Showing posts with label 220_ayvmarticle. Show all posts
Showing posts with label 220_ayvmarticle. Show all posts

Monday, December 16, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 48 (Sriranga Mahaguru - 48)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 37

வரி எதற்காக?
===========================================================

மூலம்: சாயாபதி
தமிழாக்கம்: ஜானகி


உயிர்வாழ்வதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று.  கடலில் ஏராளமான நீர் இருக்கிறது. ஆயினும் அதனால் தாகம் அடங்காது. அத்தண்ணீர் விவசாயத்திற்கும் பயன்படாது.  அதை உபயோகிப்பது எவ்வாறு? உபயோகப்படாத நீரே கடலில் நிறைந்துள்ளது. உப்பு, உலோகம் மிதமாக மட்டும் கலந்திருந்தால் அந்த தண்ணீர் உபயோகத்திற்கு ஏற்றது.

                ஆதவனின் கடுமையான வெப்பம் கடல் நீரை உறிஞ்சி உப்பு, உலோகத்தை வேறுபடுத்துகிறது. கோடையில் பூமியும் நீரும் உஷ்ணமடைகின்றன. அவ்வெப்பமே முன்வரும் குளிர்ச்சிக்கு காரணமாகிறது. சுடுகிரணங்களை கொண்ட ஆதவனே நீராவியினால் மழை மேகங்களை உண்டாக்கும் அமுதகிரணங்களை கொண்டவனாகவும் இருந்து  குளம் நதி முதலியவை நிரம்பி வழியும்படி செய்கிறான். அந்த நீர் குடிப்பதற்கும்,  பயிர்களுக்கும் உபயோகப்படுகிறது. எங்கு நோக்கினும் உபயோகத்திற்கேற்ற நீர்நிலைகள் உருவாகின்றன. இதுவே சூரியன் தண்ணீரை உறிஞ்சும் ரகசியம்.

              ஆயிரம் மடங்கு நீரை வழங்குவதற்கே சூரியன் நீரை உறிஞ்சுகிறான் என மகாகவி காளிதாசன் கூறுகிறான். அவ்வாறே வரி விதிப்பின் ரகசியத்தையும் உரைக்கிறான். மக்களின் ஏற்றமே வரி விதிப்பதின் காரணமாக இருக்க வேண்டும்.

            உபயோகப்படாமல் நீர் கடலில் உள்ளது போன்று நாட்டிற்கு உதவாதவாறு  செல்வம் சிலரிடம் முடங்கியுள்ளது. கடல் நீரை ஆதவன் மழைநீராக்கி எங்கெங்கும் அளிப்பது போன்று செல்வம் படைத்தவரிடமிருந்து வரி வசூலித்து அதை நாட்டின் ஏற்றத்திற்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் அது  உபயோகப்படுகிறது. இதனால் செல்வமற்றவர்க்கும் ஏற்றம் உண்டு.

            கடல்நீர் ஆவி ஆனாலும் அது வற்றுவதில்லை. அதனால் கடலுக்கு கேடு ஏதும் இல்லை. இவ்வாறு செல்வம் நிறைந்திருப்பவர்களுக்கு தீங்கு ஏதும் ஏற்படாத வண்ணம் வரி வசூலிப்பது அரசியல் அமைப்பாக  விளங்குவது சிறப்பு.

               ஆதவன் கடல்நீரை உறிஞ்சுவது தன்னுடைய தாகத்தை தணிப்பதற்கு அல்ல. பூமியின் உஷ்ணத்தை தணிப்பதற்கு. அவ்வாறே  வரிப்பணம் நாட்டை ஆள்பவரின் பை சேருவதற்கு அல்ல. நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்காக. மகாகவியின் வார்த்தைகளின் மர்மமென்னவென்பதை நாட்டை ஆள்பவர் நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே நாடு மேன்மையடையும்.