மூலம்: சுப்ரமணிய ஸோமயாஜீ
தமிழாக்கம்: ஸி.ஆர்.ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
'அஸதோமா ஸத்கமய, தமஸோமா ஜோதிர்கமய, ம்ருத்யோர்மா அம்ருதங்கமய'
'அஸத்யத்திலிருந்து ஸத்யத்திற்கு, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, மரணத்திலிருந்து மரணமில்லாமைக்கு நம்மை அழைத்துச் செல்' என்று இறைவனிடம் நம் பண்டைய மகரிஷிகளின் ப்ரார்த்தனை . பாரதீயரின் வாழ்க்கையில் இந்த ப்ரார்த்தனை அன்றாட வழக்கிலுள்ளதாகும். நம் பூஜை புனஸ்காரங்களிலும், விசேஷ இறை விழாக்களிலும் இத்தகைய ப்ரார்த்தனைகளை செய்வது இன்றும் ஆங்காங்கு காணப்படுகிறது. நம் பள்ளிகளிலும் உயர்நிலை பள்ளிகளிலும் மாணவர்கள் இப்ரார்த்தனையை முழங்குவதை காண்கிறோம்.
உள்ளதை உள்ளது போலவே பேசினால் உண்மையை எடுத்துரைத்ததாகும். பொய் பேசலாகாது என்னும் நீதி அனைவரும் அறிந்ததே. அவ்வாறே, இருளும் நாம் அறிந்ததே. வெளிச்சமும் நாம் அறிந்த ஒன்றாகும். இருளிலிருந்து வெளிச்சத்திற்கு நாமே செல்ல முடியும். இறுதியாக, மரணம் அனைவருக்கும் வருவது. யாரும் சிரஞ்ஜீவிகளல்ல. இவ்வாறு உள்ள பொழுது இந்த ப்ரார்த்தனையின் சிறப்புத்தான் என்ன? அநேகமாக தன் வாழ்நாளிலேயே, உலகில் என்றும் அழியாத காரியங்களை செய்ய வேண்டும் என்பதாக இருக்கலாம். இவை அனைத்தையும் நாம் அறிவோம் என்றால், இறைவனிடம் நாம் வேண்டுவதற்கு என்ன உள்ளது? நாமே செய்ய முடியும் என்னும் காரியத்திற்கு கடவுளுடைய உதவி எதற்கு? புத்தியை சிரமப்படுத்தாமல் இவற்றை யோசனை செய்து பார்க்க முடியும். ஆனால் ப்ராரத்தனை செய்தவர்கள் நம் நாட்டு மகரிஷிகள். உள் ஒளிரும் மெய்ப்பொருளை (ஸத்தியத்தை), பரமாத்மனை தம்முள் கண்டு பிரார்த்தித்தார்கள். தேவையற்ற வார்த்தைகள் அவர்களிடமிருந்து வராது. இந்த ப்ரார்த்தனையின் சிறப்பு என்ன என்பதை ஆராயவேண்டியுள்ளது.
அஸதோமா ஸத்கமய
சங்கர பகவத்பாதர் ஸத்தியம் என்பதை மூன்று வகையாக விவரித்திருக்கின்றார்:- வ்யவஹார ஸத்தியம், ப்ராதிபாஸிக ஸத்தியம் மற்றும் பாரமார்த்திக ஸத்தியம். நாம் மேற்கூறியவாறு உண்மை பேசுவது முதலியவை வ்யவஹார ஸத்தியமாகும். ப்ராதிபாஸிக ஸத்தியம் என்றால் நாம் கனவில் கண்ட அனுபவங்கள், நாம் நம் ப்ரமையினால் உண்மையென்று நினைத்த விஷயங்கள் : உதாரணமாக, கயிற்றை பாம்பு என்று நினைத்தல். ஆனால் என்றென்றும் மாறாத தானேதானாக ஒளிமயமாய், மற்றும், தான் இருப்பதால் அனைத்தையும் ஒளிவெள்ளமாக்கும், என்றும் அழிவே இல்லாத, இவ்வுலகம் நிலைத்திருப்பதற்கே காரணமாகிய பரமாத்மனென்னும் ஸத்தியமே (மெய்ப்பொருளே) பாரமாரத்திக ஸத்யம். யமன் நசிகேதனனுக்கு உபதேசிப்பதைப்போல் 'ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நே மா வித்யுதோ பாந்தி குதோயமக்னி:
தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ' என்பது போல் ஸூர்யசந்த்ராக்னிகள், மின்னல், இவை அனைத்தும் எந்த ஒளியை தாம் ஒளிர்வதற்கு ஆதாரமாக பற்றியுள்ளனவோ அத்தகைய பரமாத்ம ஜோதியே இங்கு ஸத்யம் என்று கூறப்பட்டதாகும். அது என்றென்றும் நிலைத்திருப்பதாகும். இன்று இருந்து நாளை இல்லை என்று ஆவதில்லை. அத்தகைய மெய்பொருள் நம் அறிவிற்கு வருமாறு ஸத்யஸ்வரூபனான அவ்விறைவனே அருள் புரிய வேண்டும். நம்மால் எதை செய்ய இயலாதோ அல்லது மிகவும் கடினமோ அதைத்தானே இறைவனிடம் முறையிட வேண்டும்? அந்த மேன்மையான ஸத்தியத்தின் எதிரில் மற்றவை யாவும் ஸத்தியத்திற்கு புறம்பானவையே.
