Showing posts with label 217_ayvmarticle. Show all posts
Showing posts with label 217_ayvmarticle. Show all posts

Sunday, December 8, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 47 (Sriranga Mahaguru - 47)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 36

நான் செய்தவினை வலிமையாக இருந்தால்?
===========================================================

மூலம்: வரததேசிகாசார்யார் தமிழாக்கம்: வனஜா


  “நான் செய்தவினை வலிமையாக இருந்தால் நீ என்ன செய்வாய் ரங்கா” என்னும் புரந்தரதாஸரின் பாடல் ப்ரபலமானது. இப்பாடலினால் மேல்நோட்டத்திற்கு வினைபயனிலிருந்து தப்புவிப்பது இறைவனாலும் இயலாது என்று தோன்றுகிறது. ஆயின் ஆராய்ந்து பார்க்கையில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதை உறுதிபடுத்துவதே  இவ்வேண்டுதலின் கருத்து.

கர்மபலனே இறைவனைவிட வலிமையானது என்னும் கருத்து புரந்தரதாஸருக்கு  இருந்திருப்பின் இப்பாடலை இறைவன் முன் பாடியிருக்கவேண்டியதில்லை. இறைவன் முன்னிலையில் வினைப்பயனே வலிமையானது என்று புகழ்ந்து  இறைவனை சீண்டி, அவன் "அடேய் கொடிய கர்மமே!  என் அடியவர்களை உன் புகழைபாட பயன்படுத்துகிறாயா? இதோ உன் அறைகூவலை எதிர்கொள்கிறேன். என்னிடமிருந்தே வலிமை பெற்று என்னையே எதிர்க்கும் உன் வறட்டு கர்வத்தை  முறியடிக்கிறேன் " என்று அவன் கர்மாவின்  கர்வத்தை அடக்கட்டும் என்று அன்புடன் இறைவனை துதிக்கும்  ஒரு வகை இது.  

ஆனால் இறைவன் வினைப்பயனின் தலைவனாக இருப்பதால் கர்மவினைக்கு தக்க பலனை அளிக்கவேண்டும். எண்ணியவுடன் கர்ம வினையை அழிக்கும் வல்லமை  இருப்பினும்  அதற்குறிய பலனை அளித்தே தீரவேண்டும். அதற்குரிய மரியாதை மற்றும் அதற்கு நேர்மாறான அடியவரின் வேண்டுதல் இரண்டையும்  நிறைவேற்றவேண்டும். ஆனால் கர்மத்தின்  தளையிலிருந்து விடுதலை தர கோரி் பக்தர்கள்  வேண்டும்போது  கருணையுடன்  அவரின் விருப்பத்தை நிறைவேற்றவும் வேண்டும். இரண்டையும் நிறைவேற்றுவது எவ்வாறெனில் கர்மத்திற்கு பலன் அளிக்கிறான். ஆனால் பக்தர்களுக்கு அதன் தீவிரத்தை குறைக்கின்றான்.

ஓரிரண்டு உவமைகள் மூலம் இதை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். முற்பிறவியில் செய்த வினைபயனால் ஒரு பக்தனுக்கு இப்பிறவியில் மரண தண்டனை அனுபவிக்கும் விதி உள்ளதென்று வைத்துக்கொள்வோம். ஆனால் இறைவனின் கருணையால் இந்த மரணதண்டனையின் அனுபவம் அவனுக்கு கனவிலேயே கடந்து போகலாம். அல்லது விழிப்பு நிலையில் காலில் முள் குத்தி அவ்வளவிலேயே தூக்கிலேறும் கர்மவினை தீர்ந்து விடலாம்.

இதனால் கர்மம் மற்றும் கருணை இருவருக்குமே மனநிறைவு. இருவரின் மானமும் மிஞ்ஜியது. பரிசும் அளித்தது போலாயிற்று. கர்மதேவி மற்றும் கருணாதேவி இருவரையும்  த்ருப்திசெய்யும் ‘தக்ஷிண நாயகன்’ (எல்லா மனைவியரிடமும்  சமமான அன்பும், மதிப்பும் உடையவன்) என்று பக்தர்கள் இறைவனை துதிக்கின்றனர்.