Thursday, June 3, 2021

நான் வளமாக இருக்க விரும்புகிறேன்(Naan valamaaga irukka virumbugiren)

மூலம்: தாரோடி சுரேஷ் 
தமிழாக்கம் : வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



அனைவரும் வாழ்க்கையில் நன்றாக(வளமாக) இருக்க விரும்புகிறோம். நன்றாக வாழ்வதற்கு முதலில் 'நலம்' என்பது யாது என்ற புரிதல் தேவை. ஒரு மரத்தை கூர்ந்து கவனித்தால் அதன் விதையானது மரமாகும் சுழற்சியை தன்னுள் ரகசியமாக கொண்டிருப்பதை அறியலாம். ஒரு விதையை மண்ணில் ஊன்றினால் அதன் தன்மையை வளர்ச்சியின் அனைத்து பருவங்களிலும் செலுத்துகிறது. ஒரு மாவிதை மாமரமாகத்தான் வளரும். இவ்வாறு நிகழ்ந்தால் தான் மரம் நன்கு வளர்ந்திருப்பதாக கூறுவோம். மேற்கண்ட உவமையில் மரத்தின் நலம் விதையில் அடங்கும். விதையின் விருப்பம்  படிப்படியான சுழற்சியால் தன் திட்டப்படி மரமாக வளர்தலே ஆகும்.

அதே போன்று மனித வாழ்வின் மர்மங்கள் அனைத்தும் ஆத்மாவில் அடங்கியுள்ளது. இக்காரணத்தால் நாம் வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஆத்மாவின் நோக்கத்தை ப்ரதிபலிக்க வேண்டும். ஆத்மாவின் நோக்கத்திற்கேற்ப வாழ்வதுதான் சரியான நடத்தையாக கருதப்படும். இல்லாவிடில் அது மாவிதையை ஊன்றி. வேப்பம்பழத்தை அறுவடை செய்தது போலாகும்.

தண்ணீரானது தண்டு, கிளைகள், இலைகள் அனைத்தையும் சென்றடைய வேண்டுமெனில் அத்தண்ணீர் மரத்தின் வேரில் ஊற்றப்பட வேண்டும். அதே போன்று நம் வாழ்வெனும் மரத்திற்கும் வேர் உண்டு. நம் உடலின்  எல்லா  உறுப்புகளின் செயல்பாடுகளும் அந்த(வேரெனும்) மையத்தின்  தொடர்புடன் தான் இயங்கவேண்டும். ஜீவன் அல்லது ஆத்மா எனப்படுவதே அந்த மையமாகும். ஆன்மாவின் தொடர்பு தடைபட்டால் வளர்ச்சியில் அதன் தன்மை  மறையும்.   ஆன்மா(மூலம்) தன் தன்மையை எவ்விடத்த்தும் வெளிப்படுத்தவேண்டுமாயின் நமது செயல்கள் அனைத்தும் மூலத்திலிருந்தே தோன்றி மீண்டும் அதிலேயே நிறைவுற வேண்டும்.

மனித உடலும் ஒரு மரத்தைப்போன்றதே. இந்த வினோதமான மரம் வேர்கள் உச்சியிலும், கிளைகள் கீழ்நோக்கியும் உள்ளதானது. "ஊர்த்வமூலம் அத: சாகம் அச்வத்தம் ப்ராஹுரவ்யயம்" என்பது போல். இது அழிவற்ற ஆலமரம் என்றழைக்கப்பட்டது.  இவ்வுடலின் வேர் மூளையில் உள்ளது. ஜீவனின் வேரும் அவ்விடமே உள்ளது. தலை எல்லா உறுப்புகளைக்காட்டுலும் தலைசிறந்தது. எல்லா நரம்புகளும், உருப்புக்களும் தலையிலிருந்து தொடங்கி கிளைகளைப்போன்று கீழ்நோக்கி பரவுகின்றன. இந்த கீழ்நோக்கிய உடலில்(வாழ்க்கையில்) ஜீவன் எப்போதும் சஞ்சலமாகவே உழல்கிறது. இக்கருத்தை முதலில் கண்டறிந்தவர்கள் பாரதத்தின் முனிவர்கள்.

நாம் உறக்கத்திலிருந்து எழும்போது கண் விழிக்கிறோம். அதாவது உறக்க நிலையிலிருந்து வெளிஉலக செயல்களுக்கு அடிவைத்து துவக்குகிறோம். ஆனால் உள் ஒளிரும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இருளும், அறியாமையும் அற்ற யோகஸமாதி எனும் த்யான நித்திரையிலிருந்து வெளிஉலகிற்கு வருகின்றனர். இவ்வாறு ஆத்மாவில் ஒன்றுபடுவதே நம் உண்மை நிலை.

ஜீவன்  எனும் ஒன்று இருப்பதினால்  உருவானது  ஜீவனம்(வாழ்க்கை). அப்பேற்பட்ட ஜீவனின் நோக்கத்தை ஒதுக்கிவிட்டு புலனின்பத்தின் வாழ்க்கையை மட்டும் வாழலாகாது. நம் எல்லா செயல்களும் புறஉலகு சம்பந்தபட்டதாகவே இருப்பின், அதனை 'ஜீவனம்'(வாழ்கை) என்றே கருத இயலாது. பின் அதனை நல்வாழ்வு என கருதுவது எங்ஙனம்? வாழ்கையின் வளர்ச்சி அதன் மூலத்தினின்றும், வரையறுக்கப்பட்ட திட்டத்திலிருந்தும் வழுவாது இருத்தல் அவசியம். அவ்வாறான வாழ்க்கை மட்டுமே நல்ல, வளமான வாழ்க்கை எனப்படும்.

ஒளி பொருந்திய ஆத்மாவானது ஸத்யம்(முடிவான உண்மை), சிவம்(மங்களம்), சுந்தரம்(அளவில்லா எழில்) எனத்திகழ்ந்து மனித வாழ்வெனும் மரத்தின் வேராக விளங்குகிறது. அனைத்து சக்தியும் இதனுள்ளடங்கியுள்ளதால் இது நலம்பொருந்திய, ஒளிமயமான, இன்பமயமான நிலையாக உள்ளது. "ஆத்மாவின் நோக்கமானது தன்னை (அதாவது யோகநிலை பெறுவதை) மறவாமல் புலனின்பங்களை அனுபவித்தல் வேண்டும் என்பதே" என்று ஞானிகள் தீர்மானமாக உறைக்கின்றனர். முனிவர்கள் இத்தகைய வாழ்விற்கான வழிமுறைகளை  அறம், பொருள், இன்பம், வீடு(முக்தி) எனும்  நான்கின் அடிப்படையில் வகுத்துள்ளனர்.  இக்கட்டளைப்படி வாழ்ந்தால் நல்வாழ்வு  பெற்றதாக பொருள்படும்.

ஏனெனில் அது நல்வாழ்வின் அளவுகோலான பரம்பொருளுடன் ஒன்றிட உதவுகிறது. தர்மம், அரத்தம்(நியாயமான வழியில் ஈட்டும் பொருள்), காமம்(நியாயமான விருப்பங்களை ஈடேற்றுதல்), முடிவாக மோக்ஷம்(முக்தி) இவற்றை அளித்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.