அனைத்தும் அந்த தலையாய ஸத்தியத்தை மறைப்பனவேயாகும். 'அத்தகைய ஸத்தியத்திற்கு புறம்பானவைகளிடமிருந்து, நம்மை அந்த பரம ஸத்தியத்தை நோக்கி செலுத்துக' என்னும் ப்ரார்த்தனை ஜீவராசிகள் அனைத்தும் எக்காலத்திலும் செய்ய வேண்டிய ப்ரார்த்தனையே ஆகும்.
தமஸோமா ஜோதிர்கமய
இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி. பாரத நாட்டு மக்களுக்கு இருளே தேவை இல்லையா? வெளி இருட்டானது நாம் ஓய்வு எடுப்பதற்கு கண்டிப்பாக தேவை. அது மட்டுமன்றி இருள் தானாக உண்டாகின்றது. சூரியன் உதித்த பின் வெளிச்சமும் ஏற்படுகின்றது. அப்படியென்றால் இந்த ப்ரார்த்தனையின் சிறப்புதான் என்ன? என்றால் அந்த பாரமார்த்திக ஸத்யத்தின்(மெய்ப்பொருளின்) விஷயத்தில் நம் புத்தியை இருள் சூழ்ந்துள்ளது. நாம் நம் அன்றாட இந்திரிய(புலன்களின்) வாழ்விலேயே பற்பல ஜென்மங்களில் நேரத்தை வீணாக்கிக்கொண்டு நமக்குள்ளேயே ஒளிரும் ஒளியை காணாதவர்களாயுள்ளோம். ஞானிகளும், துறவிகளும் கூறினாலும் அத்தகைய ஒரு ஒளி உண்டு என்று நமக்கு நம்பிக்கை ஏற்படாத அளவுக்கு மறதி உள்ளவராய் இருக்கின்றோம். அந்த உள் ஒளிரும் பேரொளியை முற்றிலுமாக மறந்திருப்பதுதான் தமோகுணம் எனப்படுவது. 'அத்தமோகுணத்தைக் கழற்றி நம்மை அந்த உள் ஒளியை நோக்கி செலுத்துக' என்று அந்த ஒளியையே ப்ரார்த்திருக்கின்றனர். அவ்வொளியானது தனக்குத்தானே ப்ரகாசித்துக்கொண்டிருக்கின்றது. அதனுடைய தயவினால்தான் நம் அன்றாட உலகப் பற்றுள்ள வாழ்க்கைகளும் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால் அதை அறிந்துகொள்ள முடியாத அளவு நம் மனதில் இருள். இந்த இருளிலிருந்து தான் நம்மை அந்த ஒளியை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டியிருப்பது. அதற்காகவே தான் இறைவனிடம் ரிஷிகளின் இப்ரார்த்தனை. அது வெளி இருட்டிலிருந்து வெளி வெளிச்சத்திற்கு அல்ல. நம் புத்தியின் இருட்டிலிருந்து உள் ஒளிரும் பேரொளியை நோக்கி.
நம் ப்ரார்த்தனை எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு விரைவாக இறைவன் நம் இருளை போக்கடிக்கிறான். இந்த உணர்வு இல்லாமல் வெறுமையாக செய்யும் பிரார்த்தனையால் பலன் இராது.
