ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 44
அனைத்தையும் நிறைக்கும் பொருள்
============================== =============================
அனைத்தையும் நிறைக்கும் பொருள்
==============================
மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
ஒருமுறை தர்மராஜன் மற்றும் துரியோதனன் இருவரையும் அழைத்து ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு போட்டியை அறிவித்தான். ஒரு அறையை காண்பித்து "சிறிதும் இடைவெளியின்றி இந்த அறையை எந்த பொருளையாவது கொண்டு நிரப்புவீர்களா? சிறிய சந்து பொந்தும் விடாமல் நிரப்ப வேண்டும்" என்பதே போட்டியின் விதி.
"இதென்ன பெரிய போட்டி" என்று துரியோதனனே மிக்க ஊக்கத்துடன் முன்வந்தான். தன் செல்வத்தின் பெருமையை பறைசாற்றவே அவன் தக்க சமயத்திற்காக காத்திருந்தான். தன் கருவூலத்திலிருந்த முத்து, ரத்னம், வைர, வைடூர்யங்களை கொண்டுவர செய்து அவ்வறையை நிரப்பினான். அவ்வாறு நிரப்பி ஸ்ரீ க்ருக்ஷ்ணனுக்கு காட்டினான்.
வைர வைடூர்யங்களால் நிரம்பியிருப்பினும் முத்து ரத்தினங்களின் நடுவில் நிறைய இடைவெளியிருந்ததை ஸ்ரீக்ருஷ்ணன் சுட்டி காட்டினான். எவ்வளவுதான் நிரப்பினாலும் ஏதாவது ஒரு இடத்தில் இடைவெளி இருந்தது. முடிவில் துரியோதனன் சோர்வுடன் "நீ கூறுவது போல் நிரப்புவது யாராலும் இயலாது” என்று அனைத்தையும் காலி செய்வித்தான்.
இப்போது தர்மராஜனின் முறை. ஸ்ரீக்ருஷ்ணன் அவனை நோக்கினான். தர்மராஜன் பணிவுடன் வாசற்படியின் மேல் ஒரு விளக்கை ஏற்றி வைத்தான். உடனேயே அறை முழுவதும் ஒளி நிறைந்தது.
ஸ்ரீகருஷ்ணன் துரியோதனனை நோக்கினான். அவன் தலை குனிந்து தன் தோல்வியையும் தர்மராஜனின் வெற்றியையும் ஒப்புக்கொண்டான். வைர வைடூர்யம் முதலான செல்வங்கள் எத்துணை இருப்பினும் அவை வாழ்வை முழுமையாக்காது. வாழ்வின் ஒரு பகுதியை மட்டுமே நிரப்பும். அதுவே வாழ்வின் சுவை என்று பெருமை பீற்றிக்கொள்பவர்கள் வாழ்வின் நிறைவை அனுபவிக்க இயலாமல் தோல்வியை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.
வாழ்வை முழுமையாக்குவது அதனை நடத்தும் எல்லாம் வல்ல பரம்பொருளின் ஒளியேயாகும். அது நிறைந்திருப்பதனால் தான் வாழ்க்கை. இந்த ரகசியத்தை அறிந்து, தானே அந்த பரஞ்ஜோதியாகிருப்பவன் ஸ்ரீ க்ருஷ்ணன். இந்த ரகசியத்தை அறிந்தவர் யாரென்றறியவே அந்த சோதனையை முன்வைத்தான். தர்மராஜனோ "ஸ்ரீக்ருஷ்ணன் பரம்பொருளின் வெளித்தோற்றம், அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் சைதன்ய ஒளிவிளக்கானவன்" என்றறிந்தவன். அத்தகு சைதன்ய ஒளியின் தூய்மையான எண்ணத்துடன் அதன் ப்ரதிநிதியாக விளக்கை ஏற்றி வைத்தான். அது ஒரு சாதாரண விளக்கு மட்டுமல்ல, வாழ்வை நிரப்பும் அழிவற்ற ஒளியின் ப்ரதிநிதி என்னும் அறிவு அவனிடமிருந்தது. ஒளிதானே அனைத்தையும் ஒன் றாக நிரப்ப வல்லது!