- மூலம்: கஜானன பட்டா
- தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்
- மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
ஆலயம் - மனித உடலின் நகல்
இந்த மனித இயந்திரத்தை கவனித்த யோகிகள், இதனுள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் ஸஹஸ்ராரம் என்னும் ஏழு மையங்களை தரிசித்தனர். இந்த ஏழு மையங்கள் ஏழு வாயில்களாக விளங்கி, உள் ஒளிரும் இறைவனுடைய தரிசனத்திற்கு வழி செய்து கொடுக்கின்றன. இந்த ஏழு மையங்களில் மூன்று மையங்கள் மிகவும் முக்கியமானவைகளாகும். இவற்றில் ஒன்று முதன்மையானதாகும்.
இவ்வாறான உள் அமைப்பை அடையாளமாக கொண்டு, ஆலயங்களிலும் முறையே ஏழு வாயில்கள், மூன்று வாயில்கள், ஒரு வாயில் என்னும் முறையிலான அமைப்பை ஏற்படுதினர்.
முதுகெலும்பின் அடையாளமாக ஒரு த்வஜஸ்தம்பம், இறைவனின் எதிரில் ஒருவருக்கு உண்டாகும் மேல்முகநோக்கின் அடையாளமாக ஒன்று-மூன்று-ஐந்து மற்றும் ஏழு கலசங்களின் அமைப்பு, ஆலயத்தின் சுற்றிலும் முறையே பௌதிகம், தைவிகம், ஆத்யாத்மிகங்களாகிய சிற்பங்கள், அந்தரங்கத்தில் நடைபெறும் ஸத்பக்திகளின் மோதல் மற்றும் ஸத்சக்திகளின் வெற்றியைக்குறிக்கும் கதைகளின் கல்வெட்டுக்கள், அறுபத்திநான்கு ஆயகலைகளின் வெவ்வேறு சுவடுகள் - இவை அனைத்தும் மனித உடலின் உள்கட்டமைப்பை ஒத்திருக்கின்றன. ஸ்தம்பங்ககளின் எண்ணிக்கை இருபத்தி நான்கு, முப்பத்தி ஆறு, அறுபத்தி நான்கு, தொண்ணூற்றி ஆறு, நூற்றி எட்டு, ஆயிரத்தி எட்டு என்று இவ்வாறு படைப்பின் விரிவிலுள்ள தத்துவங்களின் பிரதிநிதியாக வந்துள்ளன.
படுத்துள்ள நிலையில் உள்ள ஒரு மனிதஉடலுக்கு ஒப்பிடும்போது பாதங்களே முன்வாசல், ஜனனேந்த்ரியம் த்வஜஸ்தம்பம், வயிறே பலிபீடம், இதயமானது நவரங்கம், கழுத்து ஸுகநாஸி, தலை கர்ப்பக்ருஹம், ப்ரூமத்யத்தின் ஆக்ஞாசக்ரஸ்தானமே மூலபீடம். செங்குத்தான நிலையில் உள்ள மனிடஉடலுக்கு ஒப்பிட்டு பார்த்தோமானால் பாதங்களே நிதிகும்பம், நாளங்களே முழங்கால்கள், அஸ்திவாரங்களே தொடைகள், இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதிகளே சுவர்கள், தோளே வலபி, கைகள் ப்ராகாரங்கள், நாக்கானது மணி, இதயமே இறைவனின் சிற்பம், கழுத்தே விமானம், தலையே சிகரம், ஸஹஸ்ராரம் எனப்படும் ப்ரம்மரந்த்ரமே கலசங்களாகி உள்ளன.
இனி, தத்வமயமாய் யோகத்தின் ஒருங்கிணைப்பான சக்ரமயமாயும் ஒரு ஒற்றுமையை காணலாம். ஐந்து வகையான கோசங்களின் பார்வையில் நோக்கினால் வெளிப்ராகாரம் அன்னமயமாகவும், உள் ப்ராகாரம் ப்ராணமயமாகவும், நவரங்கசுற்று மனோமயமாகவும், உள் ப்ராகாரம் விஞ்ஞானமயமாகவும் மற்றும் கர்ப்பக்ரஹம் ஆனந்தமய கோசமாகவும் கூறப்படுகிறது.
ஆலயம் என்பது நம் பண்டைய மஹரிஷிகளின் தவத்தின் பயனாய் யக்ஞம்-தானம்-தவம், ருதம்-ஸத்யம்-தர்மம், உலகவாழ்க்கையின் செழிப்பு-ஆன்மீகவளர்ச்சி, மற்றும் நான்கு வகையான புருஷார்த்தங்களின் அடிப்படையில் சிற்ப பூஜை வடிவில் பரவியுள்ளது. ஆலயம் என்னும் தத்துவம் தர்மம், பிரம்மம், ரஸம் என்னும் மூன்று சிறப்பான வழிகளால் கூறப்பட்டு, க்ஷேத்ரம்-தீர்த்தம்-யாத்திரையாகி, ஜீவனை தேவனாக்கும் உன்னதமான உறுதியான சங்கல்பத்துடன் கூடியுள்ளது. இது தேச காலத்திற்கு உட்பட்டு மாறுபடும் பிண்டாண்டத்தில், மாறுபடாத பிரம்மாண்டத்தைக் காணும் ஒரு முயற்சியாக உள்ளது.