தமிழாக்கம்: வனஜா ராமதாஸ் ச்ரேஷ்டி என்பவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் அறிவாளிகளாயினும் கற்றறிந்தவர்களாயினும் பொறுப்பற்று நண்பர்களுடன் வெளியில் சுற்றி காலம் கழித்தனர். பெற்றவர்களுக்கு வயது கூடியது. பண்ணை, வயல்கள், தொழில் முதலியவற்றை நிர்வகிப்பது மென்மேலும் கடினமாயிற்று. கவலையுடன் எவ்வாறாயினும் மகன்களை நல்வழிப்படுத்த எண்ணினர்.
ச்ரேஷ்டி ஒருமுறை தன் மகன்களை அழைத்து அரசரிடம் சென்று கருவூலத்திற்கு செலுத்த வேண்டிய பங்கையும் வரியையும் அளித்து வருமாறு கூறினான். அரசனும் கப்பத்தை(காணிக்கை) பெற்றுக்கொண்டு அவர்களின் தந்தையின் நலனை குறித்து வினவி அவர்கள் செய்யும் தொழில் குறித்தும் வினவினான். அவர்களை குடும்ப விவகாரங்களில் ஈடுபடும்படி அறிவுறுத்தி "முதுமை பருவத்தில் பெற்றோர்களை பேணுவதே உங்கள் தலையாய கடமை. அதுவே இந்நாட்டின் நீதியும் ஆகும். உடனடியாக குடும்ப விவகாரங்களில் ஈடுபடுங்கள்" என அறிவுறை வழங்கினான்.
மூத்த மகன் அரசனின் வழிகாட்டுதலின்படி குடும்ப பொறுப்பை ஏற்க துவங்கினான். ஆயின் அவனது சகோதரர்கள் பழையபடியே வாழ்ந்தனர். ஒருமுறை மூத்தவன் அவர்களை அழைத்து கூறினான் "உங்களுக்கு ஒன்றை வெளிபடுத்த வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுவது சலிப்பூட்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது அதனை கவர்ச்சிகரமாக உணர்கிறேன். நன்மதிப்பை பெறுகிறேன். நீங்கள் நல்லதொரு வாய்ப்பை இழக்கிறீர்கள் இதை உங்களுக்கு மூத்தவனாக மட்டுமே அன்றி உடன் சுற்றி திரிந்த நண்பனாக கூறுகிறேன்." ஒரு சகோதரன் மறுதினமே கடையில் சுறுசுறுப்புடன் பணியாற்றினான். இளையவன் தன்னை திருத்திக்கொள்ளாமல் குடியிலும், சூதிலும் மூழ்கினான்.
இதனிடையில் பெற்றோர் இளையவனை மணக்க தக்க வரனை தேடினர். வரன் அமைந்ததும் பெண்ணை அவனுக்கு காட்டினர். அவள் அழகால் பிரமித்து மணக்க இணங்கினான். அவள் மென்மையும், அமைதியும், புத்திகூர்மையும் உள்ள பெண். எளிதாக அவனை தன்வயப்படுத்திக்கொண்டாள். அவள் அறிவுறையை தவிர்க்க இயலாமல் படிப்படியாக நல்வழிக்கு திரும்பினான். பெற்றோர் மாலை நேரங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் இறையுணர்விலும் தியானத்திலும் கழித்தனர்.
மேற்கூறிய கதை நம் பாரதத்தின் கல்வி, பள்ளிகளின் அணுகுமுறை குறித்தது. நம் பண்டைய முனிவர்கள் தவத்தின் செல்வத்தை குறித்து நன்கறிந்திருந்தனர். தங்கள் உள்ளத்துள்ளே பரந்த தங்க சுரங்கத்தையே கண்டறிந்தனர். மேலும் இயற்கை அளிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதுடன் விருப்பங்களை நிறைவேற்றவும் பாதை வகுத்தனர். அவர்களின் மந்திரமாவது உள் தர்மத்தால் கிடைக்கும் இன்பத்தையும் வெளியில் கிடைக்கும் செல்வத்தையும், இன்பத்தையும் சமநிலையில் ஏற்பது.