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய
சரீரத்தைத் தாங்கி வந்த பிறகு, அதற்கு மரணம் நிச்சயம். ஜாதஸ்ய மரணம் த்ருவம் என்ற பிறகு மரணமின்மை எவ்வாறு வரும்? நாம் இறக்காமல் இருப்பதற்கான வரத்தை வேண்டிக்கொண்டிருக்கிறோமா? அத்தகைய வேண்டுகோள் எவ்வளவு அர்த்தமுள்ளது? அதை இறைவன் எங்கனம் நிறைவேற்றுவான்? இவை அனைத்தும் கேள்விக்குறியாகின்றன. இங்கு அழிவற்றது, நம்முள்ளேயே ஒளிரும் சைதன்யம். அதுதான் நம்மை உயிருடன் வைத்திருப்பது. அது நம் ஆனந்த த்தின், நிம்மதியின் இருப்பிடம். அதனுடன் நம் மனது நிரந்தரமாக உறவு கொண்டிருந்தால் அதுதான் அழிவில்லாத வாழ்க்கை. ஒரு நதி தான் ஓடும் எல்லையோடு கடலை அடைந்தால்தான் அந்த நதியின் வாழ்க்கை அழிவற்றதாகும். அங்கு அந்நதியை கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அந்நதி பெருங்கடலே ஆகி விடுகிறது. அவ்வாறே இந்த ஜீவநதியும் தன்னுடைய மூலமான அந்த மஹா சைதன்யத்தின் விருப்பப்படி அதனுடைய நினைவை ஒரு போதும் விடாமல் வாழ்ந்து இறுதியாக, பெயர், உருவங்களோடு கூடிய சரீரத்தின் எல்லைகளைத் தாண்டி பரமாத்மா என்னும் கடலில் சேர்வது, இதன் இயற்கையான நடைமுறை என்பது அவ்வாறு அழிவற்ற வாழ்வு வாழ்ந்த மஹரிஷிகள் தங்கள் அனுபவத்தில் கண்டு அறிந்த உண்மை. இதுதான் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கையின் வழிமுறை. 'என்றென்றும் அழிவற்ற அப்பேரொளியின் விருப்பப்படி வாழ்ந்து இறுதியாக நம்மை அந்த அம்ருதமயமான இறைவனுடன் ஒன்றாக்கி விடு' என்று அவனிடம் ப்ரார்த்தனை புரிவதுதான் ம்ருத்யோர்மா அம்ருதங்கமய. இப்பொழுது நாம் அவ்வுன்னதமான இருப்பிடத்தை மறந்து கேவலம் மரணத்தை நோக்கி வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளோம். அவ்வாறின்றி அழியும் இந்த சரீரத்தில் அழிவற்ற அப்பொருளையே கண்டு இறுதியில் நாம் அந்த அழிவற்ற தன்மையையே பெற்றுவிடுமாறு நம் மீது அருள் புரிவாயாக என்னும் ப்ரார்த்தனைதான் இது. நதிகள் கடலாக ஆகிவிடுவதைப் போன்று.
ஸ்ரீரங்கமஹாகுரு, 'ஸத்யம்' என்னும் சொல்லுக்கு, 'ஸதியம்' என்று உபநிஷத்தின் விவரணத்தை நினைவூட்டியுள்ளார். அதன்படி, அழிவற்றதற்கும் அழிவுள்ளதற்கும் ஒரு பாலத்தை அமைப்பது 'ஸத்யம்' என்பதாகும். நம் வாழ்க்கை அழிவுள்ள இவ்வுடலால் அழிவற்றவனாகிய இறைவனைக் கண்டு அவனுடன் ஒன்றி விடும் ஆசையால் உண்டான ப்ரார்த்தனை இது. .
இன்று உலகெலாம் கொரோனா என்னும் வியாதியின் பிடியில் சிக்கி தத்தளிக்கிறது. மரண பயம், வாழ்வின் நிச்சயமின்மை எனும் பீதிகளால் நாம் அனைவரும் பயத்தின் பிடியில் சிக்கியுள்ளோம். மேற்கூறிய மூன்று சிறப்பான ப்ரார்த்தனைகளும் இன்று மிகவும் முக்கியமானவைகளாக விளங்குகின்றன. நம் உடல் நலத்தை பேணிக்கொண்டு ஆரோக்கியமாக வாழ நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மற்றவற்றை அந்த கருணை வெள்ளமான இறைவனுக்கு விடுவோம். நம் மனம், என்றென்றும் ஒளிரும் அந்த ஸத்தியத்தினிடமும், நம் புத்தி என்றும் விளங்கும் அப்பேரொளியினிடமும் செலுத்தப்பட்டால் நாம் இந்த அழிவுள்ள வாழ்வை அழிவற்ற வாழ்வின் சைதன்யத்துடன் ஒன்றாக்கினோமானால், அனைத்து விதமான பயம், பீதிகளிலிருந்து விடுபட்டு வாழலாம்.
இறுதியாக ஸ்ரீரங்கமஹாகுருவின் இச்சொல் இங்கு நினைவுறத்தக்கது : 'ஞானத்தை வளர்க்கவும், ஸத்தியத்தை நிலை நாட்டவும் எத்துணை சமூகங்கள் பாடுபட்டுள்ளன! எத்துணை தவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! வேதம், இதிஹாஸம், புராணம் முதலியவற்றைப் பார்த்தால், ஒவ்வொரு விஷயத்தை வெளிக்கொணர அநேக லக்ஷம் வருடங்கள் தவம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. இவ்வாறு, கேவலம் மனித முயற்சியால் அடைய முடியாத, இறைவனின் அருளால் மட்டுமே ஆக வேண்டியதையே அவனிடம் ப்ரார்த்தித்திருக்கின்றனர். மஹரிஷிகள் தாங்கள் அஸத்யத்திலிருந்து ஸத்யத்திற்கு, இருளிலிருந்து அந்த ஒளி வெள்ளத்திற்கு, மரணத்திலிருந்து அழிவில்லாமைக்கு சென்றடைந்து, தம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கினார்கள். எனினும், உலகினர் அனைவரும் அதே போன்ற நிம்மதியை பெறுமாறு ஆக வேண்டும் என்னும் கருணையினால் இந்த ப்ரார்த்தனையை நம் எல்லோருக்காகவு ம்முழங்கியுள்ளார்கள். அவர்களுடைய மனதின்படி நம் வாழ்வின் வெற்றிக்காக என்றென்றும் இப்ரார்த்தனையை செய்வோமாக.