Showing posts with label 127_ayvmarticle. Show all posts
Showing posts with label 127_ayvmarticle. Show all posts

Monday, July 15, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 26 (Srirangamahaguru - 26)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 15
(மூலம்: திரு. வரததேசிகாசார்யார் தமிழாக்கம் : திருமதி ஜானகி)


இறைவனின் முன் தீபம் ஏன்?
            கடவுளின் சன்னிதானத்தில்  காலை, மாலை நெய் அல்லது எண்ணெய் தீபமேற்றுவது பாரதத்தில் அனைவரின் இல்லத்திலும்   வழக்கமாக உள்ளது. அணையாத நந்தா தீபமேற்றும் வழக்கமும் உண்டு.
             ஏன் இத்தீபம்? மலை, குகைகளில் வாழும் அநாகரீக ஜன சமுதாயத்தை சார்ந்த மக்கள் இருட்டை போக்குவதற்கென நெய் எண்ணெய் தீபங்களை ஏற்றுவதில் பொருளுள்ளது. மின்விளக்குகளால் இரவையும் பகலாக்கும் நவநாகரீக சமுதாயத்தில் ஏன் இந்த பழக்கமோ?  ஒவ்வொரு இல்லத்திலும் இதற்கு எவ்வளவு செலவு? நாட்டில் வீண் செலவு அல்லவா? இறைவனே  சூர்ய சந்திரர்களுக்கும் ஒளி வழங்குகிறான் என்பது ஒருபுறம்; அகல் விளக்கு ஏற்றுவது ஒருபுறம். ஏன் இந்த முரண்பாடு ? சூர்யனைக்  காண மின்கல விளக்கு தேவையா?
              இதற்கு தகுந்த பதில் என்ன? மலை குகைகளில் வாழும் அநாகரீக மக்கள் ஏற்படுத்திய பழக்கம் இது என்பது சிலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தம் இதயகுகையில் அஞ்ஞானமெனும் இருளை அகற்றும் தீபம் ஒன்றினை கண்டு களித்து வாழ்ந்தவர்கள் தந்தளித்த பழக்கம் இது.
          ஒவ்வொரு ஜீவனின் இதயகுகையிலும் ஒளிர்விடும் தீபம் ஒன்று உண்டு. அத்தீபம் தான் வாழ்க்கைக்கு ஒளி. வாழ்வெல்லாம் நிறைந்து ஒளி வீசினும் வாழ்க்கையின் எந்த விபத்து, விகாரத்திற்கும் உட்படாமல் மறைந்திருக்கும்  தீபம் அது. அவ்வொளியின் பாதையில் உள்நோக்கி தேடி தன்னிடம் உவன்று வருபவர்க்கு  வேறெங்கும் காணக்கிடைக்காத வெளிச்சத்தையும், பரமானந்தத்தையும் நிரைக்கும் தீபம் அது. அவ்வாறான தீபமே இறைவன், பரம்ஜோதி.
          வாழ்க்கையில் மறைந்திருக்கும் அஜ்ஜோதியிடம் வழிகாட்டி, பரமானந்தத்தில் திளைக்கச் செய்யும் ஒரு திட்டம் தான் காலை, மாலை தீபமேற்றும் வழக்கம்.
             காலை, மாலை  இருவேளைகளும் இயற்கையிலேயே சாந்தியையும், நிச்சலத்தன்மையையும் அருளும் இடைக்காலங்கள். அவ்வாறே இவற்றை மனதிற்கும் தானாகவே அளிக்கும் காலம் அது என்பது ஆன்றோர்களின் அனுபவம். மனம் தானே அமைதி, சலனமற்ற தன்மை அடையும் காலத்தில் மனதிற்கு மூலமாக உள்ள ஜோதியை நோக்கி பயணிக்கச் செய்வதற்கானதொரு   திட்டமே அவ்வேளைகளில் தீபமேற்றுவதின் மர்மம்.  அப்பரம்ஜோதியே  நம் வாழ்விலும், மனையிலும்  நிறைந்து ஒளிர்கிறது என  அறிவிக்கும் கலாச்சாரம் இத்தீபமேற்றும் வழக்கத்தில்  காண்கிறது. என்றும் அணையாத அந்த ஆனந்த தீபத்தின் இனிய நினைவுதான் நந்தா தீபம்.
                        (அடுத்த வியாழனன்று  தொடரும்
)