Thursday, June 17, 2021

வேர் உச்சியில், கிளைகள் கீழே - இது எந்த மரம்? (ver uchchiyil kilaigal kizhe – idi enda maram)

மூலம்: சுப்ரமண்ய சோமயாஜி

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)





              கிளைகள் மேலேயும் வேர்கள் அடியிலும் உள்ள மரங்கள் சாதாரணமாக காணப்படுபவை. பகவத்கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுகிறார்:


ஊர்த்வமூலம் அத சாகம் அச்வத்தம் ப்ராஹுரவ்யயம் |

சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத  வேதவித் ||


பொருள் வேர்கள் உச்சியிலும்  கிளைகள் கீழேயும் காணப்படும் அழாவற்ற ஒரு அரசமரம் உள்ளது. வேதங்களே அதன் இலைகள். இம்மரத்தைப்பற்றி அறிந்தவனே வேதத்தை கரைகண்டவன் ஆவான்.


           ஒருமுறை ஸ்ரீ ரங்கமஹாகுரு குழுமியிருந்த சீடர்களை நோக்கி யாரேனும் அத்தகைய மரத்தை கண்டதுண்டா என வினவினார். ஒருவரும் பதிலளிக்கவில்லை. அவர் தொடர்ந்து அத்தகைய மரங்கள் அங்கேயே இருப்பதாக கூறினார். குழப்பமடைந்த சீடர்களிடமிருந்து மீண்டும் பதில் வராததால் அவரவர்களுடைய(மனித) உடல்களே அந்த மரங்கள் என விவரிக்க தலைப்பட்டார்.

            நம் உடலில்  உச்சியில் கிரீடத்திற்குள் (தலைக்குள்) உள்ள மூளையே வேர். கண், காது (முதலிய (ஞானேந்திரியங்களும்) கரங்கள்கால்கள் முதலிய கர்மேந்திரியங்களும்  கிளைகள். மூளையின் கட்டளைபடி அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன.  மூளை இல்லாவிடில் உறுப்புகள் செயலிழந்து விடும். மூளையே நம் கடவுள். அதன் கட்டளைப்படி வாழ்கிறோம். அதனை வலிமையாக வைத்துக்கொண்டால் நம்வாழ்வு இன்பமாக விளங்கும்.


     

 சில சமயங்களில் சில மரங்களில் வேரும் தண்டும் ஒருவிதமாகவும் கிளைகளும் இலைகளும் வேறு விதமாகவும் காணப்படும். உதாரணமாக வேரும் தண்டும் மாமரத்தினுடையதாகவும்கிளைகளும்இலைகளும் வேப்பமரத்தினுடையதாகவும் காணப்படும்.  ஒரு முகமூடியணிந்த ஒட்டுண்ணி  அசல் மரத்தின் சாரை உறிஞ்ஜி வளர்ந்திருக்கும்.  ஒட்டுண்ணியின் வளர்ச்சி இயற்கைக்கும்வளர்த்தவனின் நோக்கத்திற்கும் எதிரானது. கவனத்துடன் உள்ள  ஒரு விவசாயி ஒட்டுண்ணியின் வளர்ச்சியை தடுத்து மரத்தை காப்பான். விவசாயத்தை பற்றி அறியாதவன் ஒட்டுண்ணியின் பழங்களையே அசல் மரத்தின்  பழங்களாக கருதுவான்.


          நம் வாழ்க்கையில், கடவுள்  விதையும் வேரும்(மனித உடல்) அளித்ததன் நோக்கம் நம் முறையற்ற விவசாயத்தால் மீறப்படுகிறது.  எனவே வளர்ச்சி அவன் விருப்பப்படியில்லை. மாறாக அசலான மரம் அளிக்கும் எல்லையற்ற இன்பத்தையும்,  அமைதியையும்  ருசிப்பதற்கு பதில் ஒட்டுண்ணி அளிக்கும் பழங்களை ருசித்து நம்மையே  ஏமாற்றிக்கொள்கிறோம். நம் ஞானிகளின் கூற்று  "இம்மரத்தை(மனிதஉடலை) சரியான முறையில்  வளர்த்தால் இறுதியான பலனை இங்கேயேஇப்போதேஇப்பிறவியிலேயே சுவைக்க இயலும்".


         நமது நாட்டின்  கலாசாரமும்,  நாகரீகமும் மனித மனத்திற்குள்ள தகுதி இயற்கையாக பூத்து பழமளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டதென மறவாதிருப்போம். நம் முனிவர்கள் வாழ்க்கை-விவசாயத்தில் கரை கண்டவர்கள்.  நமக்கு பலவகையான தூய்மைபடுத்தும் சடங்குகள்(ஸம்ஸ்காரங்கள்) வழிபாட்டு முறைகள்ஹோமங்கள்ஆலய வழிபாட்டு முறைகள்புனித தலங்கள்புண்ய நதிகள் போன்றவற்றை வழங்கியுள்ளனர்இவையும் வேறு பலவகையான வழக்கங்களும் நம் வாழ்வெனும்  பயிறை நன்கு வளர்த்து, பராமரித்து, உயர்ந்த மரமாக்கி இவ்வுலக சுகங்களையும் இறுதியான பரவச நிலையையும் அடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  அனைத்து உயிரினங்களிடமும்  அவர்கள் கொண்ட அளப்பரிய அன்பை மறக்க இயலாது.

              


வேதங்கள் நமக்கு கற்பிப்பது யாதெனில்   அகிலாண்டத்தையும் அதன்  நுணுக்க வடிவமாகிய நம் உடலையும் நம் உள்நோக்கிய(அந்தரங்க) அநுபவத்தால் இவ்வுடலிலேயே உணர இயலும்.  அத்தகு அநுபவத்தை வளர்த்துக்கொண்டால் மட்டுமே நம் அகபுற வாழ்வு நிறைவானதாகும். இதுவே வாழ்வெனும் மரத்தின் இறுதியான பழமாகும். "வேர்கள் உச்சியிலும்கிளைகள் கீழும் உள்ள இம்மரத்தைக்குறித்து முற்றிலும் அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன்"

இறைவனின் இச்சொற்கள் பொருள் நிறைந்ததன்றோ?


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.