Sunday, December 29, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 50 (Sriranga Mahaguru - 50)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 39

குயவனுக்கு வருடம்  கொம்புக்கு நிமிடம்
===========================================================
மூலம்: வரததேசிகாசார்யர் 
தமிழாக்கம்: ஜானகி



அனைவருக்கும் நீராட உதவும் வண்ணம் நல்ல மனம் படைத்த பலரும் ஒன்று கூடி ஆற்றங்கரையில் படிக்கட்டுகளை கட்டுவித்தனர்.அவ்வாறு கட்ட சில வருடங்கள் ஆயிற்று.அது நூற்றுக்கணக்கானோரின் நல்ல உள்ளம்,பணம்,உடல் உழைப்பு, புத்தியினால் உருவானது.

மழை பெய்ததால் அப்படிக்கட்டுகளின் சில இடங்களில் சேறும் சகதியும் ஆயிற்று.மாலை வேளையில் அங்கு நடமாட வந்த சிலர் அதை கவனியாமல் மிதித்து வழுக்கி விழுந்தனர்.அது கவலைப்பட வேண்டிய ஓர் விஷயம் என்பது சரி.ஆனால் அதற்கும் மீறி கவலைப்படும் ஓர் நிகழ்வு அங்கு நடந்தேறியது.

வழுக்கி விழுந்த சிலர் கோபம் கொண்டு ஒன்று கூடினர்.இப்படிக்கட்டுகளினால் வழுக்கி விழுந்து இன்னும் பலருக்கு கால்முறிவு,அல்லது உயிர் நீங்குவதும் ஏற்பட வாய்ப்பு உண்டு.எனவே படிக்கட்டுகளே தேவையில்லை என உடைத்து எறிந்தனர் . அவ்விடத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டும் பணியையும் மேற்கொள்ளவில்லை.படிக்களில்லாத அவ்விடத்தில் வேறு சிலர்  இறங்கி ஆற்றில் விழுந்து ஆபத்துக்குள்ளாயினர்.

ஆலயம்,தர்மசத்திரம், மருத்துவமனை முதலிய நிறுவனங்களையும் கட்டிடங்களையும் இடித்து தள்ள வேண்டும் என கிளம்புவர்கள் மேற்கூறிய கதையினால் பாடம் கற்க வேண்டும்.அவைகளை அழிப்பது மிகவும் சுலபம்.ஆனால் கட்டுவது மிகவும் கடினம்.கோவத்தில் வெட்டப்பட்ட மூக்கு அமைதியில் மீண்டும் வருவதில்லை."குயவனுக்கு வருடம், கொம்புக்கு நிமிடம்" எனும் பழமொழி இதையே உணர்த்துகிறது.உலக நன்மைக்கு பயன்படும் அந்நிறுவனங்களில் ஏதாவது பாகங்கள் பழுது அடைந்தாலும் அதை சீர் செய்பவர்கள்தான் விவேகிகள்.
                  
                           (அடுத்த வியாழனன்று தொடரும்)