ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 25
இஷ்டதெய்வம்
============================== =============================
இஷ்டதெய்வம்
==============================
மூலம்: திரு. வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: திருமதி வனஜா
“சைவம், வைணவம், சாக்தம்_போன்ற வெவ்வேறு பிரிவுகளினால் ஆகமங்கள்(ஆகமசாஸ்திரங்கள்) பலவாறாக உள்ளன. ஆயின் கங்கா நதியின் கிளைகளனைத்தும்
கடலையே சென்றடைவது போல் அனைத்து ஆகமங்களும் உன்னையே வந்தடைகின்றன. ஓ ஆதிமூலமே! ,அச்சுதா” என்கிறான் சிறந்த கவிஞனும், பக்தனுமாகிய காளிதாஸன். இந்த ஆகமங்கள் சிவன், திருமால், அம்பாள்,முருகன், ஆதவன் முதலிய வெவ்வேறு தேவதைகளின் வழிபாடுகளைப்பற்றி சிறப்பித்து கூறுகின்றன.
சிவன், திருமால் போன்றவை அனைத்தும்
ஒரே இறைவனின் வெவ்வேறு தோற்றங்கள். ஆயினும் பக்தன் தனக்கு எது உகந்ததோ அவ்வுருவையே சிறப்பாக வழிபடுகிறான். இதற்கு ஒரே தெய்வத்தின். அல்லது தனக்கு விருப்பமான தெய்வத்தின்/இஷ்டதெய்வத்தின் வழிபாடு என்று பெயர். சைவ, வைணவ ,சாக்த, சூரிய முதலிய அனைத்து பக்திமார்கத்தின் மதங்களும் இப்பிரிவில் அடங்கும். இவ்வாறு வழிபடுபவன் தனக்கு விருப்பமான தெய்வத்தை முழு மனதுடன் வழிபட வேண்டும். எவ்வாறெனில் கற்புகரசியானவள் தன் கணவனிடம் மட்டுமே ஈடுபாடு கொள்வதுபோல் இந்த அடியவரும் தன் விருப்பத்திற்குரிய தெய்வத்திடம் மட்டுமே ஈடுபாடு கொள்ள வேண்டுமென்கின்றன ஆகமங்கள்.
ஆயின் இக்கூற்றை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் விருப்ப தெய்வத்தை வழிபடுவதன்றி அதே தெய்வத்தின் வெவ்வேறு தோற்றங்களை நிராகரிக்கிறார்கள். இது கற்புக்கரசிகளுக்கு ஒவ்வாத செயல். கற்புடைய மாதர்
தன் கணவனின் சுற்றத்தார் மற்றும் நண்பர்களை விலக்குவதில்லை. அன்பு,மரியாதையுடன் உபசரிக்கின்றனர். ஒரே தெய்வத்தை வழிபடுபவர்களுக்கும் இதுவே மேற்கோளாகும்.
ஸ்ரீரங்கமஹாகுரு இறைவனின் மும்மூர்த்தி வழிபாடு குறித்து இவ்வாறு கூறியுள்ளார்- "ஒருவனே தன் உலகளாவிய நாடக மேடையில் பிரம்மா, விஷ்ணு
சிவன் என்ற மூன்று வேடங்களை ஏற்கிறான். ரசிகரான அடியவர் இவற்றில் தமக்கு விருப்பமானவற்றை வழிபடட்டும். ஆயின் மற்ற வேடங்களை ஏற்றவனும் அவ்வொருவனே
என்பதை நினைவுகொள்ளுதல் வேண்டும். ஒரு நாய் தன் முதலாளி எந்த வேடம் தரித்து வந்தாலும்
அடையாளம் கண்டு மகிழ்கிறது. மானுடனாக பிறந்த அடியவன் நாயைக்காட்டிலும்.கீழானவனோ?"