ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 43
புலன்களுக்கு அப்பாற்பட்ட உண்மை
============================== =============================
புலன்களுக்கு அப்பாற்பட்ட உண்மை
==============================
மூலம்: வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
மின்னஞ்சல் : lekhana@ayvm.in
இறைவனைப்பற்றிய பலவகை கருத்துக்களை புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் படிக்கிறோம். சொற்பொழிவுகளிலும் கேட்கிறோம். கற்றறிந்தவர், கல்லாதவர், சாதாரண குடிமக்கள் அனைவரும் அதனை குறித்து உரையாடுகின்றனர். இவர்களில் சிலர் இறைவன் இருக்கின்றான் என்றும், சிலர் இல்லை என்றும், மற்றும் சிலர் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என்றும் வாதிடுகின்றனர். இறைவன் இருக்கின்றான் என்பவர்களிலும் ஒத்த கருத்து இல்லை. அவனுக்கு குணமும் உருவமும் இல்லை என்று சிலரும், அவை உண்டு என்று சிலரும் கூறுகின்றனர்.
இவ்வகையான கருத்துக்களை அவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றனர் எனில் சிலர் யுக்தியின் அடிப்படையிலும், சிலர் புத்தகங்களை மேற்கோள் காட்டியும் தங்கள் கருத்தை வலியுறுத்துகின்றனர். இவ்விரண்டு சாட்சிகளினாலும் தங்கள் கருத்தை நிலைநிறுத்துபவர் உண்டு. இவர்களில் யாருக்கும் இறைவனின் நேற்முக அறிவில்லை .
இறைவனைப்பற்றிய இவர்கள் கருத்தனைத்தும் கற்பனையே. இத்தகு கற்பனைகளில் சில மகிழ்ச்சியளிக்கும் இலக்கியங்களாகலாம். சில அறிவிற்கு மகிழ்ச்சி அளிக்கலாம். மற்றும் சில பொழுது போக்காக மட்டுமே பயன்படலாம். இவை அனைத்தும் புலன்களின் உலகை சார்ந்த செய்திகள்தாம்.
ஆயின் தவத்தில் சிறந்த ஆன்றோர் எதனை இறைவன் என்கின்றனரோ அது புலன்களுக்கு அப்பாற்பட்ட உண்மை. தவம்-மெய்யறிவு-ஸமாதி நிலை இவைகளின் மூலம் புலன்களை கடந்த நிலையை அடையும்போது மட்டுமே அறியக்கூடியது. புலன்களின் உலகில் எத்துணை முயற்சி செய்திடினும் அதன் அறிவு நமக்கு கிட்டுவதில்லை. அதைக்குறித்து நாம் கூறும் செய்தி ஆதாரமாவதில்லை.
புலன்களுக்கப்பாற்பட்ட நிலையை அடைய வேண்டுமாயின் அதற்கே உரிய முறையில் செயல்பட வேண்டும். அவ்வாறன்றி வாதங்களிலும், கற்பனைகளிலும் காலம் கழிப்பவர்களை புத்த தேவன் "திட்டி வாதினோ” “அலஸோ" என்று கூறுகிறான். "விஷம் தோய்ந்த அம்பு உடலில் குத்தியுள்ளது. அதனை பிடுங்கி எறிய முயற்சி செய். அதைக் குறித்து வாதிடுவதால் எந்த பயனும் இல்லை” என்று அவன் அறிவுரை கூறுகின்றான். "புலன்களை உள்நோக்கி செலுத்தும் வீரனுக்கே ஆத்ம தரிசனம்" என்கிறது கடோபநிஷதம். நாம் அத்தகைய முயற்ச்சியில் வீரராக வேண்டுமென ப்ரம்மஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.