மூலம் ; மைதிலி
தமிழாக்கம்; வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)
முன்னொரு காலத்தில் ஒரு நகரத்தின் சுற்றியிருந்த கிராமங்களில் காலரா நோய் பரவியது. ஒரு மருத்துவர் மக்களுக்கு உடல்நலனைக் குறித்து அறிவுறுத்த வந்தார். அவர்களை குறித்து கூறினார் "நீங்கள் பருகும் குடிநீரில் நோய் பரப்பும் நுண்கிருமிகள் உள்ளன. எனவே தயவுசெய்து அந்நீரை பயன்படுத்த வேண்டாம்." ஒருவரை தவிர மற்ற அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அவன் "ஐயா நுண்கிருமிகள் இருப்பது உண் மையாயின் நம் கண்ணிற்கு புலப்பட வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நீர் அருந்துகையில் தொண்டையில் சிக்க வேண்டும். எனவே உங்கள் கூற்றை ஒப்ப இயலாது" என்றான். நுண் கிருமிகள் மிகவும் சிறியவை. எனவே புற கண்களால் காண இயலாது என மருத்துவர் எடுத்துரைத்தும் அந்த நபர் ஒப்புக்கொள்ளவில்லை.இறுதியில் மருத்துவர் சிறிது நீரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த நகரத்தின் சோதனை கூடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு நுண்ணோக்கியில் அந்நீரில் இருந்த கிருமிகளை காட்டினார். நுண்கிருமிகளை கண்ட அந்த நபர் வாயடைத்து நின்றார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீரங்கமஹாகுரு ஒரு பாடத்தை நமக்கு உணர்த்தினார். கண்ணாடியை தகுந்தபடி தேய்த்து பக்குவப்படுத்தினால் நுண்ணோக்கியாக மாறும் அதன் மூலம் நம் கண்களால் காண இயலாத மிக நுண்ணியவற்றையும் காணலாம். அதே போன்றே நம் மனதை சரியான ஆன்மீக பாதையில் செலுத்தினால் நுண்ணோக்கியை போன்றே கண்ணிற்கு புலப்படாத பரம்பொருளை காணும் தகுதியை பெறும்.
பண்டைய முனிவர்கள் வகுத்த கல்விமுறை இந்நிலையை வெற்றிகரமாக அடைய வழிவகுத்தது. சிறு வயதிலேயே ப்ரம்மசரியத்தை அனுசரித்து, தகுந்த குருவின் வழிகாட்டலின்படி வேதசாஸ்திரங்களை கற்று, தவத்தின் மூலம் உள் ஒளிரும் பரம்பொருளை உணர்ந்து மகிழ்ந்தனர். பின் குருவின் கட்டளைப்படி இல் வாழ்க்கையை ஏற்று தாங்கள் பெற்ற இறை அனுபவத்தை வெற்றிகரமாக பரப்பினர்.
தற்காலத்தில் இத்தகு கல்விமறை காணப்படாவிடினும் முனிவர்கள் ஆசீர்வதித்து வகுத்த ஸ்தோத்திரங்கள், பூஜைகள் முதலானவற்றை கவனத்துடன் பின்பற்றுவதன்மூலம் மனதை தூய்மையாக்கலாம்.
இது மனதை பரம்பொருளை உணர்ந்து மகிழ பக்குவப்படுத்தும்.