அத்தகு வாழ்வை சுற்றுபுரத்திலும், நாட்டிலும், சமூகத்திலும் நடைமுறைப்படுத்தி வாழ்ந்தனர். பண்டைய பாரதத்தில் இதுவே வாழ்வின் சாரமாக விளங்கியது. இத்தகைய நடைமுறையை நாடு முழுதும் செயல்படுத்த தகுந்த முறைகளும், பயிற்சியும் தேவை. அநேக விதமான எண்ணங்களும், விருப்பங்களும், தகுதிகளும் உள்ள மக்கள் மாற வேண்டும். உயர்ந்த ஆத்ம மார்கத்தில் வழி நடத்தப்பட வேண்டும்.
மக்களை ச்ரேஷ்டியின் மூன்று மகன்களுடன் ஒப்பிடலாம். வேதங்களையும், உபநிஷதங்களையும் பயிற்றுவித்து தர்ம மார்கத்தில் வழி நடத்துவது ஒரு வகை. வேதங்களும், உபநிஷதங்களும் அரசரின் கட்டளையைப்போல் உள்தவத்தையும் தியானத்தையும் வலியுறுத்துகின்றன. "உண்மையே பேசு; அறத்தின் வழி நட; (நல்வழி) சுய ஆய்விலிருந்து பிறழாதே" (ஸத்யம் வத, தர்மம் சர), கற்பிக்கையில் வழிநடத்தும் சொற்களும் உண்டு. "ஏஷ ஆதேஶ: ஏஷ உபதேஶ:" அவை அரசனின் புனிதமான கட்டளை போல் எதிரொலிக்கும். மக்களின் மனதில் அமைதியை ஏற்படுத்தி உள்மூழ்க செய்யும். எனவேதான் வேதம், உபநிஷதம், சாஸ்திரங்கள் 'ப்ரபு ஸம்மிதை'(அரசனின் கட்டளை போன்றது) என்றழைக்கப்படும். சிலர் இதனை ச்ரேஷ்டியின் மூத்த மகனை போல் பின்பற்றுகின்றனர்.
ஆனால் அனேகர் இவ்வணுகு முறையை இளைய சகோதரரகளை போல் விரும்புவதில்லை. கிளர்ச்சி செய்கின்றனர். அத்தகையோருக்கு நேரிடையாக கற்பித்தலை காட்டிலும் கதைகள், உவமைகள் மூலம் அறிவூட்டி நல்வழி படுத்தலாம். தவறான பாதையின் தீமைகளை உணர்த்த வேண்டும். புராணங்களும், இதிஹாஸங்களும் நண்பனைப் போல் செயல்படுவதால் அவை 'மித்ர ஸம்மிதை' (ஒரு நண்பன் நடத்தும் பாதை) எனப்படுகிறது. ஹிரண்யகசிபுவின் அதர்மம்-ப்ரஹ்லாதனின் பக்தி, கௌரவர்களின் ஆடம்பரம்_பாண்டவர்களின் நல்வழிக்கு பக்தி, நஹுஷனின் அழிவு, அஜாமிளனின் உயர்வு போன்ற அநேக சான்றுகளை காணலாம். உயர்ந்த ஆன்மீக தத்துவங்கள் இவற்றில் பின்னி பிணைந்துள்ளன. ஐந்தே வயதில் த்ருவன் ஸ்ரீமந் நாராயணனை தியானித்து அவனருளை பெற்றான். அவன் தாய் சுநீதி. தந்தை மாற்றாந்தாய் சுருசி மீது அதிக அன்பு கொண்டிருந்தான். எனவே சுநீதியின் மகனான த்ருவனுக்கு உரிமை கிட்டவில்லை. அநியாயத்தை பொறுக்க இயலாமல் அவன் வீட்டை துறந்து நாரதர் வழிகாட்டலின்படி நாராயணனை தியானித்து அருள் பெற்றான். ஸ்ரீ ரங்கமஹாகுரு இவ்வுதாரணத்தை முனிவர்கள் அருளிய கதைகளில் மறைமுகமாக பொதிந்துள்ள ஆன்மீக தத்துவங்களை முன்னிலைபடுத்த பயன்படுத்தினார். நாம் நெறிமுறைகள், நல்வழிகளை