மூலம்: கே.எஸ்.ராஜகோபாலன்
தமிழாக்கம்: பி.ஆர்.சுதா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
பற்றினை துறந்தால் மட்டுமே இறைவனை உணர இயலும் எனும் நம்பிக்கை உள்ளது. பகவத்கீதையில் ஸ்ரீக்ருஷ்ணனும் விடாமுயர்ச்சியும், பற்றறுத்தலுமே மனதை அடக்க ஒரே வழி என்று கூறுகிறார். நாம் வாழும் வரையிலும் நமக்கு ஏராளமான தேவைகள் இருப்பதுண்டு. அவற்றினின்றும் விடுபடுவது எங்ஙனம்? ஒரு சொல் வழக்கு "கடவுளை உணர்ந்தால் மட்டுமே உலக விஷயங்களில் பற்றருக்க இயலும். ஆனால் பற்றறுபடாமல் இறைவனை காண இயலாது" என்கிறது. இது "பைத்தியம் தெளிந்தாலே திருமணம் நடக்கும், திருமணம் நடந்தாலே பைத்தியம் தெளியும்" எனும் புதிர் போல் உள்ளது. எனவே பற்றற்றநிலை குறித்து சிறிது சிந்தித்தல் அவசியம்.
பற்று எனில் மிகையான அன்பு, மோகம். பற்றற்றது எனில் அதிலேயே மூழ்கிவிடாதிருத்தல். ஒரு முதியவர் அதிகமான பற்றுதலுக்கு ஒரு உவமையை கூறியுள்ளார். நாற்காலியில் அமர்வது தவறல்ல. ஆனால் எழும்போது அதுவும் நம்முடன் எழும்பினால் எவ்வாறு சமாளிப்பது? இவ்வுவமை பற்றறுத்தலின் தேவையை விளக்குகிறது.
ஸ்ரீ ராமன் முடிசூட வேண்டிய தருணத்தில் வனத்திற்கு செல்லுமாறு கட்டளையிடப்பட்டாலும் சிறிதும் படபடப்பின்றி ஏற்றுக்கொண்டார் என வால்மீகி முனிவர் வர்ணிக்கின்றார். நாம் ஒரு விஷயத்தில் ஈடுபடுகையில் அதன் மீதே கருத்தை செலுத்த வேண்டும். அந்நேரத்தில் மற்ற விஷயங்களில் பற்றின்றி இருத்தல் அவசியம். அப்போதுதான் இலக்கை அடைய இயலும். இறை தியானத்திற்காக அமரும்போது இதர உலகாயதமான விஷயங்களை தள்ளி வைத்தல் அவசியம். இவ்வாறு நடக்க பழக்கம் தேவை. நாம் ஈடுபடும் அனைத்திலும் பற்று கொண்டால் அவை நம் மனதை முழுதும் ஆக்ரமித்துக்கொள்ளும். பின் தியானிப்பது எவ்வாறு?
பற்றற்றவர்கள் எவரேனும் இருந்தது உண்டா என வியக்கலாம். ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் கோயில் அர்ச்சகராக இருந்தார். ஒருமுறை கோயில் நிர்வாகிகள் வந்து "அதிகாரிகள் நீங்கள் இப்பதவியை துறக்க கட்டளை இட்டுள்ளனர்" என்றனர். அது வரையிலும் சிரத்தையுடனும், பக்தியுடனும் செய்து வந்ததை நிறுத்தி "அப்படியா" என்று தன் மேல் துண்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார்! அவரை மீண்டும் பணிக்கு அழைத்துவர அதிகாரிகள் மிகவும் சிரமபட வேண்டி இருந்தது.
எதிர்காலத்தில் நல்ல பணியில் அமர எண்ணும் மாணவன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி மற்ற கவர்ச்சிகளை விலக்குகிறான். அதேபோன்று இறைவனை அடைதலே இறுதியான இன்பத்தை அளிக்கும் எனும் உறுதியுடன் சாதனை (தவம்) செய்பவனுக்கு மற்ற அனைத்துவகை பற்றுகளும் தாமாகவே கழன்று விடும். எனினும் பொதுவாக எல்லாவித இயற்கையான ஆசைகளையும் அடக்கி ஸாதனை செய்வது இயலாது. எனவே உலக இன்பங்களை பற்றின்றி நுகர்வது எவ்வாறு என்று உணர்தல் வேண்டும். உலக இன்பங்களை முழுவதும் தவிர்க்காமல் அதே சமயத்தில் அதிலேயே மூழ்கி விடாமலும் இருக்கும் மனபக்குவத்தை பெற வேண்டும்.
ஸ்ரீ ரங்கமஹாகுரு தன் சீடர்களுக்கு சொற்பொழிவு, மற்றும் பாடங்களின் மூலம் உலக இன்பங்களை எவ்வாறு ஏற்க வேண்டும் என்றுரைத்தவற்றின் சுருக்கம் வருமாறு: - நாம் புலனின்பங்களை ஏற்காவிடின் இறைவனின் விருப்பத்திற்கு எதிராக பாவம் செய்தவராவோம். ஏனெனில் உடல் இறைவன் அளித்த செல்வம். அதனை அவன் விருப்பப்படி பயன்படுத்துதல் வேண்டும்.
- புலன் இன்பம் என்பது ஆன்மாவுடன் இணையும் யோகமார்க்கத்திற்கு எதிராக இருத்தல் கூடாது. - புலனின்பங்களே இறுதி குறிக்கோளல்ல. இவ்வின்பம் புலன்களின் தலைவனான இறைவனிடம் கொள்ளும் அன்புடன் நிறைவடைய வேண்டும். உண்மையான பற்றறுத்தல் என்பது புலனின்பங்களை சரியான முறையில் அனுபவித்து அதே சமயம் மனதை பற்றற்றிருக்க பழக்குதல் ஆகும். நீச்சல் கற்கும்வரை தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று கற இயலாது. தண்ணீரில் மூழ்கி-எழுந்து, மூழ்கி-எழுந்து நீச்சல் கற்க சிரமப்படுவது போன்றே, தினசரிவாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் மூழ்கி விடாமல் பற்றற்று இருக்க முயன்றால் இறைவன் அருளால் ஒரு நாள் அது நிறைவேறும். பலாபழத்தை உரிப்பவன் பிசிறு கையில் ஒட்டாமல் எண்ணை தடவி கொள்வதுபோல் மனதில் பக்தி எனும் எண்ணையை தடவிக்கொண்டு நம் அன்றாட பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும். அதுவே உண்மையான பற்றற்ற நிலை . சாதாரண பாமரர்களுக்கு பற்றறுத்தல் என்பது இன்பமற்று வறண்டது. ஆயின் உண்மையான பற்றற்றவர்க்கு பற்றின்மை என்பது மகிழ்ச்சி நிறைந்தது.