சிலர் "இறைவன் எங்கிருக்கிறான்? எல்லாம் நம் சமாதானத்துக்காக நாமே கைகொண்ட கற்பனைப்படைப்பு. வீணாக 'இறைவன், இறைவன்' என்று நினைத்து வாழ்கையை வீணடிக்காதீர்கள். இறைவனை பூஜித்தே ஆகவேண்டும் எனும் மனமிருந்தால் வயதுமுதிர்ந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு செய்யுங்கள். இப்பொழுது உழைத்து சம்பாதிக்கும் வழியை பாருங்கள்" என்று கூறுவதுண்டு. இன்னும் சிலர் "நான் வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டிலேயே கழித்தேன். ஆனால் இறைவன் எனக்கு புலப்படவில்லை. அனைத்தும் பொய்யானதே. என்னைப்போல் நீங்களும் வாழ்கையை வீணாக்கி கொள்ளாதீர்கள்" என்று அறிவுரை வழங்குகின்றனர். இக்கூற்று எத்துணை உண்மை என்பதை ஶ்ரீரங்கமஹாகுரு கூறிய ஒரு கதையின் மூலமாக உணர முயல்வோம்.
ஒரு இரும்புக்கதவு, பல ஆண்டுகளாக திறவாமலே வைக்கப்பட்டுள்ளது. இரும்பு துருப்பிடித்து திறக்க முடியாத நிலையில் உள்ளது. அக்கதவின் உட்புரம் அபாரமான நிதி உள்ளது என்று சிலர் கூறினர். ஆதலால் அதனை திறந்து பார்க்கும் ஆவல் ஒருவருக்கு ஏற்பட்டது. ஆனால் திறக்க முடியாத நிலை. அப்பொழுது ஒருவர் "சிறிது எண்ணை தடவினால் திறக்க முடியும்" என்றார். ஒரே ஒரு துளி எண்ணையை கதவிற்கு தடவி திறக்க முற்பட்டபோது தோல்வியே கண்டது. உடனே "பார்தீர்களா ஐயா, உமது கூற்று சுத்த பொய். எண்ணையினால் துருவிலகாது" என்றார்.
எவ்வளவு துருபிடித்தால் அதனை விலக்க எவ்வளவு எண்ணை தேவை எனும் கணக்கு தெரியாவிடில் இவ்வாறான விவேகமின்மை தலையெடுக்கும்.
இதுபோன்றே நாம் நமது அந்தரங்கத்தின் வாயில்களை அநேக ஆண்டுகளாக திறவாததால் ரஜோகுணம்-தமோகுணம் எனும் துரு பலமாக பிடித்துள்ளது. துரு எவ்வளவு பலமானது என்பதை பொருத்து எவ்வளவு எண்ணை தேவை என்பதை தீர்மானித்தல் அவசியம்.
ஒரே ஒரு தேக்கரண்டி எண்ணையைப்போல் சிறிதளவே பக்தியினால் அநேக பிறவிகளாக துருபிடித்துள்ள உள்மனத்தின் வாயிலை திறக்க இயலாது. ஆதலால் தினமும் இறைவனின் திருவடிகளை பக்திரசத்தால் நினைத்து நினைத்து தொழுதுவந்தால் மனக்கதவு திறந்து அருள்வடிவான இறைவனின் தரிசனம் ஆவது திண்ணம் என்பது அநுபவிகளான மகரிஷிகளின் வாக்கு.
புரந்தரதாசர்- "மனிதப்பிறவி அடைந்து, நாவும் உள்ளபோது 'க்ருஷ்ணா` எனலாகாதோ?" எனப்பாடினார். அவர் "வேலை பளுவிலிருந்து ஓய்வு பெற்றபின்" எனப் பாடவில்லையே!? ஆதலால் உடலில் வலிமை உள்ளபோதே இடையறாது இறைவன்பால் பக்திரசம் எனும் தைலத்தை பொழிந்து மனக்கதவை திறப்போமாக. இப்பிறவியிலேயே அவனது சந்நிதியை அடையும் பேறு பெற முயல்வோம்.
குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.