காட்டிலும் புலனின்பங்களையே விரும்புகிறோம். ஒரு சர்க்கரை நோயாளி எது நன்மை தருமோ(சுநீதி) அதற்கும் மேலாக நல்ல சுவையை(சுருசி) மட்டுமே விரும்பினால் முடிவு அழிவுதான். நல்வழி புறக்கணிக்கப்படும்போது(சுநீதி) நம் உடல் அழிய தொடங்கும். மனம் ஒருநிலை படுகையில் (த்ருவா) அமைதி கிட்டும். சரியான நெறியை(சுநீதியை) கடைபிடிக்கையில் (த்ருதி) மனஉறுதி அடையலாம். மன தத்துவத்தை உணர்த்தும் நாரதரே வழிகாட்டி . மனமானது உறுதியாக பரமாத்மாவிடம் நிலைத்தால் நாராயணனையும் எப்போதும் அவன் அருகாமையையும் உணரலாம். இதை சரியாக புரிந்து கொண்டு அடைய குருவின் துணையுடன் 'மித்ரஸம்மிதை'களை கற்றல் அவசியம்.
மூன்றாவது மகன் இவைகளுக்கு கட்டுபடவில்லை. அவன் பேராசை, கர்வம் கொண்டிருந்தான். ஒரு மதம் கொண்ட யானையை அடக்க, பழகிய யானை தேவை என ஸ்ரீரங்கமஹாகுரு கூறுவார். அத்தகைய மனிதனை அடக்க ஒரு பெண் தன் கணவனை அடக்குவது போன்ற உறுதி தேவை. இது குறித்து கூறும் காவியங்கள் 'காந்தா ஸம்மிதா' எனப்படும். அவை மக்களின் மனதை அன்பு, துயரம் போன்ற உணர்ச்சிகளின் மூலம் கவர்ந்து பின் அமைதியில் நிலை நிறத்துகின்றன. கதாபாததிரங்களின் எண்ணங்கள் நம்முள் பதியும். பழமை வாய்ந்த ஆதிகாவியமான ராமாயணம் முன்னோடியாக கருதப்படுகிறது. ஏனெனில் அது பல வகையான உணர்வுகளை படிப்பவர் மனதில் ஏற்படத்துகிறது. ராமன்-சிதை இடையிலான அன்பு(ச்ருங்காரம்), ராமனின் வலிமை(வீரம்), கருணை யுத்தத்தின் விளைவான கோபம்(ரௌத்ரம்), பயம், அருவருப்பு முதலிய உணர்ச்சிகள் இருப்பினும் ராமனின் கம்பீரமும், அமைதியான முக தோற்றமும்(சாந்தம்), பாட்டின் பல்லவியை போல் காவியம் முழுவதிலும் பரவி உள்ளது. ராமனின் கம்பீரமும், அனைத்து உயிர்களிடமும் அவர் காட்டும் கருணையும், தர்மத்தின் விதையை நாம் அறியாமலே நம்முள் விதைக்கும். நாரதர், வால்மீகி போன்ற முனிவர்களின் தவம், சுய ஆய்வுடன் தொடங்கும் கதை அமைதியான சாந்தரஸத்தில் முடிகிறது.
முனிவர்களின் நாடான பாரதத்தில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனும் நான்கு வகை புருஷார்த்தங்களே வாழ்வின் இலக்காக(லட்சியங்களாக) இருந்தன. நம்மை அவற்றிற்கு அழைத்து செல்லும் சாலைகளே மூன்று ஸம்மிதைகள். அவை முறையே ப்ரபு-மித்ர-காந்தா ஸம்மிதைகள் எனப்படும். இவற்றை பயன்படுத்தி நம் வாழ்வில் ஒளி ஏற்றி நம் நாட்டை வளப்படுத்துவோம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.