக்கும் எண்ணம் ஏதாவது உண்டோ? அது இயலாது" என்றான். அரசன் 'நான் ஏன் தப்பிக்க வேண்டும்?! நிச்சயமாக இல்லை,' என பதிலுரைத்தான். படகோட்டி பயத்துடன் 'ஐயா உன் வருங்காலத்தை அறிந்தும் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கிறாய்' என வினவ அரசன் கரையை அடைந்ததும் உனக்கே புரியும் என பதிலளித்தான்.

கரையை அடைந்து அங்கு கண்ட காட்சியினால் படகோட்டி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அங்கு முன்பிருந்த அடர்ந்த காடு மறைந்து ஓர் அழகான பட்டணம் காணப்பட்டது. அநேக மந்திரி ப்ரமுகர்கள் மற்றும் குடிமக்கள் அரசனை வரவேற்க பூரண கும்பத்துடன் காத்திருந்தனர். அரசன் மென்மையாக சிரித்து விவரித்தான். "நான் என் ஆட்சி காலத்தில் காசி நகரை ஆளும்போதே ரகசியமாக காட்டை ஓர் நகரமாக மாற்றும் பணியையும் மேற்கொண்டேன். மிகவும் நெருக்கமான சிலரையும் இங்கே அனுப்பினேன். இப்போது நான் இப்பட்டணத்தின் அரசன்!"

வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்தும் கதை இது. "காசி க்ஷேத்திரம் சரீரம்" என ஆதி சங்கரர் கொண்டாடியவாறு இவ்வுடலே காசி க்ஷேத்திரம். இதற்குள் உறையும் ஜீவனே அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் அரசன். சுகங்களை மட்டும் மனம் போன படி அனுபவித்து வாழ்ந்தால் வாழ்வின் இறுதியில் தன் கர்ம வினைகளால் கட்டப்பட்டு அதன் பயனை அனுபவிக்க நேரும். ஆயின் பகுத்தறிவுடன் கூடியவன் இவ்வுலகின் இன்பங்களுடனே  இறையுலகின் இன்பத்தையும் சிந்திக்கிறான். நற்செயல்களால்  ஜீவன் கர்மத்தின் கட்டிலிருந்து விடுபட்டு இறுதியில் இல்வாழ்க்கைக்கு பிறகும் ஆனந்தத்தை அடைகிறான்.

ஸ்ரீரங்க மஹாகுரு  "இறைவனை உணர்தல் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை. இதற்காக போராட வேண்டும். மனித உடல்  யோகம் (இறைவனுடன் இணைவது), போகம் (இவ்வுலக இன்பம்) இரண்டிற்கும் இருப்பிடம்" என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். பகுத்தறிவின் வழி சென்று போகத்தின் கூடவே யோகத்திற்கும் வழிவகுத்து கொள்வோம். அப்போது நமக்கு  கிடைப்பது இவ்வுலகில் இன்பம் மற்றும் இறையுலகில் பேரின்பம்!

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.