மூலம்: தாரோடி சுரேஷ்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
இக்காலத்தில் உணவு தயாரிக்கும் முறையில் மிகுந்த மாறுபாடுகளை காண்கிறோம். நூறு வருடங்களுக்குப் பிறகு இன்று ஒருவர் பாரதத்திற்கு வர நேர்ந்தால் உணவு தயாரிக்கும் முறையை அடையாளம் காண இயலாது.
முதலில் நம் கவனத்தை கவர்வது இயந்திரமயமானது. மிக்ஸி போன்றவை நம் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தி பழமை வாய்ந்த அடுப்பு, கல்லுரல், மற்றும் உலக்கை போன்றவற்றிற்கு பதிலாக இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது உடனடியாக தயாரிக்கக்கூடிய உணவு வகைகள்,.
உடனடி தோசை மாவு, உடனடியாக பயன்படுத்தக்கூடிய பொடி வகைகள் முதலியன. கணவன், மனைவி இருவரும் உழைக்க செல்லும் தவிர்க்க இயலாத இன்றைய சூழலில் சமையலை குறைந்த நேரத்தில் நிறைவு செய்ய இவை பெரிதும் உதவுகின்றன.
மூன்றாவதாக பாத்திரங்களில் ஏற்பட்ட மாற்றம். பித்தளை, தாமிரம், வெண்கலம் இவற்றிற்கு மாற்றாக பளபளக்கும் பிளாஸ்டிக் இடம் பிடித்துள்ளது. அதனால் ஏற்படும் தீமை குறித்த போதுமான விழிப்புணர்வு இருப்பினும் அவைகளின் கவர்ச்சிகரமான தோற்றமும், குறைந்த விலையும் மக்களை கவர்கின்றன. அதே போன்று அலுமினியம், எவர்சில்வர், கண்ணாடி, மற்றும் பீங்கான் பாத்திரங்களின் விசேஷமான உபயோகங்களையும் முக்கியமாக காணலாம்.
உணவு சமைக்குமுன் நீராடுவது தேவையில்லை. துவைத்த தூய்மையான ஆடைகள் இன்றியமையாதவை அல்ல. கைகளை நன்கு சுத்தம் செய்து சமைத்தால் போதாதா? உணவு சுத்தமாகவும், சுவையாகவும் இருந்தால் போதுமானது.
பண்டைய காலத்தில் அடுப்படியை சுத்தமாக மெழுகி வண்ண பொடிகளால் கோலமிட்டு நீராடியபின் சமைப்பது முறையாக இருந்தது. ஆனால் இன்றைய உலோக அடுப்பை சுத்தப்படுத்தி அலங்கரிப்பது வினோதமானது.
சமைக்க வேண்டியது ஆணா, அல்லது பெண்ணா? முன்காலத்தில். இல்லத்தரசி இல்லத்தில் இருப்பவளாகவே இருந்தாள். எனவே அவள் சமைப்பது முறையானதாக கருதப்பட்டது. இப்போது அந்நிலை மாறி விட்டது. மனைவியும் வேலை நிமித்தம் வெளியில் செல்கிறாள். எனவே நேரம் கிடைப்பவர்கள் சமைக்க வேண்டும் என்பது வாதம்.
சமைப்பவரின் மனநிலையும். சமையலில் பாகம் வகிக்குமா? எத்தகைய அறிவற்ற வினா இது? உணவு சுத்தமாகவும் சுவையாகவும் இருப்பின் போதுமானது. துயரத்துடனோ, கோபத்துடனோ சமைக்கப்பட்டிருப்பினும் அதனால் உணவு கெடாது. பல வகையான உணவுகளை சமைக்கும் முறையும், அவற்றிற்கான பொருட்களை சேர்க்கும் விகிதமும், அளவும் அறிந்திருந்தால் போதுமானது. சுவை சுகத்திற்கு, சுத்தம் சுகாதாரத்திற்கு, பற்பல வகைகள் மகிழ்ச்சிக்கு என்று அறியப்பட வேண்டும். இவ்வாறு சமைத்தலே சமையற்கலை. சமையற்கலை வல்லுனர்கள் இதற்குமேல் எதுவும் அறிந்து கொள்ள தேவையில்லை.
இல்லத்தில் சமையலறை எங்கு அமைய வேண்டும்? அடுப்பு எந்த திசையில் இருத்தல் வேண்டும்? மற்றும் சமைப்பவர் எந்த திசை நோக்க வேண்டும்? எந்தெந்த நாட்களில் என்ன வகை உணவுகள் சமைக்கப்பட வேண்டும்? - இவையனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தவை.
இவ்வாறான எண்ணமே இக்காலத்தில் நிலவுகின்றது. ஆயின் நம் நாட்டின் பண்டைக்கால உணவு சமைக்கும் வழக்கங்களில் இன்று எஞ்சியுள்ள சின்னங்கள் வேறு விதமான கதையை கூறுகின்றன. "கலை என்பது கலைகளின் நாயகனிடம் (இறைவனிடம்)கொண்டு செல்ல வேண்டும்" என்பது ஸ்ரீ ஸ்ரீரங்கமஹாகுரு கூறிய சூத்திரம். மேற்கண்ட கூற்றின் அடிப்படையில் இச்சூழலில் சமையலைக்குறித்து அடுத்த பதிவுகளில் ஆராய்வோம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.